சினிமா - விஸ்வாசம் (2019)

சினிமா

விஸ்வாசம் (2019)


முரட்டு கிராமத்தானாக அடிதடி அதிரடி பண்ணிக்கொண்டு பஞ்சாயத்து செய்யும் தூக்குதுரையை சில முட்டல் மோதல்களுக்கு பின் காதலிக்கும் மும்பை டாக்டர் நிரஞ்சனா அப்பா அனுமதியுடன் திருமணம் செய்து கொள்கிறார். 

மணமாகி, ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னும் அடிதடியை நிறுத்தாமல் பெண்ணையும் தூக்கிக்கொண்டு சண்டை செய்வதை பொறுக்க முடியாத நிரஞ்சனா குழந்தையுடன் மும்பை சென்று விடுகிறார். 

இதற்கிடையே பல ஆண்டு பிரச்சினைகளுக்கு பின் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் கிராமத்து கோவில் திருவிழா நடக்க ஏற்பாடு ஆக, திருவிழாவுக்கு மனைவி, குழந்தையை அழைத்து வர மும்பை செல்லும் தூக்குதுரை நிரஞ்சனாவை அங்கு  சந்திக்கிறார்.  

மும்பையில்  நிரஞ்சனாவுக்கும், குழந்தைக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தில் இருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றுகிறார், தன் குழந்தை ஸ்வேதா விருப்பப்படி ஓட்டப்பந்தயத்தில் அவள் வெற்றி பெற எவ்வாறு உதவுகிறார், அவர்களை குறி வைத்த வில்லனை என்ன செய்கிறார் என்பதை செண்டிமெண்ட் குழைத்து அருமையாக பிரஸண்ட் செய்திருக்கிறார் இயக்குநர் சிவா.

பன்ச் டயலாக்ஸ் , அரசியல் சிலேடைகள் இல்லாமல் யதார்த்தமான ஒரு முரட்டு, பாசப்போராட்ட கிராமத்தானாக தூக்குதுரை கேரக்டரில்  வெளுத்து வாங்கியிருக்கும் 'தல' அஜித்துக்கு  பாராட்டுக்கள். 

ஃபிளாஷ்பேக்கில் வரும் இளவயது அஜித்திடம் இருக்கும் துடிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. ரொம்ப வருஷமாச்சு இதுபோல் அவரை பார்த்து. சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் தூள் பரத்தியிருக்கிறார். சூட் கோட்டில் மட்டுமல்ல வேஷ்டி சட்டையிலும் கூட அஜித் அழகன் தான். 

தல  ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கச்சிதமாக அளித்திருக்கிறார் இயக்குனர்.

நயன்தாரா நடிப்பு கன கச்சிதம். இவ்வளவு ஃபிட் ஆக வேறு யாரும் நிரஞ்சனா ரோலை செய்ய முடியாது.

படத்தின் இரண்டாவது ஹீரோ இமான் தான். பாடல்களும் பின்னணியும் அருமை. வானே..வானே.. பாடலும், கண்ணான கண்ணே பாடலும் ... சான்ஸே இல்லை 2019 இன் பெஸ்ட் லிஸ்டில் கண்டிப்பாக இவை இரண்டும் இடம்பெறும்.

இடைவேளைக்கு பின் கண்ணான கண்ணே பாடலின் இசையை திரும்ப திரும்ப பிஜிஎம் மில் கொண்டு வருவது காட்சிகளுக்கு கூடுதல் கனத்தை தருகிறது. இதயத்தை இளக செய்கிறது அந்த மெட்டு. 

ஜெகபதி பாபு வில்லன் ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நன்றாக செய்திருக்குறார்கள். விவேக் முகம் சுழிக்க வைக்கிறார். படத்தின் திருஷ்டி பொட்டு அவர்.

ஒளிப்பதிவாளர் வெற்றி கிராமத்து பசுமையையும், மும்பையின் பகட்டையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். 

படத்தின் கடைசி அரைமணி நேரம் தந்தை மகளின் பாச போராட்டத்தை செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து அருமையாக விவரிக்கிறார் இயக்குனர்.

பெற்றோரின் விருப்பு வெறுப்புகளை குழந்தைகள் மீது திணிக்கவேண்டாமே என்ற ஒரு நல்ல மெஸேஜையும் படத்தின் முடிவில் இயக்குனர் சிவா சொல்கிறார். 

நிஜமாகவே நல்ல மெஸேஜ் தான் அது.

எந்த படத்தின் இறுதி சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இன்றி உச்சபட்ச  அமைதி நிலையில் ரசிகர்களை அடக்கி வைக்கிறதோ அந்த படம் தான்  பார்ப்பவர்களின் உணர்வுகளுக்குள் ஊடுருவி செல்லும் வல்லமை பெற்ற படம். 

அந்த வல்லமை விஸ்வாசம் படத்திற்கு இருக்கிறது.

வாழ்த்துகள் டீம் விஸ்வாசம். 

❤️


Comments