அஸ்வத்தாமன் - 13

அஸ்வத்தாமன் 


(தொடர்ச்சி...13)


பிரம்மாஸ்திரத்தை தவிர வேறு எந்த ஆயுதத்தாலும் அஸ்வத்தாமனை அழிக்க முடியாது என்று முடிவு செய்த அர்ஜுனன் ஆற்றங்கரையில் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருந்த அஸ்வத்தாமனை நோக்கி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான்.

பாண்டவர்கள் உயிருடன் இருப்பதையும், அர்ஜுனன் தன மீது பிரம்மாஸ்திரம் செலுத்தியுள்ளதையும் அறிந்த அஸ்வத்தாமன் கையில் இருந்த தர்ப்பை புல்லில் பிரம்ம மந்திரங்களை உருவேற்றி அதையே பிரம்மாஸ்திரமாக மாற்றி பாண்டவர்களை நோக்கி செலுத்துகிறான். 
~

இரு பிரம்மாஸ்திரங்களும் மோதிக்கொண்டால் பூமியில் எதுவுமே மிச்சமிருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த வியாச முனிவர் தன் தவ வலிமையால் அந்த அஸ்திரங்களை அந்தரத்திலேயே நிறுத்துகிறார். 

அர்ஜுனனிடமும் அஸ்வத்தாமனிடமும் பிரம்மாஸ்திரங்களை திரும்ப பெறுமாறு அறிவுறுத்துகிறார்.

அதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனன் தனது பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்கிறான். ஆனால் அஸ்வத்தாமன் வியாசரின் அறிவுரைகளை ஏற்க மறுக்கிறான். பாண்டவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற தனது நிலையில் உறுதியாக நிற்கிறான். 

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு தங்களில் ஒருவரை பிரம்மாஸ்திரத்துக்கு பலியாக தர முன்வருகிறார் தருமர். யாருமே எதிர்பாரா வண்ணம் அஸ்வத்தாமன் தனது பிரம்மாஸ்திரத்தை உத்தரையின் வயிற்றில் வளரும் கருவை நோக்கி செலுத்துகிறான். 

உத்தரை  அபிமன்யுவின் மனைவி. சக்கர வியூகத்தில் சிக்கி அபிமன்யு போரில் இறந்தவுடன் உடன்கட்டை ஏற முயன்றாள். அவள் கர்ப்பவதியாக இருந்ததால் அனைவரும் அவளை தடுக்கிறார்கள். 

பாண்டவர்களின் வாரிசாக உத்தரையின் கருவில் வளரும் குழந்தை மட்டுமே  இப்போது எஞ்சியிருக்கிறது. 

அந்த  கருவை அழிக்க உறைவிடம் நோக்கி செல்கிறது பிரம்மாஸ்திரம். கருவறுத்தல்  என்ற சொல்லுக்கும்  செயலுக்கும்  காவியங்களில் முதல் வழி வகுத்தவனாகிறான் அஸ்வத்தாமன். 

கருவில் இருக்கும் குழந்தை பிரம்மாஸ்திரத்தால் கொல்லப்படுகிறது.
~

அஸ்வத்தாமனின் செயலால் கிருஷ்ணன் கடும் கோபம் கொள்கிறார். உடனடியாக மாயா ரூபம் தாங்கி உத்தரையின் கருவில் வளரும் குழந்தைக்கு தெய்வீக பாதுகாப்பு அளித்து மீண்டும் உயிரூட்டுகிறார். 

அந்த குழந்தை தான் பரீக்ஷித்து. பாண்டவர்களின் ஒரே வாரிசாக அவர்களுக்குப் பின்னே இந்த பாரதத்தை ஆளப்போகிறது. 
~

கருவறுக்க முடியாத தோல்வியும், தீரா கோபமும், துக்கமும், தனிமையும் அஸ்வத்தாமனை அலைக்கழிக்கின்றன. சிறு துரும்பென தன்னை உணர்கிறான். ஆற்றாமையின் ஜுவாலையும்  கண்ணீரும் அவன் விழிகளில் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன. 

"குருக்ஷேத்திர யுத்தத்தில் ஒவ்வொருவரும் தம் பங்கை அளித்து வீர சுவர்க்கமடைந்தனர். நான் யாருக்கும் பயனற்று தோற்று நிற்கிறேன். தந்தையே என்னை ஏன் தனியே விட்டு சென்றீர். துரியோதனா... நண்பா... நான் கையாலாகாதவனாக நிற்கிறேனே. என் வார்த்தைகளை நம்பி நீ கண் மூடிவிட்டாய். நான் இனி எவ்வாறு கண் துயில்வேன்..." என்று அரற்றுகிறான் அஸ்வத்தாமன்.
~

கருவை நோக்கி பிரம்மாஸ்திரத்தை ஏவிய அஸ்வத்தாமனின் செயல் கிருஷ்ணனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. தனது சுதர்சன சக்கரத்தை அஸ்வத்தாமன் மீது செலுத்துகிறார். அதை பணிந்து நமஸ்கரிக்கிறான் அஸ்வத்தாமன். கீழே விழுந்து பணிந்த அஸ்வத்தாமனை அர்ஜுனன் சிறை பிடித்து கிருஷ்ணன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். கிருஷ்ணன் திரௌபதியிடம் அழைத்து செல்ல பணிக்கிறார். 

 உபபாண்டவர்கள் அனைவரையும்  கொன்ற கொடுஞ்செயலுக்கு அவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கு திரௌபதி,  நான் அதை நிறைவேற்றுகிறேன் என்கிறான் அர்ஜுனன். 

