அஸ்வத்தாமன் - 4

அஸ்வத்தாமன் 


(தொடர்ச்சி...4)

பிந்தைய நாளில் பிரம்மாஸ்திரம் ஏற்படுத்தப்போகும் கடுமையான அழிவையும், அஸ்வத்தாமனுக்கு ஏற்படப்போகும் சாபத்தையும், அப்போது துரோணாச்சாரியார் அறிந்திருக்கவில்லை .
~
இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக். பிரம்மாஸ்திரம் என்றால் என்னவென்று பார்த்துவிடலாம். 

மாபெரும் அழிவை உண்டாக்கவல்ல பிரம்ம அஸ்திரங்கள் என்று கூறப்படும் இவ்வஸ்திரங்கள் மூன்று வகைப்படும். 

பிரம்மாஸ்திரம் 
பிரம்மசிரஸ் அஸ்திரம்
பிரம்மாண்ட அஸ்திரம் 
~

பிரம்மாஸ்திரம் குறிப்பிட்ட இலக்கை  துல்லியமாக தாக்கும் வல்லமை பெற்றது. எதிரியோ  அல்லது எதிரிப்படையோ முற்று முழுதுமாக அழித்து ஒழிக்கப்படும் வீரியம் படைத்தது.

பிரம்மாவின் ஐந்தாவது முகம் என்று விளிக்கப்படும் பிரம்மசிரஸ் அஸ்திரம் இந்த உலகையே  அழிக்கவல்ல திறன் படைத்தது.

பிரம்மாண்ட அஸ்திரம் என்று கூறப்படும் மூன்றாவது  வகை அஸ்திரங்கள் அகில பிரபஞ்சத்தையும், பூலோக, சுவர்க்க லோக, பாதாள லோகங்களையும் அழிக்கும் வல்லமை பெற்றது. 
~

உலகில் சத்தியத்தையும், தர்மத்தையும் காக்கும் பொருட்டு தீய சக்திகளை அழிப்பதற்காக வேறெந்த நடவடிக்கைகளாலும் முடியாத போது மட்டுமே பிரம்ம அஸ்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு இவ்வாயுதங்களை பயன்படுத்த  விதிக்கப்பட்டுள்ளது.

புராணம் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள் குறிப்பிட்ட இலக்கை நோக்கியோ, எதிரியை நோக்கியோ அல்லது எதிரிப்படையை நோக்கியோ எய்தப்படும்போது மிகப்பெரிய அழிவை உருவாக்கும் வல்லமை பெற்றது. தனது இலக்கை ஒருபோதும் தவற விடாதவை இவை. 

மும்மூர்த்திகளில் படைக்கும் கடவுளான பிரம்மாவினால் படைக்கப்பட்ட இவ்வாயுதம் அவரை நோக்கி தவம் மேற்கொள்வதன் மூலமும், இவ்வஸ்திரங்களை செலுத்தக்கூடிய வல்லமை படைத்த குறிப்பிட்ட சில குருமார்களிடம் பக்தியுடன் பயில்வதன் மூலமும் அடைய முடியும். 

ஆச்சாரியார் துரோணருக்கு பரசுராமர் மூலம் இவ்வாயுதம் பற்றிய திறனறிவு கிடைக்கப்பெற்றது.
~

பிரம்மாஸ்திரத்தை செயலிழக்க வைக்கும் சக்தி ஒரே ஒரு ஆயுதத்துக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அது பிரம்ம தண்ட அஸ்திரம். ஆனால் அது ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. 

பிரம்மாஸ்திரம் எய்தப்படும்போது அது குறிவைக்கப்படும் இலக்கில் மிகப்பெரிய நெருப்புக் கோளங்கள் தோன்றும். அவை வான் வரை உயரும். அந்த பிரதேசமே கரும்புகையினால் சூழப்படும். வெப்ப நிலை அதிக அளவில் உயரும். சீரற்ற தட்பவெப்ப நிலை பல காலங்களுக்கு நீடிக்கும். மழைப்பொழிவு நின்றுவிடும். நிலம் பாலம் பாலமாய் வெடிக்கும். புல் பூண்டுகள் முளைக்காது. அவ்வளவு அழிவுத் திறனை உள்ளடக்கிய ஆயுதம் இது என்று பழங்கால புராண, இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாரத யுத்தத்தின் கடைசிப் பகுதியில் இவ்வாயுதம் உபயோகப்படுத்தப்பட்ட தகவல் மகாபாரதத்தில் உள்ளது. போர் நடைபெற்றதாக கருதப்படும் இன்றைய ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகள் பொட்டல் வெளிகளாக காணப்படும்  நிலையை நான் பார்த்திருக்கிறேன். பிரம்மாஸ்திரத்தின் விளைவு இவை என்று அம்மக்கள் நம்புகின்றனர்.

