டூரிங் டாக்கீஸ் : (8)
டூரிங் டாக்கீஸ் : (8)
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் ....! - (II)
பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் மூலம் நடிகர் மோகனுக்கு நல்ல ஒரு துவக்கம் கிடைத்தது என்பது உண்மை தான். இருந்தாலும், மிக சிறந்த அறிமுகம் கிடைத்தும் பலர் அதன் பின்னர் ஜொலிக்காமல் போயிருப்பதும் திரை உலகம் அன்றாடம் கண்டு வரும் ஒரு நிகழ்வு தான்.
மோகனுக்கு காலம் துணை நின்றது. அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பிரபலங்கள் ஆகிப் போனார்கள். அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் வியாபாரத்தில் வெற்றி கண்டார்கள். அவரின் படங்கள் திரை உலகை வாழ வைத்தது என்று கூறினால் கூட அது மிகையில்லை.
தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அவரின் படங்கள் தமிழ்த் திரை உலகை தொடர் தடுமாற்றத்தில் இருந்து சற்று மீட்டது எனலாம்.
மோகன் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் கமலும், ரஜினியும் உச்ச நட்சத்திரங்கள். அவர்கள் கூட தொடர்ந்து வெற்றிப் படங்களை அந்த நேரத்தில் வழங்கவில்லை என்றே கூறலாம்.
அவர்களின் ஊடே புகுந்து தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை மோகன் உருவாக்கிக் கொண்டார்.
மோகன் நடித்த வெற்றிப் படங்களின் வரிசையைப் பார்க்கலாம்.
மோகன் நடித்து 500 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் இரண்டு. ஒன்று 'பயணங்கள் முடிவதில்லை' மற்றொன்று 'விதி'.
இது சாதாரண சாதனை அல்ல. கமலோ அல்லது ரஜினியோ அந்த காலகட்டத்தில் 500 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தையும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
மோகன் நடித்து வெள்ளிவிழா கண்ட படங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.
நெஞ்சத்தை கிள்ளாதே - 365 நாட்கள்
கிளிஞ்சல்கள் - 300 நாட்கள்
தென்றலே என்னை தொடு - 250 நாட்கள்
மௌன ராகம் - 250 நாட்கள்
கோபுரங்கள் சாய்வதில்லை - 200 நாட்கள்
நான் பாடும் பாடல் - 200 நாட்கள்
இளமை காலங்கள் - 200 நாட்கள்
இதயக் கோவில் - 200 நாட்கள்
நூறாவது நாள் - 200 நாட்கள்
பிள்ளை நிலா - 200 நாட்கள்
மெல்ல திறந்தது கதவு - 200 நாட்கள்
மனைவி சொல்லே மந்திரம் - 175 நாட்கள்
சரணாலயம் - 175 நாட்கள்
உதயகீதம் - 175 நாட்கள்
ஓசை - 175 நாட்கள்
குங்குமச்சிமிழ் - 175 நாட்கள்
உயிரே உனக்காக - 175 நாட்கள்
டிசெம்பர் பூக்கள் - 175 நாட்கள்
ரெட்டை வால் குருவி - 175 நாட்கள்
தீர்த்தக்கரையினிலே - 175 நாட்கள்
சகாதேவன் மகாதேவன் - 175 நாட்கள்
இவை தவிர 100 நாட்கள் மற்றும் அதைக் கடந்து ஓடிய படங்கள் தனி கணக்கில் வரும்.
மோகன் நடித்த படங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் கதை அம்சத்தைக் கொண்டிருக்கும். அருமையான, இனிமையான பாடல்கள் கண்டிப்பாக இருக்கும். கவுண்டமணி, செந்தில் போன்றோரின் நல்ல நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்திருக்கும். செண்டிமெண்ட் இருக்கும். மொத்தத்தில் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் படங்களாக கண்டிப்பாக இருக்கும்.
இவரின் படங்கள் வெற்றிப் படங்களாக அமைவதற்கு இதை தவிர வேறென்ன காரணங்கள் வேண்டும்.
மோகன் நடித்த படங்கள் அவரின் நடிப்புக்காக தான் ஓடின என்று கூற முடியாது. மோகன் மட்டும் அல்ல எந்த நடிகர் நடித்திருந்தாலும் வெறும் நடிப்புக்காக மட்டுமே ஒரு படம் ஓடி விட முடியாது. இருப்பினும் தமிழ்த் திரை உலகம் இதுவரை நடிகர் சார்ந்த உலகமாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது.
அந்த விதிகளின் அடிப்படையில் பார்க்கும் போது மோகன் ஒரு வெற்றிகரமான நடிகர் தான் என்பதை ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
மோகன் நடித்த படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பற்றியும், அவர் ஏற்ற கதாபாத்திரங்களைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment