வாசிப்பு (1) - குமுதம்
வாசிப்பு
வார, மாத இதழ்கள் தான் முதன்முதலில் எனக்கு படிக்கும் ஆர்வத்தை சிறு வயதில் ஊட்டியவை.
எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும்போது குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்றவைகளை ஸ்கூல் விட்டு வரும்போது கடைகளில் இருந்து வீட்டுப் பெரியவர்களுக்கு வாங்கி வரும் வேலை தான் முதலில் செய்தேன்.
வீடு வரும் வழியிலேயே அவைகளைப் புரட்டி படங்களைப் பார்க்கும் வழக்கம் இருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. கூடவே வாசனையையும் முகர்ந்து பார்த்துக் கொண்டே வருவேன்.
~
மயிலாடுதுறையில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் வயதையொத்த என் சித்தி பையன் கிருஷ்ணனிடம் குமுதம் வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்தனுப்பினார் என் அம்மா. அவன் குமுதம் வாங்கிவிட்டு மீதம் சில்லறையைக் கொடுத்தான். எண்ணிப் பார்த்த என் அம்மா என்னடா காசு குறைகிறது என்றதற்கு ஐம்பது காசு புக். மீதி ஐம்பது காசு இதோ என்றான். அப்போது குமுதம் விலை முப்பத்தைந்து காசுகள் தான். அம்மா அட்டையில் விலையைப் பார்த்தபோது முப்பத்தைந்து பைசாவை பேனாவால் அடித்துவிட்டு மேலேயே ஐம்பது பைசா என்று திருத்தியிருந்தான். 15 காசுக்கு பால் ஐஸ் வாங்கி சாப்பிட்டிருந்தான்.
அந்த வயதிலேயே அப்படி இருந்த அவன் வளர்ந்தபின் நிஜமாகவே வீட்டின் மேலே மண்ணெண்ணெய் டின்னுடன் ஏறி பணம் தரவில்லை என்றால் வீட்டை கொளுத்திவிடுவேன் என்றான். வாடகை வீடு அது.
~
நிற்க. நினைவு எங்கெங்கோ போய்விடுகிறது.
குமுதம் தான் நான் முதன் முதலில் ஆர்வத்த்துடன் படிக்கத் துவங்கிய இதழ். அஞ்சு பைசா அம்மு மற்றும் ஆறு வித்தியாசங்கள் தான் பேவரிட் பகுதிகள்.
இப்போது எந்த புத்தகமும் காசு கொடுத்து நான் வாங்கிப் படிப்பதில்லை. நிறைய புத்தகங்களை வாங்கி வெறி வந்ததுபோல் படித்துக் கிழித்த நான் ஒரு நேரத்தில் மனச்சோர்வடைந்து புத்தகங்கள் வாங்குவதை படிப்படியாக நிறுத்தி விட்டேன். வார, மாத இதழ்கள் படிப்பதை நிறுத்தி வருடங்கள் ஆகின்றன.
~
படிப்படியில் கடைசி படி குமுதம் தான்.


Comments
Post a Comment