சினிமா - கொலைகாரன் - 2019
சினிமா
கொலைகாரன் - 2019
எடுத்த எடுப்பிலேயே Suspect X ஜப்பானிய மூலப்பட படைப்பாளர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார்கள் டைட்டில் கார்டில். அந்த ஸ்ட்ரெயிட்ஃபர்வர்ட்னெஸ்க்காக முதலில் படத்தின் இயக்குனருக்கு ஒரு ஹாய் சொல்லிவிடலாம்.
திருஷ்யம் கூட இந்த ஜப்பானிய படத்தின் தழுவல் தான் என்பது படம் பார்க்கும்போது மெல்ல மெல்ல புரிகிறது. படம் முடியும்போது நன்றாகவே புரிகிறது.
தடம் கூட இதே மூலக்கதையின் தழுவல் தான் என்பதும் புரிகிறது.
~
சரி, படத்துக்கு வருவோம்.
ஒரு கொலை நடக்கிறது. அதை DCP கார்த்திகேயனாக வரும் அர்ஜுன் துப்பு துலக்குகிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டுவரும்போது விஜய் ஆண்டனி நான் தான் கொலை செய்தேன் என்று சரண்டர் ஆகிறார்.
உண்மையான கொலையாளி என்று நம்பப்பட்டு கிட்டத்தட்ட குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட விஜய் ஆண்டனி உண்மையான கொலையாளி அல்ல என்றும் கொலையாளி வேறு யாரோ என்னும் சந்தேகம் DCP க்கு ஏற்பட்டு அது வலுத்துக் கொண்டே போகிறது.
இதே கொலையை காவல்துறைக்கு வெளியே துப்பறியும் நாசரும் எல்லோரும் நம்பும் அதே விஜய் ஆண்டனி தான் கொலையாளி என்னும் ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்க...
காட்சிகள் சட சடவென மாறி தனது சந்தேகம் நியாயமானது, கொலையாளி வேறு நபர் என்பதை அர்ஜுன் அருமையாக துப்பு துலக்கி... நான் தான் கொலை செய்தேன் என்று சரண்டர் ஆன விஜய் ஆண்டனியிடம் ஆதாரத்துடன் நீ கொலையாளி அல்ல என்று அதை நிரூபித்து இபிகோ வுக்கு வெளியே அருமையாக ஒரு நியாயம் செய்து கேசை முடிக்கிறார் அர்ஜுன்.
நிஜமாகவே அருமையான கதை. விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் படத்தில் சஸ்பென்ஸை ஏற்றிக்கொண்டே போகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். அவருக்கு துணையாக தட தடக்கும் சைமன் கே. கிங் கின் பின்னணி இசையும், முகேஷின் அற்புதமான காமிரா கோணங்களும்.
நேர்சீரான கதை. ஒரு இடத்திலும் டைவர்ட் ஆகவில்லை. படத்தின் இடையே ஊடாடும் இரு பாடல்கள் அப்போதைக்கு தேவையற்றவையோ என நினைத்தால் கிளைமாக்ஸில் அப்பாடல்களின் அவசியம் புரிகிறது.
படம் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இருவருக்கும் ஒரே அளவில் சமமான முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டாலும் அர்ஜுன் தனது அனுபவ பலத்தில் ஈஸியாக ஸ்கோர் செய்துவிடுகிறார். விஜய் ஆண்டனி தனது எல்லைகளை உணர்ந்து அந்த அளவிலேயே மட்டும் நடித்துள்ளார்.
கதாநாயகி ஆஷிமா நார்வல் லுக்கு நல்ல அறிமுகம் இப்படம். சீதாவும் தனது அனுபவ நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
துருவங்கள் 16 க்கு பிறகு வெளிவந்துள்ள நல்ல ஒரு புலனாய்வுப் படம் "கொலைகாரன்".
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் அருமையான விருந்து.
கொண்டாடி மகிழலாம்.
~


Comments
Post a Comment