வாசிப்பு (2) - ராணி

வாசிப்பு ( 2 ) - ராணி


குமுதம் தான் எனக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

இந்நிலையில் வாராந்திர ராணி எதிர் வீட்டு வரதராஜ் நைனா மூலம் (Muthu Kumar இன் தாத்தா) அறிமுகமாகியது. 

குமுதத்தை விட பெரிய சைஸ். குடும்ப பத்திரிக்கை என்று போட்டிருப்பார்கள். படு கவர்ச்சியாக நடிகைகள் படங்கள் நிறைய இருக்கும். 

இருந்தும் நிறைய லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களில் ராணி வாங்குவார்கள்.
~

குரங்கு குசலா என்று ஒரு கார்ட்டூன் காரக்டர் பகுதி ஒவ்வொரு வாரமும் வரும். அப்போது ஆர்வமுடன் அதை பார்ப்போம். இன்று நினைத்தால் இவ்வளவு மொக்கையையாய் ரசித்தோம் என்று தோன்றுகிறது. 

இது தவிர அல்லி பதில்கள் என்று எக்கச்சக்கமாய் சினிமா பற்றிய கேள்விகள் அடங்கிய பகுதி ஒன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
~

அ.மா.சாமி அவ்வப்போது எழுதும் பேய்க் கதைகளை தொடர்ந்து படித்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத் தான் இருக்கிறது.
~

ராணிமுத்து என்று  மாதம் ஒருமுறை நாவல் புத்தகமும் ராணி பத்திரிக்கையின் சகோதரப் பத்திரிக்கையாக வந்தது. 

லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன் போன்றோர்களின் நல்ல நாவல்கள் அதில் வந்திருக்கின்றன. 

ஆனால் இதைவிட அவர்கள் பேமஸ் ஆனது வேறொரு விஷத்தில் தான். அது பாலமுருகன் படம் போட்ட தினசரி காலண்டர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டது தான்.
~

தொண்ணூறுகளில் நான் கும்பகோணத்தில் பணியாற்றிய காலத்தில் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி தொடர்ந்து ராணி முத்து படிப்பவர். அப்போதுதான் தமிழ் படிக்க கற்றுக்கொண்டிருந்த என் மனைவிக்கும் அவர் மூலம் ராணிமுத்து படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பல ஆண்டுகள் கழித்து நான் சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் வீட்டில் லேட்டஸ்ட் ராணி முத்து இதழ் ஒன்றைப் பார்த்தேன். கூடவே வந்திருந்த என் மனைவி  மகிழ்ச்சியுடன் அதை லவட்டிக் கொண்டு வந்துவிட்டார். 
~

மொத்தத்தில் ராணி முத்துவைவிட ராணி ஒரு மொக்கை பத்திரிக்கை தான். 

ராணி இன்னும் உயிரோடு இருக்கிறதா ? யாராவது சமீபத்தில் பார்த்தீர்களா ?
~

Comments