அஸ்வத்தாமன் - 6
அஸ்வத்தாமன்
(தொடர்ச்சி...6)
இறுதியில் அனைவரும் பதைபதைப்புடன் எதிர்பார்த்திருந்த பாரத யுத்தம் வந்தே சேர்ந்தது.
கிருஷ்ணரின் சமாதான முயற்சி தோல்வியடைந்தது. எந்த சமரசத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்த துரியோதனன் பாண்டவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கை தர மறுத்து, யுத்தம் மூலம் அவர்களை அழிக்க முடிவெடுத்தான். வேறு வழியே இல்லாத பாண்டவர்களும் யுத்தத்துக்கு தயாராகினர்.
~
யுத்தம் என்று முடிவானதும் இரு தரப்பும் தங்களுக்கான படைகளைத் திரட்ட தொடங்கினர். வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஆதரவாளர்களை தம்மோடு இணைத்துக் கொண்டனர்.
துரியோதனனின் கௌரவ சேனையில் பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், துச்சாதனன், விகர்ணன், ஜயத்ரதன், சல்லியன், பூரிசிரவஸ் ஆகியோருடன் அவர்களின் படையும், காம்போஜம், அவந்தி, கேகேயம், கலிங்கம், ஆந்திரம், யவனம், மகிஷ்மதி ஆகிய நாட்டு படைகளும் அவைகளின் மன்னர்களும் இடம்பெற்றனர்.
பாண்டவர்களுக்கு ஆதரவாக துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, அபிமன்யு, கடோதகஜன், அரவான், உத்தரன், சாத்யகி, திருஷ்டகேது, ஜராசந்தனின் மகன் சத்தியசேனன் ஆகியோருடன் அவர்களின் படையும், நீலனின் தலைமையிலான மாகிஷ்மதி நாட்டு படைகளும், பாஞ்சாலம் மற்றும் பாண்டிய நாட்டு படைகளும் அவைகளின் மன்னர்களும் இடம்பெற்றனர்.
அஸ்வத்தாமன் தன் நண்பன் துரியோதனனின் பக்கம் நின்றான்.
~
பாண்டவர்களின் தலைமைப் படைத்தலைவராக பாஞ்சால அரசன் துருபதனின் மகனும், திரௌபதியின் சகோதரனுமாகிய திருஷ்டத்யும்னன் நியமிக்கப்பட்டான்.
கௌரவப் படைகளுக்கு பிதாமகர் பீஷ்மர் தலைமைப் படைத்தலைவராக ஆனார்.
~
போருக்கான விதிமுறைகள் பீஷ்மரால் வகுக்கப்பட்டன. இரு தரப்பினராலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
1. கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
2. ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
3. போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
4. காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையு எதிர்த்து போரிடக்கூடாது.
5. போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
6. கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
7. போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.
8. காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
9. மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
10. போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.
போரின் முதல் 12 நாட்கள் வரை இவ்விதிமுறைகள் காப்பாற்றப்பட்டன.
13ம் நாளன்று அர்ஜுனனின் மகன் அபிமன்யு சக்கரவியூகத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு இவ்விதிமுறைகளை இரு அணியினரும் தூக்கியெறிந்தனர்.
~
சக்கரவியூகத்துக்குள் மாட்டிக்கொண்ட அபிமன்யுவை கடுமையாக தாக்கி அவனின் உயிர் பறிக்க காரணமாயிருந்த கௌரவ சேனையின் அறுவரில் முக்கியமானவன் அஸ்வத்தாமன்.
மற்ற ஐவர்: துரோணர், கர்ணன், கிருபர், கிருதவர்மன், பிரஹத்பாலன்.
~
யுத்த தருமத்திற்கு எதிரான பாதையில் பாரத யுத்தம் பிரவேசிக்கத் துவங்கியது.
வஞ்சகத்தால் துரோணாச்சாரியார் வீழ்த்தப்படுகிறார்.
கடும் கோபமும் ஆற்றாமையும் கொள்ளும் அஸ்வத்தாமன் பாண்டவர்களை பூண்டோடு அழிக்க சபதமேற்கிறான்.
~
துரோணரின் மரணம் எப்போது நிகழ்ந்தது? வஞ்சகத்தாலா? அப்படியெனில் எவ்வாறு?
அதற்கு பழிவாங்குகிறானா அஸ்வத்தாமன்...? எப்படி ?
~
பார்க்கலாம்....



Comments
Post a Comment