அஸ்வத்தாமன் - 12
அஸ்வத்தாமன்
(தொடர்ச்சி...12)
இருபது லட்சம் வீரர்களும், ஆயிரக்கணக்கான தளகர்த்தர்களும் தீரத்துடன் போரிட்ட கௌரவ சேனையில் இப்போது அஸ்வத்தாமன் தலைமையில் கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய இருவர் மட்டுமே.
~
அன்றைய, அதாவது குருச்சேத்திர யுத்தத்தின் 18ம் நாள் இரவு கௌரவ தலைமை சேனாதிபதியாக பதவியேற்ற அஸ்வத்தாமனுக்கு தூக்கமே வரவில்லை. தன்னுடன் கௌரவ சேனையில் எஞ்சியிருந்த கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோரை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த கானகத்துக்கு சென்றான். அங்கிருந்த மிகப்பெரிய ஆலமரத்தடியில் மூவரும் அமர்ந்தனர்.
சற்று நேரம் உரையாடிய பின் உடன் வந்த இருவரும் கண்ணயர்ந்தனர். அஸ்வத்தாமனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை.பாண்டவர்களை வஞ்சம் தீர்ப்பது எப்படி என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
மரக்கிளைகளில் பறவைகளின் திடீர் சத்தத்தைக் கேட்ட அஸ்வத்தாமன் அண்ணாந்து பார்த்தான். ஆந்தை ஒன்று மரப்பொந்தில் இருந்த காக்கைகளை தாக்கி அவற்றை அழித்து காக்கை குஞ்சுகளை தின்று கொண்டிருந்தது.
இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன.
ஆந்தை அந்த காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக்கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அஸ்வத்தாமன். இது தெய்வம் காட்டிய வழி என்று நம்பினான்.
உறங்கி கொண்டிருந்த இருவரையும் எழுப்பினான். தனது திட்டத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தான். கிருபர் இந்த திட்டத்துக்கு உடன்படவில்லை. இது கோழைத்தனமானது. பாண்டவர்களை நாளை களத்தில் சந்தித்து போரிட்டு கொல்வோம் என்றார். அவரின் அறிவுரையை அஸ்வத்தாமா புறக்கணித்தான்.
வேறு வழியின்றி கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமாவுடன் பாண்டவர்களின் கூடாரம் நோக்கி புறப்பட்டனர்.
~
அஸ்வத்தாமன் அன்றிரவு பாண்டவர்களை கொல்லக்கூடும் என்று யூகித்த கிருஷ்ணன் பாண்டவர்களையும் திரௌபதியையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக அருகில் இருக்கும் கானகம் செல்கிறார். போகும்போது பகவான் ருத்ரனை வேண்டி நாங்கள் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கு காவலாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறார். பரமேஸ்வரனின் அம்சமான ருத்ரன் பூத உருவம் தாங்கி கூடாரத்தின் வாசலில் காவல் இருக்கிறார்.
~
கூடாரத்தின் உள்ளே நுழைய நினைக்கும் அஸ்வத்தாமனை பூதம் தடுக்கிறது. அஸ்வத்தாமனின் வில்வித்தைக்கும், தெய்வ அஸ்திரங்களுக்கும், அதர்வண வேத மந்திர பிரயோகங்களுக்கும் அந்த பூதம் பணியவேயில்லை. அவற்றை எல்லாம் தனது கைகளால் தவிடுபொடி ஆக்குகிறது.
கடைசியாக, இந்த பூவுலகிலேயே இணையற்ற அஸ்திரமான, எப்பேர்ப்பட்ட இலக்கையும் அழிக்க வல்ல பரமேஸ்வரன் தனக்களித்த பாசுபதாஸ்திரத்தை எடுக்கிறான் அஸ்வத்தாமன்.
ஈசனை வணங்கி பாசுபதாஸ்திரத்தை பூதத்தை நோக்கி ஏவுகிறான்.
தனது வாயை அகல திறந்து பாசுபதாஸ்திரத்தை சோற்று கவளத்தை விழுங்குவது போல் விழுங்குகிறது பூதம்.
அஸ்வத்தாமன் திகைத்து போகிறான். பூதத்தின் முன் மண்டியிடுகிறான். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாது பாசுபதாஸ்திரம். சர்வ சாதாரணமாக அதை விழுங்கினாயே... எப்படி... நீ யார் பூதமே... உண்மை சொல் என்கிறான். சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறான்.
தன் சொரூபம் காட்டுகிறார் பரமேஸ்வரன். உதிரத்தால் அவர் பாதங்களை நனைத்து தன் பக்தியை வெளிப்படுத்துகிறான் அஸ்வத்தாமன்.
பரமேஸ்வரா... என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள். இல்லையெனில் உங்கள் முன்னே உயிர் நீப்பேன் என்று வாளை உருவி தன் தலையை கொய்ய முயல்கிறான்.