நவீன கால அணுஆயுதங்கள் தான் பண்டைய பிரம்ம ஆயுதங்கள் என்ற கருத்து பரவலாக ஆய்வாளர்களிடம் இருக்கின்றன. தற்போதைய அணுஆயுதங்களுடன் பிரம்மாஸ்திரத்தை ஒப்பிட்டு நிறைய கட்டுரைகள் இன்னமும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
~

இந்த பிரம்மாஸ்திரம் குருக்ஷேத்திர யுத்தத்துக்கு முன் யார் யாரால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். 

பிந்தைய நாளில் மகரிஷி விசுவாமித்திரர் என்றழைக்கப்பட்ட கௌசிக மகாராஜாவால் வசிஷ்டருக்கு எதிராக பிரம்மாஸ்திரம் எய்தப்பட்டுள்ளது. வசிஷ்டர் தன்னிடம் இருந்த பிரம்ம தண்ட அஸ்திரம் மூலம் பிரம்மாஸ்திரத்தை செயலற்றதாக்கியிருக்கிறார்.

ராமாயணத்தில் இந்திரஜித் எய்திய  நாகாஸ்திரத்தினால்   இலக்குவன் மூர்ச்சை ஆகி கீழே விழுகிறான். அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து வந்து இலக்குவனை காப்பாற்றுகிறார். அனுமன் மேல் கடுங்கோபம் கொண்ட இந்திரஜித் அனுமனை நோக்கி பிரம்மாஸ்திரத்தினை எய்கிறான். அனுமன் பிரம்மாவை வணங்கி, பிரம்மா ஏற்கனவே அனுமனுக்கு கொடுத்த வரத்தின் வலிமையினால் பிரம்மாஸ்திரத்தை செயலிழக்க வைக்கிறார்.  

வனவாசத்தின் போது சீதைக்கு காக்கை உருவில் வந்து தொல்லை கொடுத்த இந்திரன் மகன் ஜெயந்தனை அழிப்பதற்காக ராமபிரான் விஸ்வாமித்திரரால் அருளப்பட்ட பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தியிருக்கிறார். அவ்வஸ்திரத்தின் வலிமை அறிந்த ஜெயந்தன்  ராமனிடம் கதறி மன்றாடும்போது,  அவனை முழுக்க அழிக்காது அவனின் ஒரு கண்ணை மட்டும் அழிக்குமாறு அதன் திறனை திசைமாற்றுகிறார். காக்கை உருவில் வந்த ஜெயந்தன் ஒரு கண்ணை இழக்கிறான். அதனால் தான் காகம் இன்றும் ஒரு கண்ணை சாய்த்து பார்ப்பதாக ஐதீகம் நிலவுகிறது. 

ராவணன், சீதையை அபகரித்துச் சென்றபின்,  சீதையை மீட்கவேண்டி வானரப்படையுடன் இலங்கை நோக்கி செல்லும்போது குறுக்கே மரித்த  கடலை பிளப்பதற்காக   ராமன்  வருணனை நோக்கி பிரம்மாஸ்திரத்தை செலுத்த முயன்றதாகவும், வருணன் ராமனிடம் மன்றாடி, கடலை பிளந்து வழி அமைத்துக் கொடுத்ததாகவும் ஒரு செய்தி ராமாயணத்தில் இருக்கிறது. 
~

ஒருமுறை செலுத்தப்பட்டால் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறமுடியாததாலும், அது ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியதாக இருக்கும் என்பதாலும் இந்த ஆயுதத்தை எல்லா ஆயுதங்களும் பயன்படுத்தி முடித்த பின் கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது பிரம்மாவால் இவ்வாயுதம் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை ஆகும்.
~

இந்த விதி அஸ்வத்தாமனால் காப்பாற்றப்பட்டதா ?



இனி அஸ்வத்தாமனை தொடரலாம்.



Comments