முடிவில்லா இந்த பழி தீர்க்கும் செயல்களால் விரக்தி நிலையில் இருந்த திரௌபதி "ஆசானின் மகனும் அந்த ஆசானை போலவே என் மதிப்புக்குரியவர்.. அஸ்வத்தாமனை விடுவித்துவிடுங்கள்"  என்று  கூறுகிறாள்.  

அஸ்வத்தாமனை அழிப்பேன் என்று தான் பூண்ட சபதம் நிறைவேற்றப்பட முடியாமல் போயிற்றே... என்று வருந்துகிறான் அர்ஜுனன். எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடியாமல் வாழ்ந்தென்ன பயன் என்று கிருஷ்ணனிடம் தன் வேதனையை தெரிவிக்கிறான். 

கடும் கோபத்தில் இருக்கும் கிருஷ்ணன் "அஸ்வத்தாமனின் உயிரை விட மேலான, அவனை யாராலும் வெல்ல முடியாமற் காத்த அவன் நெற்றியில் உள்ள சியமந்தக மணியை எடுத்து திரௌபதியிடம் வழங்கு" என்று அர்ஜுனனிடம்  சொல்கிறார்.
 
அஸ்வத்தாமன் தானே தனது  நெற்றியில் இருந்து ஸ்யமந்தகமணியை பறித்து கிருஷ்ணனிடம் கொடுக்கிறான். 
~

கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாவத்துக்காக கிருஷ்ணன் அஸ்வத்தாமனை சபிக்கிறார். தோழர்கள் எவருமின்றி, பேசுவதற்கு யாருமில்லாமல், மனிதர்களுக்கு மத்தியில் இடமின்றி காடுகளிலும் புதர்களிலும் சீழ், குருதி வழியும் நெற்றியுடன் பசி தாகமின்றி மூவாயிரம் ஆண்டுகள் அலைந்து திரிந்து வாழ்வீர் என்று சாபமளிக்கிறார். 

பணிந்து அதை ஏற்கிறான் அஸ்வத்தாமன்.

கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. இந்த சாபம் எனக்கு  நல்லதே.பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். 

அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின் மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் துரியோதனனை வஞ்சகமாய்க் கொன்றார்கள்.

இன்னும்... இன்னும்...  

பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. 

கிருஷ்ணா!  நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! ஒன்று மட்டும்  சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரல்  பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அந்த  ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கிழித்துக் கொண்டேயிருக்கட்டும்.  அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"  என்று கூறிவிட்டு போகிறான் அஸ்வத்தாமன்.
~

வீரத்தின் முழு உருவம் அஸ்வத்தாமன். மன உறுதி நிரம்ப பெற்றவன். சிந்தித்ததை செயல்படுத்துவதிலும்,  சுயமாக இறுதி முடிவு எடுப்பதிலும் ஆற்றல் மிகுந்தவன். 

அதர்மத்தின் மூலம் தந்தையையும்  தோழன் துரியோதனனையும்  கொன்றனர். இது அவனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இலக்கை அடைய அவன் தேர்ந்தெடுத்த வழி அழித்தொழித்தல். அது கொடூரமானது. ஆனால்  பகவான் விரும்பியதும் அதுவே. விஷச்செடிகள் முற்றாக களையப்பட்டு நிலம் பண்படுத்தப்பட்டால் தான் நல்ல பயிர்களை விளைவிக்க முடியும். 

பகவானின் சித்தம் இல்லாமல் மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மகாபாரதப் போர் ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. அந்த சித்தத்தை மறைமுகமாக நிறைவேற்றிக் கொடுத்தான் அஸ்வத்தாமன். 

போரின் இறுதியில் கௌரவர் பக்கம் எஞ்சியவர் மூவர். அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன்.

பாண்டவர் பக்கம் எஞ்சியவர்கள் எட்டு பேர். பஞ்ச பாண்டவர் ஐவர், சாத்யகி, யுயுத்சு மற்றும் கிருஷ்ணன்.

இலட்சகணக்கானோர் பங்கேற்று துவக்கப்பட்ட ஒரு மாபெரும் யுத்தம்  கடைசியில் பதினோரு பேருடன் நிறைவடைந்தது. 
~

இன்றும் குஜராத்தின் ஆசிரகர் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அஸ்வத்தாமன் சுற்றிவருவதாகவும், இமயமலை சாரல்களில் அலைந்து திரிந்து கொண்டிருப்பதை கண்டதாகவும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவை உண்மையாய் இருக்கலாம். 
~

முகநூல் நண்பரின் உரையாடல் ஒன்றில்  சாதாரணமாய் ஒற்றை வார்த்தையாய்  வெளிப்பட்ட அஸ்வத்தாமன் என்னும்  பெயர்,  இவ்வளவு தூரம் அவரைப் பற்றி எழுத என்னை   இழுத்துக் கொண்டு வந்துள்ளது. 

தன்னைப் பற்றி என்னை எழுத வைத்ததும் அவராய் இருக்கக் கூடும். இத்தொடரை உங்களை படிக்க வைத்ததும் அவராய் இருக்கக்கூடும். இத்தொடரை படிக்கும்போது உங்களுடனும் அவர் இருந்து கொண்டிருக்க கூடும். 
~

அவர் எக்காலமும்  இருப்பார். 
அவர் எங்கும் இருப்பார். 
அவர் சிரஞ்சீவி.

வணங்குகிறேன். 
~

நன்றி.


Comments