அஸ்வத்தாமன் - 5
அஸ்வத்தாமன்
(தொடர்ச்சி...5)
அஸ்திரங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த, பெரு நாசத்தை நொடியில் ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்ற, கருவில் இருக்கும் சிசுவைக்கூட கொன்றொழிக்கும் ஆற்றல் பெற்ற, சிறு புல்லைக்கூட அஸ்திரமாக மாற்றி எய்யக்கூடிய மிக மிக வலிமையான #பிரம்மாஸ்திரத்தை எய்யும் பிரமாணத்தை அர்ஜுனனுக்கும், கூடவே அஸ்வத்தாமனுக்கும் சொல்லித்தருகிறார்.
~
ஒருமுறை எய்யப்பட்ட பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறும் பிரமாணங்களை துரோணர் சொல்லித்தரும்போது துரதிர்ஷ்டவசமாக அஸ்வத்தாமன் அவ்விடத்தில் இல்லை,
~
அரச குமாரர்கள் அனைவருக்கும் குரு துரோணர் வில் வித்தைகளின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறார். சிரத்தையுடன் அவை யாவற்றையும் கற்றுக்கொள்ளும் அர்ஜுனன் மீது துரோணருக்கு தனிப் பற்று ஏற்படுகிறது. பயிற்சியின் போது அர்ஜுனனை வியந்தும், அஸ்வத்தாமா உள்ளிட்ட மற்றவர்களை கடிந்து கொள்ளும்போதும் இயல்பாகவே ஏற்படும் பொறாமை உணர்வு அஸ்வத்தாமனை துரியோதனனுக்கு தோழனாக்குகிறது.
~
தன் தாத்தா பரத்வாஜரிடமிருந்து தனுர் வேதத்தையும், மாமா கிருபரிடமிருந்து வியூக நுணுக்கங்களையும் கற்று அவற்றில் பூரணமாக தேர்ந்தவனாகிறான்.
ஒரு பிராமணனுக்கு உரிய கர்மானுஷ்டமான வேதங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த அஸ்வத்தாமன் அதர்வண வேதத்தின் சில பகுதிகளை உருவாக்கி அந்த வேதத்தில் வித்தகனாகவும் விளங்கினான்.
~
பாண்டவர்கள் வனவாசம் இருக்கும்போது துவாரகைக்கு சென்று கிருஷ்ணரை சந்திக்கிறான் அஸ்வத்தாமன். அவனைப் பார்த்து வியந்த கிருஷ்ணர் என்ன வேண்டும் அஸ்வத்தாமா என கேட்கிறார். கிருஷ்ணரின் சக்கராயுதத்தை தனக்கு தானமாக அவர் தர வேண்டும் என்று கிருஷ்ணரிடமே கேட்கிறான் அஸ்வத்தாமன். ஆச்சரியப்படும் கிருஷ்ணர் அது உனக்கெதற்கு எங்கிறார்.
இன்னும் சிறிது காலத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் வரும். அதில் நான் என் நண்பன் துரியோதனன் பக்கம் நிற்பேன். நீங்கள் கண்டிப்பாக பாண்டவர் பக்கம் தான் இருப்பீர்கள். நீங்கள் இருக்கும்வரை பாண்டவர்களை வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே உம்மை தோற்கடிக்க உமது சக்கராயுதம் எனக்கு வேண்டும் என்கிறான் அஸ்வத்தாமன்.
அவனின் தீர்க்கதரிசனத்தையும், புத்திக்கூர்மையையும், வீரத்தையும் மெச்சிய கிருஷ்ணர் சுதர்சன சக்கரத்தால் என்னை உன்னால் வெல்ல முடியாது. கொல்லவும் முடியாது. என்னிடமே நேரிடையாக வந்து என் சுதர்சன சக்கரத்தை கேட்கும் உன் வீரம் எனக்கு பிடித்திருக்கிறது. போர் என்று ஒன்று வருமானால் உன் எதிரில் உள்ள அத்தனை பேரையும் நொடிகளில் அழித்திடும் வல்லமை மிக்க நாராயண அஸ்திரத்தை உனக்கு நான் பரிசாகத் தருகிறேன் என்று கூறி தன்னிடமிருந்த நாராயண அஸ்திரத்தை அஸ்வத்தாமனுக்கு அளிக்கிறார் பகவான்.
~
இந்த நாராயண அஸ்திரம் தான் குருக்ஷேத்திர போரின் இறுதிக்கட்டத்தில் பாண்டவ படையை முற்றாக அழிக்கப்போகிறது என்பது பகவானுக்கு தெரியாமலா இருந்திருக்கும்.
~
பிரம்மாவின் பிரம்மாஸ்திரத்தையும், பகவான் கிருஷ்ணரிடமிருந்து நாராயாணாஸ்திரத்தையும் பெற்ற அஸ்வத்தாமன் அவற்றில் திருப்தியுறாமல் தன தவ வலிமையாலும், அதர்வண வேதத்தின் துணை கொண்டும் பரமேஸ்வவனையும், ஆதிசக்தியையும் வணங்கி அவர்களை மனதில் தியானித்து உருவேற்றி எல்லாவிதமான அஸ்திரங்களைவிடவும் மிக மிக அதிக சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை உருவாக்குகிறான். தன்னை விட அதிக பலம் வாய்ந்த எதிரியிடம் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்பது இவ்வஸ்திரத்தை உபயோகிக்க விதிக்கப்படும் முக்கியமான நிபந்தனை ஆகும்.
யுத்தம் என்று ஒன்று வந்தால் இம்மூன்று அஸ்திரங்களை பயன்படுத்தி பாண்டவர்களை முழுமையாக அழித்து துரியோதனனை காப்பேன் என்று மனதில் சூளுரைத்துக் கொள்கிறான்.
~
மும்மூர்த்திகளின் அம்சங்களாகிய இம்மூன்று வகை அஸ்திரங்களையும் கைக்கொண்ட இரண்டாவது மாவீரன் அஸ்வத்தாமன் மட்டுமே.
முதலாமவன் இராமாயணத்தில் மேகநாதன் என்றழைக்கப்படும் இந்திரஜித்.
(தொடரும்...)
~



Comments
Post a Comment