நினைவலைகள் - வாழ்க்கை - ஜீவிதம்


நினைவலைகள்

வாழ்க்கை - ஜீவிதம் 


ஒரு மார்கழி மாத ஹனுமத் ஜெயந்தி நாள் அன்று தான் மன்னார்குடி கீழராஜவீதி தெற்கு பார்த்த ஆஞ்சனேயர் கோவிலில் எனக்கு திருமணம் ஆக என் பாட்டி வேண்டிக் கொண்டு வந்தார்.

அன்று மதியமே என் மாமனார் தன் மகளுக்கு என்னை சம்பந்தம் பேச விஜயவாடாவில் இருந்து மன்னார்குடிக்கு என் மாமியாருடன் வந்தார்.

சம்பிரதாயமாக ஜாதகம் கொடுத்துவிட்டு நான் ஜாதகம் பார்ப்பதில்லை,  உங்களுக்கு வேண்டுமானால்  நீங்கள் பொருத்தம் பார்த்து முடிவு சொல்லுங்கள் என்றார்.

இது ஆஞ்சனேயர் அனுக்கிரஹம். மனப்பொருத்தம் இருக்கும்போது ஜாதக பொருத்தங்கள் எதற்கு..? நாங்களும் பார்க்கப்போவதில்லை என்று சட்டென்று என் பாட்டி சொல்லிவிட்டார். 

இத்தனைக்கும் பாட்டி ஆச்சாரசீலர். 

திருமணம் நிச்சயம் ஆயிற்று.

விஜயவாடாவில் திருமணம். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. ஏதாவது ஒரு கோவிலில் இருந்து மாப்பிள்ளையை காரில் அழைத்துக் கொண்டு கல்யாண மண்டபம் வரவேண்டும். 

எனக்கு தேர்வு செய்த கோவிலை பார்த்ததும் ஆச்சரியம். 

ஆஞ்சநேயர் கோவில் அது.

திருமணம் முடிந்தது. இரண்டு மகன்கள். என் வாழ்க்கை நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை. 

வருத்தங்கள் ஏதுமில்லை. 
~

என் மீது அதீத பாசத்துடன் இருந்த என் மாமனார் கடைசி வரை தன் மகனாவே என்னை  எண்ணினார். 

நான்கு பெண்களை பெற்று, வளர்த்து,  திருமணம் செய்து கொடுத்து,  பேரன் பேத்திகள் வளர்க்கும் பேறு பெற்று, மூத்த மகள் வயிற்று பேரன் பேத்திகளின் திருமணத்தை கண்ணார கண்டு வாழ்வாங்கு வாழ்ந்த என் மாமனார் .... 

ஹனுமத் ஜெயந்தி அன்று தான் அவருக்கு ரொம்பவும் பிடித்த என் இல்லத்தில் தனது 78 வது வயதில் காலமானார்.
~

ஜெய் ஸ்ரீராம்


Comments