பத்லாப்பூர் (2015) ஹிந்தி
பத்லாப்பூர் (2015) ஹிந்தி
~
கோடாலி மறக்கலாம் ஆனால் மரம் மறக்காது - என்னும் ஆப்பிரிக்க பழமொழியுடன் ஆரமிக்கிறது படம். படத்தின் ஒரு வரியும் அது தான்.
~
பழி வாங்கும் கதை தான். ஆனால் ஜஸ்ட் பழிவாங்கல் அல்ல. மனித மன உணர்வுகளையும், நடைமுறை வாழ்க்கையையும் கலந்து யாரை யார் பழிவாங்குகிறார்கள் என்ற கவித்துவமான இறுதிக்காடசியுடன் படத்தை நிறைவு செய்திருக்கும் விதம் அருமை.
டைட்டிலில் படத்தின் பெயருக்கு கீழே " Dont miss the beginning" என்று போட்டிருக்கிறார்கள்,
படம் பார்க்கும் போது அது எவ்வளவு உண்மை என்று தெரிகிறது.
~
படத்தின் ஆரம்ப காடசி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு வங்கிக் கொள்ளைக் காட்சி. அது ஏற்படுத்தும் பரபரப்பும், பதைபதைப்பும்.., பார்க்கும் போது தான் அதனை உணர முடியும்.
சமீபகால திரைப்படங்களில் இத்தகைய ஒரு ஆரம்ப காட்சி வேறு எந்தப் படத்திலும் இல்லை. அதை நேர்த்தியாக படமாக்கியிருப்பதில் தெரிகிறது இயக்குனரின் திறமை, எடிட்டிங்கும், ஒளிப்பதிவும் காடசிக்கு விறுவிறுப்பேற்ற அற்புதமான ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றன.
ஒரு வங்கி கொள்ளை. எதிர்பாராமல் உயிரிழக்க நேரிடும் ஒரு இளம் தாய் மற்றும் சின்னஞ்சிறு மகன், கொள்ளையர்கள் இருவரில் ஒருவர் சிறைக்கு செல்வது, இன்னொருவர் பணத்துடன் தப்பிப்பது, தனது காதல் மனைவி மற்றும் மகன் இருவரையும் இழந்து நிற்கும் கதாநாயகன் கொள்ளையர் இருவரையும் பழிவாங்க காத்திருக்கும் காலம், பழிவாங்கினானா ? எப்படி பழி வாங்குகிறான்? கதாநாயகனை பின்தொடரும் காவல்துறை அவனை பிடிக்க முடிந்ததா ? இவைகளை திரையில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி பிரமாதத்துக்கும் மேலே.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் நம்மை வியந்து பார்க்க வைத்து விடுகிறார்.
~
படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திர படைப்பும் மிகவும் அருமை.
வருண் தவான் தான் கதாநாயகன். ஆனால் நடிப்பில் நம்மை வெகுவாக கவர்ந்துவிடுபவர் கொள்ளைக்காரர்களில் ஒருவனாக வந்து சிறைக்கு செல்லும் லயாக் ஆக நடிக்கும் நவாஸுதீன் சித்திக். என்ன மாதிரியான ஒரு நடிப்பு அது. அவர் நடிக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே முடிக்கவில்லை. அந்த எள்ளல், துள்ளல், கோபம், செம நடிப்பு. தமிழில் எவருடனும் இவரை ஒப்பிட இயலவில்லை.
ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தப்பித்த கொள்ளைக்காரனின் மனைவியாக வருகிறார். படு கவர்ச்சி காட்சிகளில் அவரைப் பார்க்க தர்ம சங்கடமாக இருக்கிறது.
காலாவில் ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யுமா குரேஷி லாயக்கின் காதலியாக, ஒரு விபச்சாரியாக வருகிறார். படத்தில் நடிக்க அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்ட பெண் கதாபாத்திரம் அவருடையது. நன்றாகவே நடித்திருக்கிறார்.
~
படம் ஒரு இத்தாலி நாவலின் தழுவல். மறக்காமல் அந்த நாவலாசிரியருக்கு படத்தில் கிரெடிட் கொடுத்துவிடுகிறார்கள். அந்த வகையில் பாராட்டலாம்.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் மிக அருமை. படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு பக்க பலமாக இவை இருக்கின்றன.
இசை சொல்லிக் கொள்ளும்வண்ணம் இல்லை. பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான். இன்னமும் நன்கு முயற்சித்திருக்கலாம்.
~
நல்ல திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம். நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.
~


Comments
Post a Comment