அசுரன் - தமிழ் (2020)
சினிமா
அசுரன் (2019)
இப்படி ஒரு பவர்ஃபுல்லான இண்டெர்வல் பிளாக்கைப் பார்த்து பலநாள் ஆச்சு. அந்த 10 நிமிடங்களும் செம.
~
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நல்ல படங்களும் வந்து கொண்டு தான் இருக்கும் என்ற நம்பிக்கையை மீண்டும் வலுவாக மெய்ப்படுத்தியிருக்கிறான் அசுரன்.
~
பொறுப்பான ஒரு குடும்பத்தலைவனாக, சிவசாமியின் பார்வையில் விரிகிறது கதை.
இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு சின்னஞ்சிறு துண்டு நிலத்துக்காக ஏற்படும் பகை எப்படி தனி நபர் அவமானத்தில் துவங்கி, பழியாக மாறி, பழிக்குப் பழியாக ஆகி, தொடர் கொலைகளில் முடிந்து.... இறுதியில் பொயட்டிக்கான ஒரு முடிவில் வந்து முடிந்துபோவதை சொல்லும் கதை.
மூலக்கதை பூமணி எழுதிய 'வெக்கை'. அதற்கு அழகான திரைக்கதை கொடுத்து, பளிச்சென வசனங்கள் வைத்து, வித்தியாசமான கோணங்களில், விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்து இறுதியில் உருக வைத்துவிடுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
தமிழ்த் திரையுலகை அடுத்த லெவெலுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.
~
படத்தின் பெரும்பலம் சிவசாமியாக நடிக்கும் தனுஷ். வாழ்ந்திருக்கிறார் மனுசன் படம் முழுவதும். தனுஷுக்கு இது ஒரு மைல்கல் மூவி.
தனுஷ் அளவுக்கு சிறந்த நடிகர்கள் தற்போதைய தமிழ்த் திரையுலகில் எவரும் இல்லை என்பது தான் உண்மை.
பலவீனமான குடும்பத் தலைவனாக இருக்கும் சிவசாமி மகனுக்கு ஆபத்து என்றதும் சீறிப்பாயும் பொறுப்பான தகப்பனாக மாற்றம் பெறும் அந்த பரிமாணம்... அற்புதம். தனுஷ் எங்கேயோ போய்விட்டார்.
அந்தக் காட்சியில் அரங்கில் எழும் கரவொலியை பாகுபலிக்கு பிறகு நான் இப்போது தான் பார்க்கிறேன்.
~
சிவசாமியின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் அசத்துகிறார். கோழையான கணவனை திட்டும்போதெல்லாம் அவர் காட்டும் வெறுப்புணர்வு தொணிக்கும் முகபாவம் அருமை. கொலையுண்டு இறந்த மூத்தமகனுக்கு படையல் வைக்கும்போது அவரின் ஆக்ரோஷம் பிரமிக்க வைக்கிறது.
~
படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொருவர் கென். சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரமாக நடித்திருக்கும் கெம் அப்படியே அந்த கேரக்டராக வாழ்ந்திருக்கிறார். கோழையான அப்பாவின் மீது காட்டும் கோபமும், வெடுக் வெடுக்கென்ற வெட்டும் பேச்சும் அருமை என்றால், தன்னைக் காப்பாற்ற ஒரு கணத்தில் மாவீரனாக சிவசாமி மாறும்போது... அதே அப்பா மீது ஏற்படும் பிரமிப்பை அவர் வெளிப்படுத்தும் காட்சியில் அசரடித்துவிடுகிறார். தேர்ந்த ஒரு நடிகர் இதோ கண்முன் உருவாகிக் கொண்டிருக்கிறார். கருணாஸ் சின் மகனா இவர்? நம்பவே முடியவில்லை.
முருகனாக நடித்திருக்கும் டீஜே யும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
பாலாஜி சக்திவேலை இன்ஸ்பெக்டராக பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. சிறு வேடம் என்றாலும் நன்றாக செய்திருக்கிறார்.
பாட்டாளி மக்களுக்காக குரல் கொடுக்கும் பொதுவுடைமைவாதி வக்கீல் வேணுகோபால் சேஷாத்ரி யாக பிரகாஷ்ராஜ். மன்னார்குடி காரர்களுக்கு தெரிந்த வக்கீல் ரங்கன் அவர்களை இப்பாத்திரப் படைப்பு நினைவூட்டுகிறது. நடை, உடை, மானரிஸம், ஆர்த்தடாக்ஸ் குடும்பப்பின்னனி எல்லாமே ரங்கன் அவர்களை மனதில் வைத்து உருவாக்காப்பட்டதுபோல் தெரிகிறது. என்ன, ரங்கன் ஸ்மோக்கர். சேஷாத்ரி சிகரெட் குடிக்கவில்லை. அவ்வளவு தான்.
~
படத்தின் க்ளைமேக்ஸ் தான் படத்திலேயே ஆகச்சிறந்த தருணம். என்ன ஒரு தீர்க்கமான பார்வை சிவசாமி எடுக்கும் முடிவில். கடைசியாக சிறைக்கு போகும் முன் அவர் பேசும் வசனம் ஆடியன்ஸை எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. இயக்குனரின் வெற்றி இங்கு தான் முழுமையடைகிறது.
~
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் ஜிவி பிரகாஷின் இசை. இந்த மனிதருக்குள் தான் எவ்வளவு இசைத் திறமை ஒளிந்திருக்கிறது. இதை விட்டுவிட்டு அவர் கதானாயகனாக நடிக்க துடிப்பது ஏன் என்றே புரியவில்லை. நடித்தது போதும் ஜீவி. இசை தான் உங்கள் பலம். மீண்டும் இசைத்துறைக்கு வாருங்கள்.
~
படத்தில் குறைகளும் இருக்கின்றன. அந்த நீண்ட பிளாஷ்பேக். சிவசாமி ஏன் ஒடுங்கினான் என்பதற்காக சொல்லப்படும் பிளாஷ்பேக்கில் வீரியம் போதவில்லை. கொஞ்சம் இழுவையாக செல்கிறது அப்பகுதி.
~
கொஞ்சம் பிசகியிருந்தாலும் பிரச்சாரப் படமாக மாறியிருக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய இருந்தபோதிலும் அதை வெற்றிகரமாக கடந்து உலகத்தரமான ஒரு படமாக அசுரனை வழங்கியதில் வெற்றிவெற்றிருக்கிறார் வெற்றிமாறன்.
~
அண்ணாந்து பார்த்து வியக்கும் உயரத்தில் வெற்றிமாறன்+தனுஷ் கூட்டணி.



Comments
Post a Comment