அவனை தடுத்தாட்கொண்ட ஈசன் அவன் செயல் கண்டு இரங்கி, அவன் பக்தியை மெச்சி தனது வாளை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைகிறார்.
~
ஈசன் அளித்த வாளுடன் கூடாரத்துக்குள் நுழைந்த அஸ்வத்தாமன் கண்ணில் பட்ட வீரர்களை எல்லாம் கொன்று குவிக்கிறான்.பாண்டவ சேனையில் மிஞ்சியிருந்த அனைவரையும் தனி ஆளாக கொன்றொழிக்கிறான்.
தப்பி வெளியே ஓட முயன்றவர்களை கூடாரத்தின் வாசலில் நின்ற கிருபரும் கிருதவர்மனும் கொல்கிறார்கள்.
எங்கெங்கும் மரண ஓலங்கள்.
பிதாமகர் பீஷ்மரைக் கொன்ற சிகண்டியை வெட்டி சாய்க்கிறான் அஸ்வத்தாமன். பாண்டவ சேனையின் தலைமை படையணித் தலைவனும் தனது தந்தை துரோணாச்சாரியாரை கொன்றவனுமான திருஷ்டத்யும்னனை வெறும் கைகளால் அடித்து துவைத்து அவன் உடலில் இருந்து தலையை பிய்த்து வீசி எறிகிறான்.
கூடாரத்தின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பாண்டவர்களின் ஐந்து மகன்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று தவறாக நினைத்து வெட்டிக் கொல்கிறான்.
மொத்த பாண்டவ சேனையையும் ஒற்றை ஆளாய் நின்று அழித்து கூடாரத்தை தீ வைத்து கொளுத்துகிறான்.
~
பாண்டவர்களை கொன்றுவிட்டதாக நினைத்த அஸ்வத்தாமன் குளத்தங்கரையில் உயிரை கையில் பிடித்தபடி இருந்த துரியோதனனிடம் சென்று மொத்த பாண்டவ சேனையையும் அழித்துவிட்ட தகவலை சொல்கிறான். அதைக் கேட்ட துரியோதனன் மனநிறைவுடன் உயிர் விடுகிறான்.
~
மறுநாள் காலை கூடாரம் இருந்த இடத்திற்கு வந்து பார்க்கும் பாண்டவர்கள் திகைக்கிறார்கள். ஒரே ரத்த வெள்ளம். ஒருவர் மீதமில்லாமல் அத்தனை பேரும் இறந்திருந்தனர்.
உபபாண்டவர்கள் இறந்து கிடந்ததை பார்த்து பாண்டவர்கள் மிரளுகின்றனர். திரௌபதி அரற்றுகிறாள். அஸ்வத்தாமனின் தலையை கொய்து உன்னிடம் கொண்டு வந்து தருகிறேன் என்று அர்ஜுனன் திரௌபதியிடம் சூளுரைக்கிறான்.
~
18 நாள் போரில் எங்களை எதுவும் செய்ய முடியாத அஸ்வத்தாமானால் இது எப்படி சாத்தியமாயிற்று கிருஷ்ணா என்று தர்மர் கேட்கிறார்.
அஸ்வத்தாமனின் சக்தி அளவிடற்கரியது. அது யாருக்கும் தெரியாமல் போயிற்று. அதனால் தான் துரியோதனன் தோற்றான். ஒரே ஒரு நாள் மட்டும் அஸ்வத்தாமன் கௌரவ சேனையின் தளபதியாய் இருந்திருப்பானேயானால் அந்த ஒரே நாளில் இந்த மகாபாரத யுத்தத்தை துரியோதனனுக்கு சாதகமாக வென்று முடித்திருப்பான். துரோணரின் தவத்தின் பலனாய் அவன் ருத்ர அம்சத்தில் பிறந்தவன். நெற்றியில் ஈசனால் அருளப்பட்ட ஸ்யமந்தகமணி இருக்கும் வரை அவனை யாராலும் போரில் வெல்ல முடியாது என்கிறார் கிருஷ்ணன்.
~
பிரம்மாஸ்திரத்தை தவிர வேறு எந்த ஆயுதத்தாலும் அஸ்வத்தாமனை அழிக்க முடியாது என்று முடிவு செய்த அர்ஜுனன் ஆற்றங்கரையில் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருந்த அஸ்வத்தாமனை நோக்கி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான்.
பாண்டவர்கள் உயிருடன் இருப்பதையும், அர்ஜுனன் தன மீது பிரம்மாஸ்திரம் செலுத்தியுள்ளதையும் தவ வலிமையால் அறிந்த அஸ்வத்தாமன் கையில் இருந்த தர்ப்பை புல்லில் பிரம்ம மந்திரங்களை உருவேற்றி அதையே பிரம்மாஸ்திரமாக மாற்றி பாண்டவர்களை நோக்கி செலுத்துகிறான்.
~
(தொடரும்...)



Comments
Post a Comment