டூரிங் டாக்கீஸ் : (9)
டூரிங் டாக்கீஸ் : (9)
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் ....! - (III)
மோகன் என்றாலே பொதுவாக கையில் மைக்குடன் பாட்டு பாடும் அவரின் தோற்றம் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலான படங்களில் பாடகராக அவர் நடித்திருந்த போதிலும், வித்தியாசமான வேடங்களிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.
நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் சராசரி நடுத்தர வர்க்க இளைஞனாக காதலித்து கைவிடும் கதாபாத்திரத்தில் நடித்த மோகன், பயணங்கள் முடிவதில்லை படத்தில் முன்னுக்கு வரத் துடிக்கும் பாடகனாகவும், பின்பு புற்று நோய் பாதித்த மனிதராகவும் நடித்திருந்தார்.
கிளிஞ்சல்கள் படத்தில் இளம் காதலாகவும், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் அப்பாவி கிராமத்து மனைவியை சூழ்நிலை காரணமாக ஏமாற்றும் கணவனாகவும் நடித்தார்.
காதலித்து ஏமாற்றும் பெரிய இடத்து பிள்ளையாக ரோமியோ கெட் அப்பில் விதி படத்தில் சற்றே வில்லத்தனம் காட்டி நடித்த அவர், கிட்டத்தட்ட வில்லனாகவே நூறாவது நாளில் நடித்திருந்தார்.
உதயகீதம், இதய கோவில் ஆகிய படங்களில் மீண்டும் மைக் மோகனாக அவதாரம் எடுத்தார்.பிள்ளை நிலா வில் ஒரு தலையாக காதலித்து தற்கொலை செய்து கொண்டு குழந்தையின் உடலில் ஆவியாக புகுந்து கொண்டு ஆட்டுவிக்கும் பெண்ணின் அட்டகாசன்களைக் கண்டு பயந்து மிரளும் சராசரி குடும்பத் தலைவனாக நடித்திருந்தார்.
மனைவியால் வெறுக்கப்படும் கணவனாக, கண்ணியமுள்ள மனிதனாக, மனைவி விரும்பும் விவாக ரத்து பரிசை அவருக்கு கொடுக்கத் தயாரான ஜென்டில்மன் கணவராக, மௌன ராகத்தில் நடித்து அப்ளாஸ் பெற்றார்.
ரெண்டு பொண்டாட்டிகாரனாக ரெட்டை வால் குருவியில் பரிதாபம் காட்டிய மோகன், எஸ்.வீ. சேகருடன் இணைந்து சகாதேவன் மகாதேவனில் செம கலகலப்பு காட்டியிருப்பார்.
இளமை ததும்பும் குறும்புக்கார காதலனாக தென்றலே என்னை தொடு படத்தில் ஜெயஸ்ரீயுடன் இணைந்து நடித்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் கவுரவ வேடத்தில் வந்து போனார்.
மோகனின் நடிப்பில் இன்னமும் மனதில் நிற்கும் மற்றுமொரு படம் மெல்லத் திறந்தது கதவு. அற்புதமான இளமை இசை காவியம் அது.
எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய பூர்ணிமா ஜெயராம், ரேவதி, ராதிகா, ராதா,
நளினி, அம்பிகா, சுஹாசினி, அமலா, நதியா, அர்ச்சனா, குஷ்பூ என்று அத்தனை நடிகைகளுடனும் மோகன் இணைந்து நடித்திருக்கிறார்.
பிற பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடிக்க மோகன் தயங்கியதே இல்லை. முதல் படத்திலேயே கமலுடன் கோகிலாவில் இணைந்து நடித்த அவர் பின்னர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் போன்ற சம காலத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
முதலில் மௌன ராகம் படத்தின் தொடர்ச்சியாக அஞ்சலி படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டதாகவும், மோகன், ரேவதிக்கு பிறக்கும் குழந்தையாக ஷாம்ளியும் அவர்களைச் சுற்றும் கதையுமாக படத்தை நகர்த்திச் செல்ல திட்டமிட்ட மணிரத்னம், மோகனின் தேதிகள் கிடைக்காத காரணத்தினால் அதற்காக காத்திருக்க விரும்பாமல் ரகுவரனை வைத்து அப்படத்தை முடித்து விட்டதாகவும் கூட ஒரு தகவல் உண்டு.
பாலு மகேந்திரா ஆகட்டும், மகேந்திரன் ஆகட்டும், ஆர். சுந்தர்ராஜனாகட்டும், மணிவன்னனாகட்டும், மனோபாலா ஆகட்டும், ஸ்ரீதர் ஆகட்டும், மணி ரத்னமே ஆகட்டும் - மோகன் இயக்குனர்களின் நடிகன்.
கடைசிவரை இயக்குனர்களின் நடிகனாகத் தான் இருந்தார். இமேஜ் ஒளிவட்டம் தலைக்குப் பின் சுழல்வதை விரும்பாததால்தான் ஏமாற்றுபவனாகவும், விரக்தியாளனாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் - தனக்கு அமைந்த பாத்திரம் எதுவோ அதற்கு தக்கவாறே தனது நடிப்பின் வெளிப்பாடுகளையும் அமைத்துக் கொண்டார்.
மோகன் நடித்த படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment