அஸ்வத்தாமன்- 3

அஸ்வத்தாமன் 

(தொடர்ச்சி...3)

சிவபெருமானைப் போலவே வீரம் பொருந்திய ஒரு மகன் வேண்டும் என்ற துரோணரின் பிரார்த்தனைகளுக்கு மனமிரங்கி ருத்ர அம்சத்துடன் ஒரு ஆண் மகவை அவருக்கு வரமளித்தார் சிவபெருமான். 

குழந்தை பிறக்கும் போதே தேவ லோக குதிரை ஸ்ரீ அவஸ்ஸி கணைப்பது போல  சத்தம் எழுப்பியதால் குழந்தைக்கு அஸ்வத்தாமன் என்று பெயரிட்டனர். 
~

அஸ்வத்தாமன் பிறக்கும்போதே அவன் முன் நெற்றியில் ஒரு ரத்தினக்கல்லுடன் பிறந்தான். அந்த ரத்தினக்கல் பசி, தாகம் மற்றும் சோர்விலிருந்து அவனை காக்கும் திறன் பெற்றது. 
~

யுத்தக்கலையில் மிகுந்த ஞானம் பெற்றிருந்தும் பிராமணராக  வாழ்க்கை நடத்திய துரோணர் ஏழ்மையின் பிடியில் உழன்றார். ஒருவேளை உணவு கூட அஸ்வத்தாமனுக்கு சில நாட்களில் வழங்க முடியாத கடும் ஏழ்மை நிலை.

நான் அரசனானவுடன் உனக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் நிறைவேற்றித் தருகிறேன் என்று உறுதியளித்த,  படிக்கும் காலத்தில் கூட படித்த உயிர்த்தோழன் பாஞ்சால அரசகுமாரன் துருபதனின் வாக்கை நம்பி குடும்பத்துடன் பாஞ்சால தேசம் செல்கிறார்.

பழசையெல்லாம் மறந்த பாஞ்சால அரசன் துருபதன் தோழா என்றழைத்த துரோணரை கடுமையாக ஏசி, ஒரு பிச்சைக்காரன் எவ்வாறு ஒரு அரசனுக்குத் தோழனாக இருக்க முடியும் என்று கூறி அவமானப்படுத்தி துரோணரையும் அவர் குடும்பத்தையும் அரண்மனையில் இருந்து காவலர்களைக் கொண்டு வெளியேறுகிறான்..
~
அவமானத்துடன் அரண்மனையை விட்டு வெளியேறிய துரோணர் துருபதனுக்கு பாடம் புகட்டியே தீருவேன் என்ற பிரதிஞையுடன் பாஞ்சாலத்தை விட்டு அகல்கிறார்.

வழியில் தனது மைத்துனரும், அஸ்தினாபுர இளவரசர்களுக்கு குருவாகவும் இருக்கும்  கிருபரை சந்திக்கிறார். கிருபர் துரோணரை பிதாமகர் பீஷ்மரிடம் அழைத்து செல்கிறார். 

பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளில் சிறப்பான பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்திருந்த துரோணரை பற்றி ஏற்கனவே அறிந்திருந்த பீஷ்மர் அவரை அன்புடன் உபசரித்து அஸ்திர வித்தைகளை குரு வம்ச இளவரசர்களுக்கு கற்றுக் கொடுக்குமாறு வேண்டுகிறார். 

துரோணரை கௌரவ, பாண்டவ இளவரசர்களுக்கு ஆச்சாரியராக நியமிக்கிறார்.
~

அஸ்தினாபுர இளவரசர்களுடன் அஸ்வத்தாமனும்  தந்தையிடமிருந்து வில்வித்தை பயில்கின்றான்.
~

வில் வித்தையில் அதிசயிக்கத்தக்க அளவில் திறமை பெற்றிருந்த அர்ஜுனன் மீது துரோணருக்கு ஏற்பட்ட வாத்சல்யத்தினால் பரசுராமரிடமிருந்து தான் கற்றறிந்த அனைத்து அஸ்திர பிரயோகங்களையும் , பிரமானங்களையும் முழுவதுமாக  அர்ஜுனனுக்கு கற்றுத் தருகிறார்.

அர்ஜுனனுக்கு நிகராக வில் வித்தையில் திறமை பெற்றிருந்த அஸ்வத்தாமனுக்கும் தான் அறிந்த எல்லா வித்தைகளையும் ஒரு ஆச்சாரியராக கற்றுக் தருகிறார.

மேலும், மகன் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசத்தால் ஸ்ரீமன் நாராயணரிடமிருந்து தவமிருந்து பெற்ற நாராயணாஸ்திரத்தை அளித்து அதை பிரயோகிக்கும் முறையையும் அஸ்வத்தாமனுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
~

அஸ்திரங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த, பெரு நாசத்தை நொடியில் ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்ற, கருவில் இருக்கும் சிசுவைக்கூட கொன்றொழிக்கும் ஆற்றல் பெற்ற, சிறு புல்லைக்கூட அஸ்திரமாக மாற்றி எய்யக்கூடிய மிக மிக வலிமையான பிரம்மாஸ்திரத்தை எய்யும் பிரமாணத்தை அர்ஜுனனுக்கும்,  கூடவே அஸ்வத்தாமனுக்கும் சொல்லித்தருகிறார்.
~

பிந்தைய நாளில் பிரம்மாஸ்திரம் ஏற்படுத்தப்போகும் கடுமையான அழிவையும்,  அஸ்வத்தாமனுக்கு ஏற்படப்போகும் சாபத்தையும்,  அப்போது துரோணாச்சாரியார் அறிந்திருக்கவில்லை .
~

(தொடரும்...)


Comments