சினிமா - சைக்கோ (2020)

சினிமா 

சைக்கோ (2020) 


தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரிலீசுக்கு முன் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம் சைக்கோ. காரணம் இதன் இயக்குனர் மிஸ்கின். 

தற்கால தமிழ் இயக்குனர்களில் புத்திசாலித்தனமான இயக்குனர் மிஸ்கின் என்பதால் ஏற்பட்டது அந்த எதிர்பார்ப்பு. 

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மிஸ்கின்..?

படத்துக்கு வருவோம்.

தொடர் கொலைகள் நிகழ்த்தும்  சீரியல் கில்லரான ஒரு சைக்கோ (ராஜ்குமார்),  ரேடியோ ஜாக்கி தாஹினியை (அதிதி ராவ்) கடத்துகிறான்.  பார்வைத்திறன் அற்ற  தன் காதலன் கவுதம் (உதயநிதி) எப்படியும் தன்னை தேடி வந்து மீட்டு செல்வான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சவால் விடுகிறாள் தாஹினி. கொலைகாரனிடமிருந்து தாஹினி தப்பித்தாளா?  கவுதம் அவளை மீட்டானா ? சைக்கோ கொலைகாரன் என்ன ஆகிறான் இறுதியில்?  என்பது தான் படத்தின் மையக்கரு.

படத்திற்கு A சான்று தணிக்கை குழுவால் வழங்கப்பட்டிருக்கிறது.  அதற்கு மேல் ஏதேனும் இருந்திருந்தால் அதையும் வழங்கியிருக்கலாம். அவ்வளவு கொடூர காட்சிகள்  நிரம்பியுள்ளன படத்தில். இளநீர் சீவுவது போல் தலைகளை சீவுகிறான் சைக்கோ கொலைகாரன். தெறித்து விழுகிறது தலைகள். நகரின் முக்கிய இடங்களில் அங்கங்கே தலையில்லாத முண்டங்களை கிடத்தி வைக்கிறான் வில்லன். படத்தில் ரத்தக்கறை இல்லாத காடசிகள் ரொம்ப குறைவு. 

ஒவ்வொரு சைக்கோ கொலைகாரனுக்கும் அவன் சைக்கோ கொலைகாரனாக மாறியதற்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கும். இந்தப் படத்திலும் அது இருக்கிறது. ஆனால் படத்தில் அவன் நிகழ்த்தும் கொலைகளுக்கும்  அந்த காரணங்களுக்கும் உள்ள தொடர்பை பொருத்திப் பார்க்க முடியவில்லை. கொலைகளுக்கு நியாயம் செய்யத்தக்கதாய் அந்த காரணங்கள் இல்லை.  

படத்தின் லாஜிக் பற்றி நிறைய விமர்சனங்களை பார்த்துவிடடோம் . படம் நெடுக லாஜிக் குளறுபடிகள். மிஸ்கின் படத்தில் இவ்வளவு லாஜிக் ஓட்டைகள் என்பது சற்றும் எதிர்பாராத ஒன்று. 

அதுபோல் காரெக்டர்கள். படத்தில் வரும் கமலாதாஸ் (நித்தியா மேனன்) காரெக்டர் பாலா பட கேரக்டர் மாதிரி இருக்கிறது. படத்தின் இன்னொரு சைக்கோ இந்த கமலா தாஸ். சிஸ்ட்டர் ரேச்சல் காரெக்டரும் (ப்ரீத்தம்)  கிடடத்தட்ட ஒரு சைக்கோ தான்.

கையாலாகாத போலீஸ் முத்துராம் ஆக இயக்குனர் ராம். அவர் AM ராஜா ரசிகராம். டென்ஷனான நேரங்களில்  AM ராஜா பாடல்களை பாடுவாராம். எனக்கு தெரிந்து AM ராஜாவுக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகரை இப்போது தான் பார்க்கிறேன். தானே வலிய சென்று சைக்கோ வில்லனிடம் மாட்டி அவன் கையால் வெட்டுப்பட்டு சாகும் முன் "தனிமையிலே இனிமை காண முடியுமா" பாடல் பாடுகிறார். 

அதே போல் தானே வலிந்து போய் சைக்கோவிடம் சாகும் இன்னொரு கேரக்ட்டர் ராஜநாயகமாக வருபவர்  சிங்கம் புலி. இவரது  கிச்சு கிச்சு மூட்டலில் சின்ன சிரிப்பு கூட வரவில்லை. மிஸ்கினுக்கு காமெடி வராது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியிருக்கிறது. 

பவா செல்லத்துரை, ஷாஜி ஆகிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக வேலை ஒன்றும் கொடுக்கவில்லை மிஸ்கின். அதற்கென அவரை பாராட்டலாம். இல்லையெனில் இந்த எழுத்தாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் போயிருக்கும்.

கண் தெரியாத ஹீரோவாக உதயநிதி. பாவம் அவரால் என்ன முடியுமோ அதை செய்திருக்கிறார். அந்தளவுக்கு மட்டுமே அவரை கச்சிதமாய் பயன்படுத்தியிருப்பதில் பாராட்டை பெறுகிறார் இயக்குனர் மிஸ்கின். 

படத்தின் கடைசி காடசியில் ஹீரோயின் சொல்லும் அந்த மெஸேஜ் எல்லாம் மிஸ்கின் படத்துக்கு தேவை தானா ? 

படத்தில்  ப்ளஸ் எதுவும் இல்லையா என்று கேட்க்கிறீர்களா ? கண்டிப்பாக இருக்கிறது. நிறைய ஓட்டைகள் இருந்தும் படம் எங்கும் அலுப்பூட்டவில்லை. சீரான வேகத்தில் படம் இரண்டரை மணி நேரமும் நகர்கிறது. அது தான்  மிஸ்கின் ஸ்டைல். கொலைகாரனின் முகத்தை அறிமுக காடசியிலேயே காண்பித்து விட்டு துணிச்சலாய் கதையை நகர்த்தி கொண்டு சென்றதில் மிஷ்கினின்  திறமை மற்றும் தன்னம்பிக்கை  பளிச்சிடுகிறது. 

தன்வீரின் ஒளிப்பதிவு படத்துக்கு செம ப்ளஸ். அற்புதமான கோணங்களில் காமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. 

ரேச்சல் ஆக நடிக்கும் ப்ரீத்தம் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் படம் பார்க்க வந்தவர்களை தன நடிப்பால் நிஜமாகவே மிரட்டியிருக்கிறார்.  

நடிப்பில் குறிப்பிட்டு சொல்லபபட வேண்டியவர் சைக்கோ அங்குலிமாலா வாக வரும் ராஜ்குமார். வித்தியாசமான நடிப்பு. வெயிட்டான ரோலை லாவகமாக கையாண்டிருக்கிறார். 

படத்தின் இறுதிப்பகுதியில் வரும் அந்த சடங்கு தொடர்பான காட்சி  அமைப்பு பிரமாதம். அங்கே நிற்கிறார் இயக்குனர் மிஸ்கின். 

அப்புறம், இளையராஜா. பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். சில காடசிகளில் இசையற்ற மௌனமே பின்னணி. அருமையான நொடிகள் அவை. பாடல்களில் யுவனின் சாயல்  தெரிகிறது. தாயின் மடியில் மற்றும் நீங்க முடியுமா பாடல்கள் பிரமாதத்துக்கும் மேலே.

சைக்கோ, நிறைய குறைகள் இருந்தாலும் மிஸ்கின் பிராண்டுக்காக பார்க்கலாம்.
~

Comments