அஞ்சலி - புரட்சித்தலைவர்

தலைவர்

புரட்சித்தலைவர்

~
MGR படம்லாம் அவ்ளவா பார்த்ததில்ல. நான் படிக்கிற காலத்துல அவர் சி எம் ஆகிட்டாரு. நான் பார்த்தது எல்லாம் உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், நீதிக்கு தலைவணங்கு, இதயக்கனி, மீனவ நண்பன், ம.மீ.சு.பாண்டியன் மாதிரி படங்கள் தான்.  

ஆனாலும் MGR ஐ ரொம்பவே பிடிக்கும். 
~

அவருக்கு இருந்த அந்த மக்கள் செல்வாக்கை பார்த்து பிரம்மித்திருக்கிறேன்.

அப்போல்லாம் மன்னார்குடி தேரடி திடலில் பெரிய தலைவர்களின்  கூட்டங்கள் நடக்கும். MGR பொதுக் கூட்டம் என்றால் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வரும். இரவு ஒன்பது மணிலேர்ந்து MGR இதோ வருகிறார் வந்து கொண்டே இருக்கிறார் என்ற அன்னவுன்ஸ்மெண்ட் மட்டும் வந்துகிட்டேயிருக்கும். அவர் நள்ளிரவு தாண்டி தான் வருவார். அதுவரை கூட்டம் மந்திரித்து விட்ட மாதிரி அங்கேயே இருக்கும்.

மேடைப் படிகளில் தாவி ஏறுவார். இரட்டை விரல்களை கூட்டத்தை சுற்றி சுற்றி உயர்த்திக் காட்டுவார். சத்தம் காது கிழியும். விசில் பறக்கும்.
~
சாமானிய மக்கள் அவர் மேல் வைத்திருந்த அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 

எங்கள் வீட்டில் வேலை செய்த சந்தானம் அம்மாள் கணவனை விட்டு பிரிந்தவர். ஐயங்கார் மாமி.  நாலு வீட்டில் வேலை செய்து தனது பெண்ணை படிக்க வைத்துக் கொண்டு தானும் வாழ்ந்து வந்தவர். MGR படங்கள் எந்த தியேட்டரில் வந்தாலும் மாலைக்காட்சிக்கு போய்விடுவார். MGR என்றால் அவருக்கு தெய்வம். 

அதுபோல் ராஜேந்திரன் என்றொரு கோனார். காலை ஐந்து மணிக்கு MGR பாடல்களை சத்தமாக பாடிக்கொண்டே சைக்கிளில் வருவார். சைக்கிளின் முன்புறம் அதிமுக கொடி பறக்கும். வரதராஜ் நைனா வீட்டு மாடுகளுக்கு பால் கறக்கும்போதும் MGR பாடல்களை பாடிக்கொண்டு தான் பால் கறப்பார். வரதராஜ் நைனா தீவிர திமுக. இரண்டு பேருக்கும் தமாஷாய் காலையிலேயே வார்த்தை விளையாட்டு தொடங்கி விடும். ராஜேந்திர கோனார் தனது  உலகில் எல்லாமே MGR ஐ கனெக்ட் செய்தபடி இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.

என்ன மாதிரியான ஒரு பற்று பந்தம் இது, சாதி மதம் கடந்து. 
~

அக்காலத்தில் MGR ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரித்தார். நான் MGR ஐ ஆதரித்தேன். அவர் பிரபாகரனிடம் அன்பாக இருந்தார். என் ஹீரோ அப்போது பிரபாகரன். அதனால் நான் MGR மேல் அன்பாக இருந்தேன். அவர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அவர் மீதான என் மதிப்பு கூடியது. 

இன்றைய மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றுக்கு அவர் தான் முன்னோடி.
~

அவர் மீதான அவர் பக்தர்களின் அந்த பிணைப்பு நடிகர்-ரசிகர், தலைவர்-தொண்டர், ஆட்சியாளர்-மக்கள் ஆகியவற்றை எல்லாம்  தாண்டியது.

சிவாஜிக்கு இருப்பவர்கள் ரசிகர்கள். MGR க்கு இருப்பது பக்தர்கள் என்று ஒருமுறை என் தமிழாசிரியர் வெங்கட்ராமன் சொன்னார். 100%  உண்மையான வார்த்தைகள் அவை.
~

MGR மறைந்த அன்று ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவர் உடலைக் காண நானும் அகாலமாய் சமீபத்தில் மறைந்த நண்பன் சன் டிவி வார்த்தை விளையாட்டு புகழ் ஆனந்தகீதனும் கருஞ்சட்டை அணிந்து கோடம்பாக்கத்தில் இருந்து  நடந்து சென்று வந்தோம். 

அழுது கொண்டே அலை அலையாய் கூட்டம். இவர்களுக்கெல்லாம் அவர் யார்? எதற்காக குமுறி அழுகிறார்கள்? மொட்டை அடித்துக் கொள்ளுமளவுக்கு என்ன மாதிரியான பந்தம் இது? வியந்து போனேன்.

திரும்பி வரும்போது MGR படத்தை போட்டு சென்னை நகர் முழுக்க தினமலர் நாளிதழ்  ஒட்டியிருந்த போஸ்டர் அதற்கான விடையை சொன்னது :

"பிறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
~

தலைமுறைகள் கடந்தும் இன்றும் மக்கள் மனதை ஆள்கிறார்.

புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாளில் அவரை வணங்கி அவர் நினைவைப் போற்றுகிறேன்.
~
Pic courtesy: Jeeva Nanthan sir.

Comments

Post a Comment