சினிமா - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020)
சினிமா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020)
படம் பார்க்க ஆரம்பித்த உடனேயே டைட்டிலில் வரும் நன்றி கார்டில் தெரிந்துவிட்டது டைரக்டர் வழக்கமான ஆள் இல்லை என்று.
என்னை சற்று நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார வைத்தது அது. நம்பிக்கை கடைசி வரை பொய்க்கவில்லை.
வெறும் ஆறே ஆறு காரெக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படத்தை இப்படிக்கூட படு சுவாரஸ்யமாக கொண்டு செல்லமுடியுமா என்பது செம ஆச்சரியம்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் ஹீரோ. ஒரு ரூபாய்க்கு கூட கணக்கு பார்க்கும் ஹீரோயின். இவர்கள் இணைந்தால்...
அதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமான அதகளம். கதையை சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது கிடைக்கும் அந்த தனித்துவமான அனுபவம் கிடைக்காமல் போய்விடும். ஸோ, தியேட்டரில் அந்த அனிபவத்தை அனுபவியுங்கள்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் நிறைய லாஜிக் ஓட்டைகளுடன் கூடிய அந்த கதை. லாஜிக் பற்றி சிந்திக்கவிடாமல் அடுத்தடுத்து வரும் சம்பவங்களும், படம் நெடுக இழையோடும் நகைச்சுவையும், எதிர்பாரா ட்விஸ்ட்டுகளும் நம்மை படத்துடன் முழுமையாக ஒன்றி பயணிக்க வைக்கின்றன.
இடைவேளை பிளாக்கில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராததென்றால், க்ளைமேக்ஸில் அதைவிட பிரமாத ட்விஸ்ட்.
தேசிங் பெரியசாமியின் எழுத்தும் இயக்கமும் போட்டி போட்டு படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.
கார்த்திக், அர்விந்த்சாமி, மாதவனுக்கு பின் சாக்லெட் பாய் ஹீரோ இமேஜ் துல்கருக்கு பாந்தமாய் பொருந்துகிறது.
துல்கர் நண்பன் காலீஸ் ஆக வரும் ரக்ஷன் இரண்டாம் ஹீரோவாய் படம் முழுக்க வந்து லந்து பண்ணுகிறார்.
ஹீரோயினாக வரும் ரீத்து வர்மாவும் செம நடிப்பு. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரியான முகம்.
ஆனால் பார்க்கும் அனைவரையும் கவரும் நடிப்பு கௌதம் மேனனுடையது. மனுசன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் நடிப்பில். குயின் வெப் சீரியலிலேயே டைரக்டர் ஸ்ரீதர் காரெக்டரை அருமையாக தன் நடிப்பால் கொண்டு வந்திருப்பார். இந்த படத்தில் DCP பிரதாப் ஆக தூள் பரத்தியிருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பு, உடல்மொழி, ஸ்டைல் எல்லாமே பிரமாதம்.
முழு நடிகராகவும் ஒரு ரவுண்டு வர GVM க்கு வாழ்த்துகள்.
படத்தில் காமெரா, எடிட்டிங், பின்னணி இசை சூப்பர் என்றால் லாஜிக்கே இல்லாத கதை எல்லாவற்றையும் விட சூப்பர்.
உடலும், உள்ளமும் ரொம்ப சோர்வாய் இருப்பது போல் ஃபீல் பண்ணுகிறீர்களா?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாருங்கள்.
துள்ளிக் குதித்து அடுத்த வார அலுவலக/குடும்ப பிஸி ஷெட்யூலுக்கு புத்துணர்ச்சியாய் தயாராகலாம்.
~
சுபம்
Comments
Post a Comment