அஸ்வத்தாமன் - 10

அஸ்வத்தாமன் 

(தொடர்ச்சி...10)


துரோணரால் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கும், அவரின் மரணத்துக்கும் பழி வாங்க காத்திருந்த பாஞ்சால மன்னன் துருபதனின் மகனும், திரௌபதியின் சகோதரனுமாகிய திருஷ்டத்யும்னன் துரோணரை கொல்ல எதிர்ப்புறத்தில் இருந்து ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருகிறான்.
~

அஸ்வத்தாமன் இறந்தான் என்று நம்பி மயங்கி சரிந்த துரோணரின் மீது அம்பு மழையை பொழிய சொல்லி அர்ஜுனனை வற்புறுத்துகிறார் கிருஷ்ணன். 

ஆச்சாரியார்  என் ஆசான். மேலும் அவர் ஒரு பிராமணர்.  அவரை என்னால் கொல்ல முடியாது கிருஷ்ணா என்று அர்ஜுனன் மறுக்கிறான். 

துரோணர் பிராமணராகப் பிறந்தாலும் சத்திரிய தர்மப்படி தான் வாழ்ந்தார். ஒரு சத்ரியனாகவே போர்க்களத்தை ஆட்சி செய்தார். அவரைக் கொல்வதனால்  உனக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏதும் ஏற்படாது.  சத்ரியர்களுக்கு கிட்டக்கூடிய வீர சொர்க்கத்தை உன் கையால் உன் ஆசானுக்கு வழங்கு அர்ஜுனா என்கிறார் கிருஷ்ணர். 

முதன்முறையாக கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனன் கேட்க மறுக்கிறான்.
~

துரோணர் மயங்கி சாய்ந்ததை அறிந்த திருஷ்டத்யும்னன் எதிர்புறத்தில் இருந்து பாய்ந்து வந்து ஏற்கனவே தான் சபதமிட்டிருந்தபடி துரோணரின் தலையை வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.   

ஆசானை கொல்லும் பாவத்தில் இருந்து அர்ஜுனனை திருஷ்டத்யும்னன் காக்கிறான். 

பரசுராமரின் சீடரும், பிதாமகர் பீஷ்மரால் நியமிக்கப்பட்ட,  கௌரவ பாண்டவ ராஜகுமாரர்களின் ஆசானுமாகிய துரோணர் குருச்சேத்திர போர்க்களத்தில் பல சாகசங்கள் புரிந்து, ஏராளமான பாண்டவ  படை வீரர்களையும், முக்கியமான தளபதிகளையும் வீழ்த்தி போர்க்களத்திலேயே உயிர் துறந்து வீர சுவர்க்கம்  அடைகிறார்.

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.
~

துரோணர் மறையும் போது, போர்க்களத்தின் மற்றொரு முனையில் மகாபாரத யுத்தத்துக்கென்றே பிறந்தவன் போல் அஸ்வத்தாமன் ருத்ரதாண்டவமாடிக் கொண்டிருந்தான். பாண்டவர்களின் படையை சர்வ நாசம் செய்து கொண்டிருந்தான். 

தனது மாயாஜால வித்தைகள் மூலம் கௌரவ சேனையை  திகைக்க வைத்து,  அவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த பீமனின் பேரனும், கடோதகஜனின் மகனுமாகிய அஞ்சன பர்வனை கொன்று பீமன்-இடும்பியின் குலத்தை நிர்மூலமாக்கினான். 

அஞ்சனபர்வனின் தந்தை கடோதகஜனை ஏற்கனவே கர்ணன் தனது சக்தி ஆயுதத்தால் கொன்று முடித்திருந்தான். 

துரோணரின் எதிரி துருபத மன்னனின் இன்னொரு மகனை அஸ்வத்தாமன் கொல்கிறான். . குந்திபோஜனின் பத்து மைந்தர்களையும்  கொன்று அந்த வம்சத்தையே முடித்து வைக்கிறான்.
~

துரோணர் வீழ்த்தப்பட்டதும் உடனடியாக கர்ணனை அழைத்த துரியோதனன் கௌரவ சேனையின் தலைமைப் படையணித் தலைவராக கர்ணனை நியமிக்கிறான்.

துரோணர் வீழ்ந்த தகவல் அறிந்த பாண்டவர் படை மேலும் ஆக்ரோஷமாக தாக்குதலை தொடர அன்றைய 15ம் நாளைய போரில் துச்சாதனனைத் தவிர துரியோதனனின் 98 தம்பிகளும் கொல்லப்படுகின்றனர். 
~
துரோணர் வஞ்சகமாக கொல்லப்பட்ட தகவல் அறியும் அஸ்வத்தாமன் கடும் சினம் கொள்கிறான். ஒருபுறம் தந்தை இறந்த சோகம், மறுபுறம் அவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை அறிந்த கோபம் இவை சேர்ந்துகொள்ள  யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உன்மத்தனாகிறான் அஸ்வத்தாமன். 

