டூரிங் டாக்கீஸ் : (7)
டூரிங் டாக்கீஸ் : (7)
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் ....!
மோகன் ராவ்
கோகிலா மோகன்
சில்வர் ஜுபிலி ஸ்டார்
இந்த பெயர்களுக்கு உரியவரை உங்களுக்கு தெரியுமா ?
கொஞ்சம் யோசிப்பீர்கள் .....கண்டிப்பாக.
ஆனால், மைக் மோகன் ..... ?
மின்னலடித்தாற்போல நெஞ்சில் இருந்து எழும்பி கண்ணுக்கு முன் குதித்து வந்து 'பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான்...' என்று பாடத் தொடங்கி விடுவார் இல்லையா ?
இந்த 'மைக்' மோகன் தான் 'கோகிலா' மோகன். இவரே தான் சில்வர் ஜுபிலி ஸ்டார். இவரின் இயற்பெயர் மோகன் ராவ்.
உடுப்பி ரெஸ்டாரன்ட் உரிமையாளரின் மகனாக பெங்களூரில் பிறந்து படித்து வளர்ந்த இவரை காலம் தமிழ்த் திரை உலகின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக மாற்றியது.
1970 களின் இறுதியில் இருந்து 1980 இன் இறுதி வரை மோகன் நடித்த படங்கள் வெள்ளித் திரையில் வசூலை வாரி வாரி குவித்தன.
பாலு மகேந்திரா மூலம் 'கோகிலா' என்னும் கன்னட படத்தில் நாயகன் கமலின் நண்பராக தனது திரைப்பயனத்தை தொடங்கினார் மோகன்.
'கோகிலா' வில் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கும் முன்பு பிரபல கன்னட நாடக உலக ஜாம்பவான் பி.வி. காரந்த் அவர்களின் மூலம் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் மோகன். பிரபல கன்னட திரை இயக்குனரும், மற்றுமொரு நாடக துறை ஜாம்பவானுமாகிய ஜி.வி. ஐயரின் மூலம் மேலும் பட்டை தீட்டப்பட்டார் மோகன்.
கோகிலாவுக்கு பிறகு 'மதலசா' என்னும் மலையாள படத்தில் ரோஜாரமணியுடன் இனைந்து நடித்தார். அந்த படம் வெற்றிப் படமாக அமைந்து போனது.
பாரதி ராஜாவின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'கிழக்கே போகும் ரயில்' தெலுங்கில் 'தூர்ப்பு வெள்ள ரயிலு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது சுதாகர் நடித்த கதாபாத்திரத்தில் மோகன் நடித்தார்.
பாலு மகேந்திரா, காரந்த், ஐயர் போன்ற மோதிரக் கைகளால் குட்டுப்பட்ட மோகன் அடுத்து இயக்குனர் மகேந்திரனின் பார்வையில் விழுந்தார்.
இயக்குனர் மகேந்திரன் அவர்களின் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் தனது வலது காலை எடுத்து வைத்த அவர், வெற்றி முழக்கத்துடன் ஒரு முழு சுற்று சுற்றிய பின்னர் தான் ஓய்ந்தார்.
'நெஞ்சத்தை கிள்ளாதே' பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது. சில திரை திரையரங்குகளில் ஓராண்டை கடந்து ஓடியது. அந்த காலகட்டத்தில் இது ஒரு மாபெரும் சாதனை. இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காகவும்,(அசோக் குமார்), சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்காகவும் தேசிய விருதுகளை தட்டி வந்தது.
அடுத்து, துரை இயக்கத்தில் பூர்ணிமா ஜெயராம் (இப்போது பூர்ணிமா பாக்கியராஜ்) உடன் இனைந்து நடித்த 'கிளிஞ்சல்கள்' மற்றுமொரு வெள்ளி விழா படம் ஆனது.
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் பின்னர் வந்த 'பயணங்கள் முடிவதில்லை' 500 நாட்களை கடந்து ஓடிய ஒரு மாபெரும் வெற்றிப் படமாகும். இப்படத்தில் முதன் முறையாக அமைந்த மோகன் + இளையராஜா + எஸ்.பி. பாலசுப்ரமணியன் கூட்டணி அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு வெற்றிக் கூட்டணியாக அமைந்து பல வெற்றிப் படங்களை வழங்கியது .
மோகன் நடித்த வெற்றிப்படங்கள், சூப்பர் ஹிட் பாடல்கள், மற்றும் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் ஆகியவைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment