இசை - ரெட்ரோ மெல்லிசை - SPB for MGR


RetroMusic - I

SPB/KJY for MGR

"இதழே இதழே தேன் வேண்டும்..." 

எம்ஜிஆர் காதல் பாடல்களில் சும்மாவே ரொமான்ஸ் தூக்கலா இருக்கும். இந்தப்பாடலை பாடியிருப்பது SPB வேறு. கேட்கணுமா என்ன..? 

எம்ஜிஆர் படங்களில் பெரும்பாலான பாடல்களை அவருக்காக பாடியிருப்பது TMS தான். 

TMS எம்ஜிஆருக்கு ஒரு மாதிரியும் சிவாஜிக்கு ஒரு மாதிரியாகவும் குரலை மாற்றி வித்தியாசமாக பாடக்கூடியவர் என்று சொல்வதுண்டு. ஆனால் எனக்கென்னவோ அவர் பாடுகின்ற  பாடலை வைத்து அவ்வாறெல்லாம் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. அது என் குறை தான் போலும். 

எல்லா பாடல்களும்  ஒரே மாதிரி தான் என் காதுக்கு கேட்கிறது.

சரி, மேட்டருக்கு வருவோம். TMS நிறைய பாடியிருந்தாலும், எம்ஜிஆரின் பிற்கால சினிமாக்களில் அவ்வப்போது SPB, ஜேசுதாஸ், போன்றோரும் பாடியிருக்கிறார்கள்.

அவைகளும் எம்ஜிஆரின் பிற பாடல்களை போலவே சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. அவர்கள் பாடிய பெரும்பான்மையான பாடல்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மிகவும் ரசித்திருக்கிறேன்.

இன்று கூட இந்த பதிவை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது தற்செயலாக பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நான் கேட்க நேர்ந்த "இதழே..இதழே..."  இதயக்கனி பாடல் தான். 

"ஆயிரம் நிலவே வா..." ...... MGR நடித்த 1969ம் வருடத்திய அடிமைப்பெண் படத்து பாடலில் ஆரம்பித்தது SPB யின் தமிழ் திரையுலக வாழ்க்கை. 

சில பேர் "சாந்தி நிலையம்" படத்தின் "இயற்கை என்னும் இளைய கன்னி.." பாடல் தான் முதல் என்றும் கூறுகிறார்கள். 

அதன் பின்னர் MGR நடித்த கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலையாவது SPB பாடிவிடுவார். 

ஏற்கனவே செம ரொமான்ஸ் காடசியாய் விரியும் MGRன் காதல் பாடல்கள் SPB யின் சாக்லேட் குரலின் குழைவில், திரையில்  பார்க்கும் நம்மை எங்கெங்கோ இழுத்து சென்று விடும். 

அதற்கு உதாரணம் தான் "இதழே.. இதழே.. தேன் வேண்டும். 

"அவள் ஒரு நவரச நாடகம்..." இன்னொரு அற்புதம். 

......ஆனந்த கவிதையின்  ஆலயம். 
தழுவிடும் இனங்களில் மான் இனம். 
தமிழும் அவளும் ஓர் இனம். 

எப்படி கொண்டு வந்து முடிக்கிறார் பாருங்கள் கவிஞர். 😜
~

அங்கே வருவது யாரோ...

பாடும்போது நான் தென்றல் காற்று...

நேரம்.. பௌர்ணமி நேரம்...

பொங்கும் கடலோசை... 

என்று SPB யை வைத்துக் கொண்டு வரிசையாக ரவுண்டு கட்டி அடித்தார் MGR.

இதெல்லாம் பயங்கரமாக ஹிட் ஆக, தன் படங்களில் SPB, யேசுதாஸ் ஆகியோருக்கு தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வழங்குமாறு பார்த்துக்கொண்டார் MGR. 

அவர் எண்ணியது போலவே, அப்போதைய இளைய தலைமுறை பாடகர்களான SPB , யேசுதாஸ் ஆகியோர் அவருக்காக பாடிய பாடல்கள் மென்மையான மெலடியாக அமைந்ததுடன்  செமையாக ஹிட் ஆகின ரசிகர்களிடம். 
~
 யேசுதாஸ் MGR க்காக பாடிய பாடல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
~

Comments