செல்லம்ஸ் - 2
செல்லம்ஸ் - 2
~
❤️
டைகர், ஜிம்மி,ஜாக்கி, ராஜா.... இதெல்லாம் ஓல்ட் டேஸ் டாக்ஸ்.
ஜீனோ, ஸ்கூபி, ரூனி, ஜிஜு .... இதெல்லாம் கொஞ்சம் நடுவாந்திரம்
இப்போ கன்னாபின்னான்னு பேர் வைக்கிறாங்க வளர்ப்பு நாய்களுக்கு.
~
என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவர் வீட்டு நாய்க்கு "சே" (Che) என்று பெயர் வைத்திருந்தார்.
இதென்னங்க வித்தியாசமான பேரு என்றேன்.
என்னை ஒரு கோப பார்வை பார்த்துவிட்டு சொன்னார், " அவர் பெரிய புரட்சியாளர் ங்க... இது கூட தெரியாதா..?" என்றார். பயந்துவிட்டேன்.
ஓ... எர்னஸ்டோ சே குவேரா வின் நினைவை போற்றுகிறார் போல என்று நினைத்துக் கொண்டேன்.
அட கடவுளே...
~
இந்த நேரத்தில் திருவாரூரில் நான் இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கலை இலக்கிய இரவுக்கு நிதி கேட்டு ஒரு நண்பர் வந்தார். எனக்கு அந்த சங்கம் நடத்தும் நிகழ்சசிக்கு எல்லாம் பணம் கொடுப்பதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் வந்தவர் படித்த பண்புள்ள நெருங்கிய நண்பர். சரி அவருக்காக ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன். ரசீது கிழித்து கொடுத்தார்.
ரசீதின் வலது பக்கத்தில் பகத் சிங்கும் இடது பக்கத்தில் "சே" படமும் இருந்தது.
இவரு யாருங்க? என்று சே படத்தை காட்டி கேட்ட்டேன்.
சற்று உற்றுப் பார்த்துவிட்டு கொஞ்சம் குழப்பமாய் "இவரு பெரிய இங்கிலிஷ் பட நடிகர்ங்க தோழர்.." என்றாரே பார்க்கலாம்.
சத்தியமாய் சொல்றேன் நம்புங்க அந்த நண்பர் இன்று ஒரு மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் மாநில அளவு பொறுப்பாளர்.


Comments
Post a Comment