தனது தந்தையை ஏமாற்றி கொன்ற பாண்டவர்களை அழித்தே தீருவேன் என்று சபதம் செய்கிறான் அஸ்வத்தாமன். 
~

16ம் நாள் போரில் ருத்ரனை தன்னுள் வரித்துக் கொண்ட அஸ்வத்தாமன் பாண்டவ சேனையை சர்வ நாசம் செய்கிறான். துருபத மன்னனின் மகளாக பிறந்து ஆணாக  மாறி பாண்டவர்களுக்காக போரிட்டுக் கொண்டிருந்த  சிகண்டியுடைய அனைத்து புதல்வர்களையும் கொன்றொழிக்கிறான். 

பாண்டவ படைகளை முற்றிலுமாக அழிக்க உறுதிகொண்டு கிருஷ்ணரால் அளிக்கப்பட்ட  மிக சக்தி வாய்ந்த நாராயண அஸ்திரத்தை விண்ணை நோக்கி செலுத்துகிறான் அஸ்வத்தாமன். 

 நாராயண அஸ்திரம் விண்ணில் செலுத்தப்பட்டதும் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே நேரத்தில் பாண்டவ சேனையை நோக்கி தங்களின் அம்புகளை செலுத்துகின்றனர். 

வானிலிருந்து அம்பு மழை பாண்டவ சேனையை நோக்கி பொழியத் துவங்குகிறது. பாண்டவ சேனையின் பெரும்பகுதி தேவர்களின் அம்பு மழைக்கு இரையாகின்றது.

நாராயண அஸ்திரம் செலுத்தப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணன் பாண்டவ படையினரை நோக்கி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேவர்களால் பொழியப்படும் அஸ்திரங்களை வணங்குங்கள்... தேவர்களிடம் உயிர் தானம் கேளுங்கள்...  அவை உங்களை  ஒன்றும் செய்யாது என்கிறார். 

அவரும் தேரை விட்டு இறங்கி வணங்குகிறார். 

பாண்டவர் சேனை அழிவதை கண்டு கடும் கோபமடைந்த பீமன் மட்டும் கிருஷ்ணர் சொன்னதை கேட்காமல் அஸ்வத்தாமனை கொன்றே தீருவேன் என்று தனது கதையுடன் அஸ்வத்தாமனை நோக்கி விரைகிறான். 

கிருஷ்ணரும், அர்ஜுனனும் உடனடியாக பீமனை நோக்கிப் பாய்ந்து அவன் கையிலிருந்த கதையை பிடுங்கி தூர எறிந்து அவனை கீழே தள்ளுகின்றனர்.

வீரர்கள் உயிர் தானம் கேட்டதை அடுத்து தேவர்கள் அம்புமாரி  பொழிவதை நிறுத்திவிட்டு மறைகின்றனர். 

நாராயண அஸ்திரங்களில் இருந்து பஞ்ச பாண்டவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

17ம் நாள் போரில் தீரமுடன் போரிட்ட கர்ணன் பாண்டவ படைகளை சின்னாபின்னமாக்கி சிதறடிக்கிறான். தர்மரையும், சகாதேவனையும் போரில் வென்ற கர்ணன் தன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக அவர்களைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான்.

அர்ஜுனனைத் தவிர ஏனைய பாண்டவர்களை கொல்ல மாட்டேன் என்று குந்தி தேவிக்கு ஏற்கனவே வாக்களித்திருந்தான் கர்ணன்.

அர்ஜுனனை நேருக்கு நேர் சந்தித்து கடுமையான யுத்தம் புரியும் கர்ணன் சக்தி மிக்க நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் கழுத்துக்கு  குறிவைக்கிறான். கர்ணனுக்கு சாரதியாக இருக்கும் சல்லியன் அர்ஜுனனின் நெஞ்சுக்கு  நாகாஸ்திரத்தை குறி வைக்க சொல்கிறான். 

சல்லியனின் ஆலோசனையை ஏற்கவில்லை கர்ணன்.
~

போரின் இன்னொரு முனையில் இருந்த அஸ்வத்தாமன் தான் ஏவிய நாராயணாஸ்திரம் கிருஷ்ணனால் செயலிழக்க வைக்கப்பட்டதும்  ஆவேசம் இன்னும் அதிகமாகி ஆக்னேயாஸ்திரத்தை எய்ய தயாராகிறான். 

அக்னி பகவானால் வழங்கப்பட்ட அந்த அஸ்திரம் மிக மிக சக்தி வாய்ந்தது. மிகக் கொடியது. 
~

(தொடரும்...)


Comments