அஸ்வத்தாமன் - 7

அஸ்வத்தாமன் 


(தொடர்ச்சி...7)

துரோணரின் மரணம் எப்போது நிகழ்ந்தது? வஞ்சகத்தாலா? அப்படியெனில் எவ்வாறு?

அதற்கு பழிவாங்குகிறானா அஸ்வத்தாமன்...? எப்படி ?

பார்க்கலாம்... அதற்கும்  முன்.., 

துரோணர் தலைமையேற்பதற்கு முன் நடைபெற்ற போர் விவரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டால் பாரதப் போரில் துரோணரின் பங்கையும், அவர் மரணம் நிகழ்த்தப்பட்ட விதத்தையும், அஸ்வத்தாமனின் பெருங்கோபத்தையும் அதன் விளைவுகளையும் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.
~

குருச்சேத்திர யுத்தத்தின் முதல் பத்து நாள் போரில் கௌரவர் படையில் பிதாமகர் பீஷ்மர் தலைமை படை  தளபதியாக படை நடத்தி போர் புரிந்தார். 

ஒரு தேரோட்டி மகன் இப்போரில் ஒரு படைக்கு தலைமையேற்று நடத்துவதை தான் விரும்பவில்லை என பீஷ்மர் துரியோதனனிடம் வலியுறுத்தியதை அடுத்து பீஷ்மர் இருக்கும் வரை தான் போர் புரிய வரப்போவதில்லை என கூறிவிட்டு கர்ணன் சென்று விடுகிறான். 

தன்னை தொடர்ச்சியாக அவமானப்படுத்துவதன் காரணத்தை அம்புப் படுக்கையில் இருக்கும்போது கர்ணன் பீஷ்மரிடம் கேட்கிறான். அதற்கு பீஷ்மர் அளித்த பதிலின் மூலம்  பீஷ்மரின் உண்மையான பாசமும் அன்பும் கர்ணனுக்கு புரிகிறது. அது தனி கதை. இப்போது வேண்டாம். 
~

களத்தில் பீஷ்மரும், துரோணரும் சேர்ந்து பாண்டவ படைகளை சிதறடிக்கின்றனர். மற்றொரு பக்கம் அர்ச்சுனன் தனது காண்டீபத்தின் துணை கொண்டு கௌரவ படைகளில் பெருத்த சேதத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். 

போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமான சேனாதிபதிகளை இரு தரப்பும் மாறி மாறி இழக்கின்றன. 

இதற்கிடையே, பாண்டவர்களை உங்களால் உண்மையாகவே வெல்ல இயலவில்லையா, அல்லது அவர்கள் மீதான பாசம் அவர்களை கொல்ல விடாமல்  உங்களை தடுக்கிறதா என்று பீஷ்மரிடம் துரியோதனன் ஆத்திரப்படுகிறான். 
~

பீஷ்மரை போரில் வெல்லமுடியாமல் அர்ச்சுனன் தத்தளிப்பதை கண்டு கிருஷ்ணரும்  ஆத்திரம் அடைகிறார். சிகண்டியை களம் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த அவர், சிகண்டியை போர்க்களத்துக்கு கொண்டுவர அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார். 

யார் இந்த சிகண்டி? பீஷ்மரை வெல்ல சிகண்டி ஏன் போர்க்களத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.? சிகண்டியால் பீஷ்மரை கொல்ல முடியுமா..?
~

தனது முற்பிறவியில் தன்னை திருமணம் செய்யமறுத்து  தனக்கு துரோகம் செய்த பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே துருபத மன்னனுக்கு மகளாகப் பிறந்து, போர்க்கலைகளைக் கற்று, யட்சன் ஒருவனின் ஆன்மாவைப் பெற்று ஆண்மகனாகி,  மனத்தால் ஆணாகவும், உருவத்தால் பெண்ணாகவும் வடிவம் பெற்று குருச்சேத்திர யுத்தத்தில் பீஷ்மரை கொல்வதற்கு  காத்து  நின்றுகொண்டிருந்தவள் தான் சிகண்டி.

சிகண்டியை பற்றி பிறிதொரு சமயத்தில் தனியாக பார்க்கலாம். 
~

பத்தாம் நாள் யுத்தத்தில் பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. 

பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். 

பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்தவுடன் சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டார்.  இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து அருச்சுனன் தனது அம்புகளால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் அவரைக் கிடத்தினான்.

பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு "இச்சா  மரணம்" என்ற தான் விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர்நீப்பதற்காக அம்புப்படுக்கையில் காத்திருந்தார்.
~

பதினெட்டாம் நாள் யுத்தத்தில் அஸ்வத்தாமன் சிகண்டியின் கதையை முடித்து பீஷ்மரை கொன்றதற்கு பழி தீர்க்கிறான். அது தனிக்கதை.
~

அடுத்து.....

துரோணரின் தலைமையில் கௌரவ சேனை களம் காணுதல்,  கர்ணனின் போர்ப்பிரவேசம், சக்கர வியூகம் அமைத்து அபிமன்யுவை வீழ்த்துதல், தருமரை முன் நிறுத்தி ஏற்படுத்தப்பட்ட துரோணரின் மரணம்..... 

அதைத் தொடர்ந்து அஸ்வத்தாமனின் ருத்ரதாண்டவம்...
~

பார்க்கலாம்.



Comments