இசை - ரெட்ரோ மெல்லிசை - KJY for MGR


RetroMusic - II

SPB/KJY for MGR
~
"விழியே கதை எழுது .... கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் காற்று
உனக்காகவே நான் வாழ்கிறேன்.."
~
இந்த பாடலை மறக்க முடியுமா ? தமிழில் கே.ஜெ. ஜேசுதாஸ் பாடிய இனிய பாடல்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் இந்த பாடலை விட்டு விட தான் முடியுமா ?

ஒருமுறை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் சில பழைய பாடல்களில் முக்கியமான ஒரு பாடல் இது.

எம் ஜி ஆர் தன்னை என்றும் இளமையாக தமிழ் திரையில் இருத்திக் கொள்ள புதிய இளம் பாடகர்களை அவ்வப்போது தனக்காக பின்னணி பாட வைப்பார் என்று ஒரு கூற்றை சமீபத்தில் கேட்டேன். எது எப்படியோ ? யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய பாடல்கள் எதுவுமே சோடை போனதில்லை.

1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக பாடிய "தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகே..." பாடல் தான் எம்ஜிஆருக்காக யேசுதாஸ் பாடிய முதல் பாடலாக இருக்கக்கூடும். அந்த படத்தில் அத்தனை பாடல்களுமே ஹிட். இந்தப்பாடலும், SPB பாடிய "அவள் ஒரு நவரச நாடகம்..." பாடலும் வித்தியாசமான, இனிமையான குரலிசைக்காக இன்னமும் நினைவுகூரப்படுகின்ற பாடல்கள்.

இதன் பிறகு வந்தது தான் "விழியே கதை எழுது...." உரிமைக்குரல் பாடல். அற்புதமான மெலடி அது. என் இரவு நேர உறங்கும்பொழுதில் கேட்கும் பாடல்களில் ஒன்று.

நாளை நமதே படத்தில் இடம்பெற்ற

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது....

என்னை விட்டால் யாருமில்லை....

போன்ற பாடல்களும் எம்ஜிஆருக்கு கரெக்ட்டாக மெலடி டூயட் பாடுவதற்கேற்ற இனிமையான குரலாக யேசுதாஸ் குரலை செட் செய்தது.

அதன் பிறகு வெளிவந்த எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் யேசுதாஸின் குரலில் ஒரு பாடல் அமைவது வாடிக்கையாயிற்று.

பல்லாண்டு வாழ்க படத்தில் இடம்பெற்ற

ஒன்றே குலம் என்று பாடுவோம்

போய் வா நதியலையே...

என்ன சுகம்..என்ன சுகம்...

ஊருக்கு உழைப்பவன் படத்தில் ....

அழகென்னும் ஓவியம் இங்கே...

இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்...

பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்...

மேலும்...

நாளை உலகை ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்

அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க

தங்கத்தில் முகமெடுத்து - மீனவ நண்பன்

தென்றலில் ஆடும் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

என்று வரிசையாக பாடல்கள் பாடி, தான் பாடிய அத்தனை பாடல்களையும் ஹிட் ஆக்கினார்.

எம்ஜிஆர் பல விஷயங்களில் தமிழ் பட உலகில் முன்னோடியாக திகழ்ந்தார் என்று கூறுவர்.அவரின் படங்களில் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் கவனம் செலுத்தி தன் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை கச்சிதமான பேக்கேஜில் படமாக தருவார் என்று சொல்வார்கள்.

அவர் தந்த அந்த கச்சிதமான பேக்கேஜில் இருந்த அதிசுவையான சாக்லேட்டுகள் தான் யேசுதாஸ்/SPB பாடிய பாடல்கள்.

சுவைத்தபின்னும் நாவில் சுவை இருந்துகொண்டே தான் இருக்கிறது இன்னமும்.

வாழ்க MGR

❤️

Comments