AWE - 2018 (Telugu)
சினிமா
~
AWE - 2018 (Telugu)
சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" புதினத்தை படித்தேன். ஆழ்ந்து படிக்கவேண்டிய ஒரு புத்தகம் என்பதை அதை படித்தவர்கள் அறிவார்கள். தமிழ் நாவல் உலகில் அதற்கு முன் அப்படி ஒரு படைப்பை வேறு எவருமே படைத்திருக்கவில்லை.
முதல் முறை படிக்கும்போது மிகவும் குழப்பமடைந்தேன். காலவரிசை மாறுதல்களையும் தொடர்புத்தன்மை நிறைய மிஸ் ஆவதையும் உணர்ந்தேன்.
பின்னர் அந்த நாவலை எப்படி படிக்கவேண்டும் என்று நண்பர் ஒருவர் என்னிடம் விளக்கினார். அதன்படி படித்தேன். என்னுடைய குழப்பங்கள் தீர்ந்தது.
நிஜமாகவே சொல்கிறேன் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் "விஷ்ணுபுரம்" போல் ஒரு சிறந்த புத்தகத்தை அதற்கு முன்னும் படித்ததில்லை. பின்னும் படித்ததில்லை.
இதெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஓக்கே.
~
"ஆ" (AWE) படத்துக்கு வருகிறேன்.
நான் கதையை பற்றி இப்போது ஏதும் கூறப்போவதில்லை. இருந்தாலும் ஒரு சின்ன அவுட்லைன் மட்டும் கொடுக்கிறேன்.
நகரின் மையமான பகுதியில் ஒரு ஃபுட் கோர்ட். அந்த ஃபுட் கோர்ட்டில் இரண்டு ரெஸ்டாரண்ட்கள், காபி ஷாப், பேக்கரி, ஒரு சிறிய நூலகத்துடன் கூடிய பொழுதுபோக்கு தளம், ஆகியவை அமைந்திருக்கும்.
அந்த புட்கோர்ட் அமைந்திருக்கும் இடம் அதன் உரிமையாளரை மிரட்டி பறிக்கப்பட்ட ஒரு இடம். பாரம்பரியமாக வாழ்ந்தவர்கள் இருந்த ஒரு பங்களா.
அது அப்படியே இருக்கட்டும்.
ஃபுட்கோர்ட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதை நடந்துகொண்டிருப்பதாக படம் நகரும்.
ஃபுட் கோர்ட்டுக்கு வெளியே இன்னொரு இடத்தில் தற்கொலை செய்யும் முடிவுடன் வரும் இளம்பெண் ஒருவர் ஒரு ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்து பிறந்த நாள் கேக் ஆர்டர் செய்கிறார்.
அவர் கைப்பையில் ரிவால்வர்.
ஃபுட் கோர்ட்டில் நடைபெறும் கதைகளில் வரும் சம்பவங்களின் மத்தியில் இந்த தற்கொலை பெண்ணின் தவிப்புகளும் இடையிடையே காட்டப்படுகிறது.
புட்கோர்ட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் சம்பவங்கள் மெதுமெதுவே நகர்ந்து படத்தின் உச்சகட்டத்தை நோக்கி கதைமாந்தர்களை அழைத்து செல்கிறது.
கேக் ஆர்டர் செய்த பெண் மிக குழப்பமான மன நிலையில் இருக்கிறார். வெயிட்டரை அருகில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கேக் மெழுகுவர்த்தியை ஊத் அணைத்து கைப்பையில் உள்ள மொத்த பணத்தையும் அவனுக்கு டிப்ஸ் ஆக கொடுக்கிறார்.
அவன் நகர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த நோட்டு புத்தகத்தை மேசையின் மேல் வைக்கிறார். வெயிட்டர் கொடுத்த அப்ரைஸல் படிவத்தில் Going to do mass murder என்று எழுதி கைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்.
ஃபுட்கோர்ட்டில் நடபெறும் கதைகளில் வரும் மாந்தர்களும் ஒவ்வொருவராக கீழே விழுந்து சாகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் நோட்டுப் புத்தகங்கள் காற்றில் ஒவ்வொரு பக்கமாக பறக்கின்றன.
ஒவ்வொரு பக்கத்திலும் நிறைய சித்திரங்கள் மற்றும் கிறுக்கல்கள்.
ஒரு பக்கத்தில் Multiple Personality Disorder என்று சிகப்பு மையில் எழுதப்பட்டிருக்கிறது.
படம் முடிகிறது.
~
படத்தின் மிக சிறப்பான பகுதி அந்த கடைசி 15 நிமிடங்கள். படம் பார்ப்பவர்களை படம் முடிந்து ரொம்ப நேரம் யோசிக்கவைக்கும் க்ளைமாக்ஸ் அது. முதலில் ஒன்றுமே புரியாதது போல இருக்கும் அந்த காட்சியை மெதுவாக ரீவைண்ட் செய்து யோசிக்கும்போது அவிழும் முடிச்சுகள்... அப்பப்பா.. அது ஒரு உணர்வு.
இப்போது மறுபடியும் விஷ்ணுபுரத்துக்கு வருகிறேன்.
எப்படி வாசிக்கவேண்டும் என்று எனக்கு நண்பர் ஒரு உத்தியை சொல்லிக் கொடுத்தார் அல்லவா..?
அது என்னவென்றால் மணிமுடி, கௌஸ்துபம், ஸ்ரீபாதம் என்று மொத்தம் மூன்று பாகமாக இருக்கும் விஷ்ணுபுரத்தை கௌஸ்துபம், மணிமுடி, ஸ்ரீபாதம் என்னும் வரிசையில் படித்தால் எளிதாக இருக்கும் என்பது.
அதுபோல் "ஆ" படத்தின் க்ளைமேக்ஸை பார்த்துவிட்டு படத்தின் ஆரம்பத்தில் வரும் கார்ட்டூன் படங்கள் அடங்கிய டைட்டிலை மறுபடியும் பார்க்கும்போது படத்தின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வது எளிதாக புரியும்.
ஒரே இடத்தில் நடைபெறும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கதைகளை படத்தின் இறுதியில் ஒரு மையப்புள்ளியில் அழகாக இணைத்திருப்பார் இயக்குனர்.
சூப்பர் டீலக்ஸில் தியாகராஜன் குமாரராஜா கோட்டைவிட்ட இடம் அது.
~
படத்தின் சிறப்பான அத்தனை டெக்னிக்கல் அம்சங்களையும் இயக்குனரின் கதை சொல்லிய உத்தி விஞ்சி விடுவிறது.
படத்தின் இயக்குனர் பிரஷாந்த் வர்மா இந்திய திரைத்துறையில் புத்திசாலித்தனமான குறிப்பிடத்தகுந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.
உலக படங்களின் வரிசையில் "ஆ" (AWE ) வை கண்டிப்பாக சேர்க்கலாம்.
"ஆ" - வாவ்.
வேற லெவல் சினிமா இது.
~
சுபம்


செம்ம்ம்ம சார். ����
ReplyDeleteநன்றி மோகன். உங்கள் பிளாக்கில் இந்த படத்தின் ரிவியூவை பார்த்தே இந்தப் படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. உங்கள் ப்ளாக்கில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களை தான் இந்த லாக் டவுன் காலத்தில் பார்த்து வருகிறேன். சிறந்த படங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் பணிக்கு மிக்க நன்றி. ��
ReplyDelete