சினிமா - பேட்ட (2019)

சினிமா

பேட்ட (2019)

இப்படி ஒரு ரஜினி படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு. கடைசியா சிவாஜி. அதற்கப்புறம் அவர் நடித்த படங்கள் எல்லாம் ஏனோ அவர் படம் மாதிரியே இல்லை. 

டைட்டிலே செம அசத்தல். இயக்கம் "Ever Thalaivar's Fan" Kaarthik Subburaj என்று வருகிறது. தலைவரை அவர் ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புவார்களோ அப்படியே காட்டியிருக்கிறார் கார்த்திக். அதற்கு அவருக்கு ஒரு சபாஷ்.

மலைப்பிரதேச கல்லூரி ஹாஸ்டல் ஒன்றிற்கு வார்டனாக வருகிறார் நடுத்தர வயது ரஜினி. சீனியர்களின் கொட்டத்தை அடக்கி, மாணவர்களின் அன்பை பெறுகிறார். ஒரு காதல் ஜோடிக்கு ஆதரவும் அளிக்கிறார். அந்த காதலனுக்காக காதலியின்  அம்மாவிடம் தூது போகிறார். 

திடீரென்று ஒரு நாள் அந்த மாணவனை கொல்ல அடியாள்கள் ஹாஸ்டலில் புகுந்து துவம்சம் செய்யும்போது அந்த மாணவனை காப்பாற்றுகிறார் ரஜினி. 

ஏன் அந்த கல்லூரிக்கு வார்டனாக ரஜினி  வந்தார் என்பதையும், அந்த மாணவன் யார் என்பதையும் அவனை கொல்ல ஏன் சிலர் முயல்கிறார்கள் என்பதையும் ரஜினி அவனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் "பேட்ட" படத்தின் கதை.

இடைவேளைக்கு பிறகு வரும் ஃபிளாஷ்பேக்கில் இளமைக்கால ரஜினி   அதகளம் பண்ணுகிறார். முரட்டுக்காளை ரஜினியை நினைவூட்டுகிறார். 

முழுக்க முழுக்க ரஜினி படமான பேட்ட யில் ரஜினியிசம் சீனுக்கு சீன் தெறிக்கிறது. 

நவாஸ்ஸுதீன் சித்திக் ஆகட்டும், விஜய் சேதுபதி ஆகட்டும், சசிகுமார் ஆகட்டும், பாபி சிம்ஹா ஆகட்டும் எல்லோரும் ரஜினியுடன் வரும் சீன்களில் ரஜினி அனைவரையும் விட தூக்கலாகவே இருக்கிறார். இதான் ரஜினிஃபைடு. 

இடைவேளை வரை படு விறுவிறுப்பாக செல்லும் கதை இடைவேளைக்கு பிறகு மதுரை, உத்தரபிரதேசம் என்று ஊர் சுற்றுகிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். 2 மணி 51 நிமிடங்கள் இந்த கதைக்கு ரொம்ப நீளம் தான்.

படத்தில் குறிபிட்டு சொல்ல வேண்டியவை இசை மற்றும் ஒளிப்பதிவு. அனிருத் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாம் படம் வரும் முன்பே சூப்பர்டூப்பர் ஹிட் ஆகிவிட்டவை. பின்னணி இசையும் பிரமாதம். 

திருவின் ஓலிப்பதிவும் உயர்தரம். அதுபோல் பீட்டர் ஹெயினின் சண்டை காட்சிகள். செம ஃபைட் சீன்ஸ். 

நவாஸ்ஸூதீன் சித்திக்கின் பாத்திரப் படைபில்  இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். 

"கம்மாட்டிப்பாடம்" மணிகண்டன் ஆச்சாரி அடியாள்களில் ஒருவராக காட்டப்பட்டு  வீணடிக்கப்பட்டிருக்கிறார். வருத்தமாயிருக்கிறது. "அடி பொலி.. மகாநடிகன் சாரே நீ.." அவர் வாயால்  செம பஞ்ச். 

விஜய் சேதுபதி எல்லாம் ரஜினியின் முன் பச்சா. அவரே ஒரு சீனில் "மாஸ்" என்கிறார். 

முற்றிலும் எதிர்பார்க்காத செம ட்விஸ்ட் க்ளைமேக்ஸில்.  வாலியை ராமன் வதம் செய்த கதையை ரஜினி அந்த நேரத்தில் சொல்வது கிளாசிக். கார்த்திக் சுப்புராஜ் டச் அது.

ரஜினி ரசிகனின் நீண்ட நாள் ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறார் கார்த்திக். 

ஒரு ரஜினி ரசிகனாக அவருக்கு என் நன்றி. 

❤️

Comments