அஸ்வத்தாமன் - 8

அஸ்வத்தாமன் 

(தொடர்ச்சி...8)

பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடத்தப்பட்ட பிறகு  கௌரவ படையின் தலைமை படையணித் தலைவராக துரியோதனனால் துரோணர் நியமிக்கப்படுகிறார்.

இதுவரை யுத்தத்தில் இருந்து ஒதுங்கி இருந்த கர்ணன் யுத்த களத்துக்குள்  பிரவேசிக்கிறான்.
~
பாண்டவர்களில் தருமரை போரில் உயிருடன் பிடித்து விட்டால் ஏனைய பாண்டவர்களை அடிமைகளாக்கி விடலாம் என்று சகுனி இந்த நேரத்தில் துரியோதனனுக்கு அறிவுரை சொல்கிறான். துரியோதனனும் தருமரை உயிருடன் பிடித்து தன்னிடம் கொண்டு வந்து நிறுத்துமாறு ஆச்சாரியார் துரோணரை பணிக்கிறான்.

கடுமையாக யுத்தம் செய்யும் துரோணாச்சாரியார் தருமரின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்குகிறார். ஆனால் பீமனும் அர்ச்சுனனும் ஆச்சாரியாருடன் கடுமையாக போரிட்டு தருமனை மீட்டு செல்கின்றனர்.
~

மறுநாள் போர்க்களத்தில் சக்கர வியூகம் அமைக்கிறார் துரோணர். மகாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பதினேழு வியூகங்களில் மிகவும் சிக்கலான வியூகம் சக்கர வியூகம். வியூகத்தை பிளந்து கொண்டு உள்ளே சென்று போரிட்டு வெற்றியுடன் மீள திரும்ப வருவது என்பது எவ்வளவு பெரிய வீரனாலும் இயலாத ஒன்றாகும். 

கிருஷ்ணர்,அர்ஜுனன் போன்ற மாவீரர்கள் மட்டுமே சக்கர வியூகத்தை உடைக்கும் திறன் பெற்றவர்கள்.

சாகசங்கள் புரிவதில் விருப்பு மிகுந்த அர்ஜுனனின் மகன் அபிமன்யூ துரோணர் அமைத்த சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான். கௌரவ சேனையின் தளபதிகளில் ஒருவனாகிய பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான யானைப்படைகளுடன் அர்ஜுனனை முற்றுகையிட்டு அவனுடன் கடுமையாக போரிடுகிறான். அபிமன்யுவின் பாதுகாப்புக்கு அர்ஜுனனை செல்லவிடாமல் அவன் தடுத்துக் கொண்டிருந்தான். 

அபிமன்யுவை உள்வாங்கிக் கொண்ட சக்கர வியூகம் வெளிப்புறம் தன்னை மீண்டும் இறுக மூடிக் கொண்டுவிட்டது.
~
சக்கர வியூகத்துக்குள் உள்ளே கடுமையாக போரிட்டுக் கொண்டிருந்த அபிமன்யு, துரியோதனனின் மகன் லக்சகுமாரனை கொல்கிறான்.

 தனது மகனின் மரணத்தால் கடும் கோபமடையும் துரியோதனன் அபிமன்யுவை கொன்றொழிக்குமாறு ஆச்சாரியாருக்கு  உத்தரவிடுகிறான்.

துரோணரின் உத்தரவின்படி ஜயத்ரதன், கர்ணன், துச்சாதனன் போன்ற கௌரவ படை தளபதிகள் அபிமன்யுவை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குகின்றனர். அர்ஜுனனைத் தவிர ஏனைய பாண்டவர்கள் அனைவரையும் போரில் தோற்கடிக்கும் வரம் பெற்றிருந்தவன் ஜயத்ரதன். அபிமன்யுவை காக்க வரும் தருமர் உள்ளிட்ட நால்வரையும் ஜயத்ரதன் வீழ்த்துகிறான்.

ஜயத்ரதன் கையால் அபிமன்யு வீர மரணம் அடைகிறான். 
~

மகனின் மரணத்தை கேள்விப்பட்ட அர்ஜுனன் கடும் சினம் கொல்கிறான். அடுத்த நாள் மாலை சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வேன் இல்லையெனில் தீக்குளித்து சாவேன் என்று சபதமிடுகிறான்.
~

அர்ஜுனனின் இந்த சபதத்தை அறிந்த  துரியோதனன் அர்ஜுனனை தீக்குளிக்க வைப்பதற்காக மறுநாள் போரில் ஜயத்ரதனை கலந்து கொள்ளவிடாது அவனை ஒளிந்திருக்க வைக்கிறான். 

சூரியன் அஸ்தமனம் ஆகும்  நேரம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அர்ஜுனனின் சபதம் என்ன ஆயிற்று ? 

ஜயத்ரதனை சூரிய அஸ்தமனத்திற்குள் அர்ஜுனன் கொன்றானா ? 

அஸ்வத்தாமன் யாருடன் போரிட்டுக் கொண்டிருந்தான் ? 
~

பார்க்கலாம்..




Comments