அஸ்வத்தாமன் - 11
அஸ்வத்தாமன்
(தொடர்ச்சி...11)
சல்லியனின் ஆலோசனையை புறக்கணித்த கர்ணன், அர்ஜுனனின் கழுத்துக்கு குறி வைத்து நாகாஸ்திரத்தை ஏவுகிறான்.
சீறி வரும் நாகாஸ்திரத்தை பார்க்கும் கிருஷ்ணன் அர்ஜுனனின் தேரை ஒரு அடி பூமியில் அழுத்துகிறார். கிருஷ்ணனின் போர்த்தந்திரத்தால் காப்பாற்றப்படுகிறான் அர்ஜுனன். அவன் கழுத்துக்கு வைக்கப்பட்ட குறி தப்பி அவன் தலைக்கவசத்தை தட்டி செல்கிறது.
தன் ஆலோசனையை கேட்காத கர்ணனின் செயலால் கோபமடைந்த சல்லியன் தேரிலிருந்து இறங்கி கர்ணனை தனியே விட்டுவிட்டு செல்கிறான்.
~
இந்த நேரத்தில் கர்ணனின் தேர் சேறு நிறைந்த பூமியில் சிக்கி கொள்கிறது. கர்ணன் சக்கரத்தை நிமிர்த்திவிட்டு போருக்கு வருகிறேன், யுத்த விதிகளின் படி போர் செய்யாதிரு அர்ஜுனா என்கிறான்.
அபிமன்யுவை கொல்லும் போது எந்த யுத்த நெறி பின்பற்றப்பட்டது. நிராயுதபாணியாய் நின்ற அவனை சுற்றி வளைத்து கொன்றவர்களில் கர்ணனும் ஒருவன். துரிதமாக செயல்படு அர்ஜுனா, கர்ணனின் மீது அஸ்திரங்களை செலுத்து என்கிறார் கிருஷ்ணன்.
தேரை நிமிர்த்திக் கொண்டிருந்த கர்ணன் மீது அம்புமழை பொழிகிறான் அர்ஜுனன். கர்ணன் தேர் சக்கரத்தின் மீது சரிந்து விழுகிறான். குருச்சேத்திர போர்க்களத்தில் 17ம் நாள் போரில் கர்ணனின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
~
பாண்டவர் மற்றும் கௌரவர்களில் மூத்தவனான கர்ணன் தான் தருமனை விடவும், துரியோதனனை விடவும் நியாயப்படி அஸ்தினாபுர அரியணைக்கு உரிமையுள்ளவன்.
விதி அவன் வாழ்வில் விளையாடிய அளவு வேறு எவர் வாழ்விலும் விளையாடவில்லை.
மகாபாரதத்தில் ஆகப் பெரிய துன்பியல் கதாபாத்திரம் என்றால் அது கர்ணன் தான்.
~
போரின் இன்னொரு முனையில் இருந்த அஸ்வத்தாமன் தான் ஏவிய நாராயணாஸ்திரம் கிருஷ்ணனால் செயலிழக்க வைக்கப்பட்டதும் ஆவேசம் அதிகமாகி ஆக்னேயாஸ்திரத்தை செலுத்த தயாராகிறான்.
அக்னி பகவானால் வழங்கப்பட்ட அந்த அஸ்திரம் மிக மிக சக்தி வாய்ந்தது. மிகக் கொடியது. கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் போரிட்டுக் கொண்டிருந்த பாண்டவ படைகளின் மீது ஆக்னேயாஸ்திரத்தை அஸ்வத்தாமன் செலுத்தினான்.
பாண்டவப்படைகளை துவம்சம் செய்த ஆக்னேயாஸ்திரம், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுடனேயே இருந்த திருஷ்டத்யும்னனும் அஸ்திரத்தின் வீச்சில் இருந்து தப்பினான்.
இதைக் கண்டு அதிர்ந்து நின்ற அஸ்வத்தாமனின் முன் தோன்றிய வியாசர், கிருஷ்ணரும், அர்ஜுனனும் நர, நாராயணர்கள். அவர்கள் இணைந்திருக்கும் வரை அவர்களை யாராலும் கொல்லமுடியாது என்கிறார்.
நர நாராயணர்களை மனதில் வேண்டி திருஷ்டத்யும்னனை பழி வாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு போர்க்களத்திலிருந்து அகல்கிறான் அஸ்வத்தாமன்.
~
கர்ணன் மாண்டதும் 18ம் நாள் யுத்தத்திற்கு சல்லியனை கௌரவர்களின் தலைமை படைத்தளபதியாக நியமிக்கிறான் துரியோதனன்.
சகுனியையும் அவன் மகன் உள்ளுகனையும் சகாதேவன் கொல்கிறான். சல்லியனை தருமர் தன் ஈட்டியால் குத்திக் கொள்கிறார். 18ம் நாள் முற்பகலிலேயே போர் முடிவுக்கு வருகிறது.
தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன் சரஸ்வதி ஆற்றின் அருகே இருந்த ஸ்யமந்த பஞ்சகம் என்னும் குளத்தில் ஒளிந்து கொள்கிறான். அவனை தேடி அலைந்த பீமன் குளத்தின் அருகே அவனை கண்டுபிடிக்கிறான்.
தலயாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமரின் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் குளக்கரையில் கதாயுத்தம் நடைபெறுகிறது.
கதாயுத போரின் விதிகளை மீறும் பீமன், திரௌபதியின் சபதத்தை மனதில் இருத்தி துரியோதனின் இரண்டு தொடைகளையும் தனது கதாயுதத்தால் பிளக்கிறான்.
போரின் விதிமுறைகளை மீறியதற்காக பலராமன் பீமனை கடுமையாக கண்டிக்கிறார்.
தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுயிருமாக வீழ்ந்து மரணத்தை நோக்கிய தனது பயணத்தை துவங்குகிறான் துரியோதனன்.
~
துரியோதனனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனுக்கருகே வந்தனர்.
அஸ்வத்தாமா, என் உயிர் நண்பா, யுத்தம் முடிந்ததா ? கடைசியில் அதர்மமாக யுத்தத்தை பாண்டவர்கள் வென்றுவிட்டார்களா ? என் சொந்த பந்தம் எல்லோரும் வீழ்ந்துபட்டனரா? நான் மட்டும் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று துரியோதனன் அரற்றினான்.
இல்லை துரியா. யுத்தம் இன்னமும் மீதம் இருக்கிறது. உன் கட்டளைக்காக காத்திருக்கிறேன். ஆணையிடு. பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்கிறேன் என்கிறான் அஸ்வத்தாமன் ஆவேசத்துடன்.
தன் குருதி கலந்த குளத்தின் நீரை அஸ்வத்தாமன் கையில் தாரை வார்க்கிறான் துரியோதனன். இந்தக் கணம் முதல் கௌரவ சேனையின் தலைமை தளபதி நீ. வஞ்சம் முடித்து வா. உன் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறான் துரியன்.
~
இருபது லட்சம் வீரர்களும், ஆயிரக்கணக்கான தளகர்த்தர்களும் தீரத்துடன் போரிட்ட கௌரவ சேனையில் இப்போது அஸ்வத்தாமன் தலைமையில் கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய இருவர் மட்டுமே.
~
(தொடரும்...)



Comments
Post a Comment