மே 21 - ஈழம் என்னும் பெருங்கனவு சிதைந்த நாள்
மே 21
ஈழம் என்னும் பெருங்கனவு சிதைந்த நாள்
என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.
திருவண்ணாமலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தூங்கி விழித்தெழுந்து டீ குடிக்கலாம் என்று பார்த்தால் ஊரே களேபரமாகிக் கிடந்தது.
சாலையின் நடுவே டயர்களை போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். முன்னாள் திமுக அமைசசருக்கு சொந்தமான பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கிடந்தது. கும்பல் கும்பல்களாக மக்கள்.
ஒன்றுமே புரியவில்லை.
அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டபோது முந்தைய தினம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட சேதி தெரிந்தது.
அடுத்த பிரதமர் ராஜிவ் தான் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. மாபெரும் அதிர்சசி அடைந்தேன்.
~
இந்திரா மரணமடைந்தவுடன் ராஜிவ் பிரதமரானார். இந்திராவின் கொள்கைகள் மீது பலத்த விமர்சனங்கள் எனக்கு இருந்த போதிலும் ராஜிவ் இளைஞர் என்பதாலும் அவரிடம் விஷன் இருந்தது என்பதாலும் அவர் மீது நம்பிக்கை வந்தது.
அவரும் அதை பொய்ப்பிக்கவில்லை. ஆரம்ப நாட்களில் அவரின் செயல்பாடுகள் பலரை போல் என்னையம் வெகுவாக கவர்ந்தது.
~
இந்தியா இன்று பெற்றிருக்கும் சிறப்பான ஒரு டிரான்ஸபார்மேஷனுக்கு அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளம் முக்கியமானது.
வெற்று சோஷலிஸ கோஷங்களில் இருந்து நாட்டை வேறு திசைக்கு திருப்பி செலுத்தினார். தகவல் தொழில்நுட்பம், ஆட்டொமொபைல் போன்ற துறைகளில் நாடு கிடுகிடுவென்று வளர தொடங்கியது.
குறுகிய காலத்தில் ராஜிவ் உலகத் தலைவர்களில் ஒருவரானார்.
அவர் இந்தியாவை முன்னேற்றுவதிலேயே தனது முழு கவனத்தை செலுத்தியிருக்கலாம். இடியாப்ப சிக்கலாக இருந்த இலங்கைப் பிரசினையை தொட்டிருக்கவே வேண்டாம். விதி அவரை அந்த திசையில் இழுத்து சென்றது.
~
ஒருவருக்கொருவர் சகோதர யுத்தம் புரிந்து கொண்டிருந்த தமிழ் ஈழ ஆயுத குழுக்களை ஆயுதங்களை கீழே போடசெய்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த விழைந்தார்.
தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு அளிக்க ஜெயவர்தனவை நிர்பந்தித்தார். ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணம் உதயமானது. புலிகள் ஒதுங்கினர்.
வரதராஜபெருமாள் முதல்வரானார். ராஜிவ் மீதான புலிகளின் வன்மம் வளர்ந்தது.
புலி பதுங்கி பின் பாய்ந்தது.
~
அவர் மிகவும் நேசித்த, நம்பிக்கையுடன் திரும்ப திரும்ப வளைய வந்த தமிழ்நாட்டில் இந்த கோரம் நிகழ்ந்தது துயரமானது, கொடுமையானது, துரோகமானது.
துன்பியல் சம்பவம் என்று சர்வ சாதாரணமாக அதை கடக்க நினைத்தது கயமைத்தனமானது.
1980 கள் துவங்கி புலிகளை ஆதரித்து வந்த நான் என் நிலையை மாற்றிக் கொண்டேன். தமிழர்கள் உணர்வுப் பெருக்கினால் வளர்த்த ஆயுத கலாச்சாரம் அதன் கோர முகத்தைக் காட்டியது.
எந்த பிரச்சினைக்காக இந்த நாட்டு தலைவனை இழந்தோமோ அந்த பிரச்சினை இன்று மாபெரும் துயருடன் இலட்சகணக்கான அப்பாவி மக்களைக் காவு வாங்கி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
~
ராஜீவின் பல அணுகுமுறைகளில் அதிருப்தியுற்று இருக்கிறேன். மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் பிரகாசமான ஒரு பெருந்தலைவர். பிரதமர் பதவியில் அமரும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருந்தவர்.
அவரின் வாழ்நாள் அல்பாயுளில் முடித்து வைக்கப்படடது அநீதியானது.
~
அவர் மறைந்த இந்நாளில் அவருடைய மற்றும் அவருடன் உயிரிழந்த அனைத்து தமிழர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
~
வீரவணக்கம்.
~
பி.கு. :
ராஜிவ் மரணமடைந்த பின் திருவண்ணாமலை இயல்பு நிலைக்கு வர மூன்று நாட்களாகியது.
ஒரு கடையும் திறக்கவில்லை. அலுவலகங்கள் இயங்கவில்லை. பேச்சிலர்களாக இருந்த எங்களுக்கு மூன்று வேலையும் உணவளித்து எங்களை பசியாற்றி கண் இமை போல் பாதுகாத்த திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்க செயலாளர் திரு ஏழுமலை அவர்களை நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
~


Comments
Post a Comment