அஸ்வத்தாமன் - 9

அஸ்வத்தாமன் 

(தொடர்ச்சி...9)

ர்ஜுனனின் சபதம் என்ன ஆயிற்று ?

ஜயத்ரதனை சூரிய அஸ்தமனத்திற்குள் அர்ஜுனன் கொன்றானா ? 

பார்க்கலாம்....
~
சூரியன்  மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்ரதனை காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர். ஜயத்ரதனை வெளியே வரழைக்க யுக்தி  செய்யும் கிருஷ்ணன் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனை தற்காலிகமாக மறைக்க வைக்கிறார். இருள் சூழத் துவங்குகிறது.

சூரியன் மறைந்துவிட்டான் என்று   வெற்றிக்களிப்புடன் ஜயத்ரதன் மறைவிடத்தில் இருந்து வெளியே வருகிறான். கிருஷ்ணன் தனது சுதர்சன சக்கரத்தை இப்போது விலக்கி கொள்கிறார்.  பகல்பொழுது மீள்கிறது. சரியாக அந்த நேரம் பார்த்து அர்ஜுனன் விடும் அம்பு ஒன்று ஜயத்ரதன் தலையை கொய்து தன்னோடு எடுத்துக் கொண்டு வானில் வேகமாகப் பறந்து செல்கிறது.

ஜயத்ரதன் தலையை யார் வீழ்த்தி தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று ஜயத்ரதனின் தந்தை வரம் ஒன்று பெற்றிருந்தார். 

கிருஷ்ணனின் அறிவுரைப்படி செயல்பட்ட அர்ஜுனன் அந்த தலையை சுமந்து செல்லும் அம்பின் பின் வரிசையாக மூன்று அம்புகளை செலுத்தி குருசேத்திரத்துக்கு வெளியே பர்ணசாலை அமைத்து வாழ்ந்து வரும் ஜயத்ரதனின்  தந்தை மடிமேல் அவனின் தலையை விழ வைக்கிறான். 

மடிமீது விழுந்த மகனின் தலையைக் கண்டு  துணுக்குற்று அதனை உதறி கீழே தள்ளுகிறார் ஜயத்ரதனின் தந்தை.

அடுத்த நொடி  பெற்றிருந்த வரத்தின்படி ஜயத்ரதனின் தந்தை தலை சுக்கு நூறாக உடைகிறது. 

என்னதான் துர்க்குணங்கள் நிறைந்திருந்தாலும் பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர அனைவரையும் வென்ற  மாவீரன் என்ற புகழுடன் வீர சொர்க்கம் அடைகிறான் ஜயத்ரதன்.
~
சூழ்ச்சியால் ஜயத்ரதனை கொன்றதை அறிந்து  கோபமடைந்த துரியோதனன் போரை இரவிலும் தொடர ஆணையிடுகிறான். பதினான்காம் நாள் போர் இரவிலும் தொடருகிறது. 

பிதாமகர் பீஷ்மரால் வகுத்துக் கொடுக்கப்பட்ட யுத்த தர்மங்கள் இரண்டு அணியினராலும் சகட்டுமேனிக்கு மீறப்பட ஆரம்பிக்கிறது. 
~

போரில் கௌரவ படைக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த பீமனின் மகன் கடோதகஜனை கர்ணன் தனது சக்தி ஆயுதத்தை செலுத்தி கொல்கிறான். 
~

பதினைந்தாம் நாள் போரில் பாண்டவர் அணியில் பாஞ்சால நாட்டு மன்னனும், தனது எதிரியும், துரோகியுமான துருபதன் போரிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த துரோணர்  கோபத்தோடு அவனுடன் மோதுகிறார்.  துருபதனையும், துருபதனுக்கு துணையாக போரிட்டுக் கொண்டிருந்த மத்சய தேச மன்னன் விராடனையும் கொல்கிறார்.

ஆயிரக்கணக்கான பாண்டவ  வீரர்கள் துரோணர் தலைமையிலான கௌரவ படையினரால் கொல்லப்படுகின்றனர். பாண்டவர்கள் தரப்பில் கடுமையான இழப்புகள் ஏற்படுகின்றன. 

துரோணர் இருக்கும்வரை பாண்டவர்கள் வெல்வது கடினம் என்பதை கிருஷ்ணன் உணர்ந்து கொள்கிறார். துரோணரை போரில் நேரடியாக கொல்ல யாராலும் முடியாது, அவரை தந்திரமாகத் தான் வீழ்த்த முடியும் என்பது தெரிந்த கிருஷ்ணன் மறுபடியும் ஒரு யுக்தி செய்கிறார். 

தனது மகன் அஸ்வத்தாமன் மீது துரோணர் கொண்டுள்ள பாசம் கிருஷ்ணரின் மனத்திரையில் ஓடுகிறது. 
~

பீமனைக் கூப்பிட்டு யானைப்படையில் போரிட்டுக் கொண்டிருந்த அஸ்வத்தாமா என்னும் யானையை கொல்ல பணிக்கிறார் கிருஷ்ணன். அவனும் அஸ்வத்தாமா என்னும் யானையை கொன்று கிருஷ்ணனிடம் தகவல் சொன்னான். 

அஸ்வத்தாமா இறந்துவிட்டான் என்று  யார் சொன்னாலும் துரோணர் நம்பமாட்டார் என்பதை அறிந்த கிருஷ்ணன், யுத்த களத்தில் வேறொரு பக்கத்தில் இருந்த தருமரை வரவழைக்கிறார்.  

அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று துரோணரிடம் சென்று கூறுமாறு தருமரை கேட்டுக் கொள்கிறார் கிருஷ்ணர். 

திடுக்கிடுகிறார் தருமர். கிருஷ்ணா இது நியாயமா..? நான் எப்படி பொய் சொல்வேன் எனக் கேட்கிறார். 

நீ பொய்  செல்ல வேண்டாம் தருமா.., அஸ்வத்தாமன் என்னும் யானை இறந்துவிட்டது. எனவே, அஸ்வத்தாமன் என்னும் யானை  இறந்துவிட்டான் என்று நீ கூறு போதும் என்கிறார். 

தருமர் முதலில் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுக்கிறார். பின் கண்ணனின் தொடர்ச்சியான வற்புறுத்தலினால் அஸ்வத்தாமன் என்னும் யானை இறந்தது என்பதை துரோணருக்கு சொல்ல அவர் முன் சென்று பணிகிறான் தருமன். 

குழம்பிய முகத்துடன் தன எதிரே நிற்கும் தருமரை ஏறிடுகிறார் துரோணர்.
~
அஸ்வத்தாமா ஹத : குஞ்சரஹ... என்கிறார் தருமர். 

குஞ்சரஹ - என்னும் வார்த்தையை தர்மர் சொல்லும்போது கண்ணன் தனது பாஞ்சஜன்யம் என்னும் சங்கை சத்தமாக ஊதுகிறார்.

துரோணரின் காதில் "குஞ்சரஹ" என்னும் வார்த்தை விழவில்லை. அஸ்வத்தாமா ஹத: என்று தருமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட  துரோணர் தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அப்படியே மயங்கி சாயகிறார். 

குஞ்சரஹ என்றால் சமஸ்கிருதத்தில் "யானை".
~

துரோணரால் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கும்,   அவரின்  மரணத்துக்கும் பழி வாங்க காத்திருந்த பாஞ்சால மன்னன் துருபதனின் மகனும், திரௌபதியின் சகோதரனுமாகிய திருஷ்டத்யும்னன் துரோணரை கொல்ல எதிர்ப்புறத்தில் இருந்து ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருகிறான்.
~

(தொடரும்...)


Comments