சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (5)

சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (5)




1979 - நான் தமிழ் மொழி அல்லாத பிற மொழிப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருந்தேன். 

மன்னார்குடியில் அப்போது நான்கு திரை அரங்குகள் இருந்தன. ஊரின் மேற்கு எல்லையில் விஜயா என்று ஒரு திரை அரங்கம். பாதி நாட்கள் திரை அரங்காகவும், மீதி நாட்கள் கிடங்காகவும்  அத்திரை அரங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற மொழிப் படங்கள் அந்த திரை அரங்கில் தான் பெரும்பாலும் திரையிடப்படும். 

அப்படி முதலில் நான்  பார்த்த பிறமொழித்  திரைப்படம் "ஷோலே". மொழி புரியவில்லையே தவிர அந்த படத்தின் ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தது இன்னமும் நினைவில் அப்படியே இருக்கிறது. மவுத் ஆர்கன் வாசிக்கும், டாஸ் சுண்டும் அமிதாபும், அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு   ஊஞ்சல் ஆடும் சிறு பெண்ணை  மெதுவாக பான் போட்டுக் கொண்டே அருகில் வந்துகுதிரையில் இருந்தபடியே சுட்டுக் கொல்லும் அம்ஜத் கானும் இன்றும் கூட நினைவில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். தர்மேந்திரா மட்டும் ஏனோ என்னை அவ்வளவாக கவரவில்லை. அவரின் பாத்திரப் படைப்பு ஒரு காரணமாக இருக்கக்கூடுமோ..? அமிதாபின் பாத்திரப்படைப்பில் இருந்த ஒரு தனித்துவம் தர்மேந்திரா பாத்திரத்துக்கு இல்லையோ. அல்லது, அமிதாப் இறுதியில் இறப்பதனால் ஏற்பட்ட பரிதாபம் மற்றெல்லாவற்றையும் விட விஞ்சி நிற்கிறதோ..? என்னவோ, ஏதோ.., ஷோலே படத்தின் வெற்றி உலாவுக்குப் பிறகு  மன்னார்குடி திரையரங்குகளில் தமிழ் தவிர்த்த இதர மொழி திரைப்படங்களும்   வெளிவரத் துவங்கின. 

இலங்கை வானொலியில் நிறைய அறிவிப்பாளர்கள் அவர்களின் தனித்துவத்திற்காக சிறப்பாக அறியப்பட்டாலும் கே.எஸ். ராஜா அப்பொழுது அறிவிப்பாளர்களில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் மதிய நேரத்தில் இலங்கையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 'திரை விருந்து' நிகழ்ச்சியை அப்பொழுது இலங்கை வானொலி கேட்டவர்களால் இன்று வரை மறக்க முடியாது. " வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் ........" என்று அவர் நிகழ்ச்சியை ஸ்டைலாகத் துவக்கும் போதே உற்சாகம் நமக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். திரை விருந்து நிகழ்ச்சியின் மூலம் இலங்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை  நாம் அறிந்து கொள்ள எப்பொழுதும் ஒரு ஆர்வம் வந்து தொற்றிக் கொள்ளும்.

 இந்த கால கட்டத்தில் கமல் நடித்த "நீயா" திரைப்படம் இலங்கையில் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..", "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..." போன்ற பாடல்கள் இலங்கை ரசிகர்களால் திரும்பத் திரும்ப விரும்பப்படும் பாடல்கள் ஆயின. எங்களுக்கும் அவை பிடித்த பாடல்கள் ஆயின. படத்தின் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் இரட்டையர்களை வியந்து பாராட்டுவோம். ஆனால், பின்னர் தான் தெரிந்தது படமும் ஹிந்தி ரீமேக், பாடல்களும் ஹிந்தி தழுவல்கள் என்று.   இருந்தால் என்ன..! இன்றும் கூட அப்பாடல்கள் நெஞ்சம் கவர்ந்த பாடல்கள் ஆகத் தான் இருக்கின்றன. படம் தான் இப்பொழுது பார்க்கும்பொழுது அபத்தமாக தெரிகிறது. 

1979 - இல் கமலும், ரஜினியும் போட்டி போட்டு வளர்ந்து வந்தார்கள். கமலுக்கு ஒரு கல்யாண ராமன் என்றால், ரஜினிக்கு ஒரு தர்ம யுத்தம். ஜெமினி சுத்தமாக காணாமல் போய் விட்டார்.   சிவாஜி சரிந்து கொண்டே இருந்தார். இமயம், கவரிமான், பட்டாக்கத்தி பைரவன் போன்ற பாடாவதி படங்கள். கவரிமான் படத்தில் சிவாஜியுடன் ஸ்ரீதேவி வேறு. பகலில் ஒரு இரவு படத்தில் பார்த்த ஸ்ரீதேவியை இந்த படத்தில் பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. கல்யாண ராமனில் கமலுடன் பார்த்தபோது சந்தோஷமாக  இருந்தது. 

"நான் வாழ வைப்பேன்" - சிவாஜி கதாநாயகனாக நடித்த ஒரு படம். சில காட்சிகளிலும், க்ளைமேக்சிலும் மட்டும் ரஜினி வருவார். படத்துக்கு ஜீவன் தருவார். அவரின் மைக்கேல் கேரக்டரும், இளையராஜா இசையில் "ஆகாயம் மேலே..." பாடலும் படத்தில் மறக்க முடியாதவைகளாக ஆனது. 

கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த "இளமை ஊஞ்சலாடுகிறது" சூப்பர் டூப்பர் ஹிட். ஸ்ரீதருக்கே உரிய மற்றுமொரு முக்கோண காதல் கதை. பாடல்கள் அத்தனையும் ஹிட். அதிலும், "என்னடி மீனாட்சி...." இலங்கை வானொலியின் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு நம்பர் 1 பாடலாக இருந்தது. நேயர்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் பாடல்களின் பட்டியல் நிகழ்ச்சி அது. 

1979 - பழையன வேகமாகக் கழியத் துவங்கி, புதுமைகள் விறு, விறுவென அரங்கேறத் துவங்கிய ஆண்டாக மாறிப் போனது. வரப்போகும் பத்தாண்டுக்கான கட்டியமாக அந்த ஆண்டு இருந்தது. கிராமத்து பாரதி ராஜா, பட்டணத்து ராஜாவாக மாறி "நிறம் மாறாத பூக்களை" த் தந்தார். இருந்தாலும்,  எதிர்பாராத தருணத்தில் பளீரேனே கன்னத்தில் எதிரே நிற்பவர் அறைந்தால் எவ்வாறு நிலைகுலைந்து போவோமோ அவ்வாறான ஒரு நிலையை அந்த ஆண்டில் திரை உலகுக்கு தந்தவர் மகேந்திரன். கன்னத்தில் விழுந்த அந்த பளேர் அறை "உதிரிப்பூக்கள்". கலைவாணர் என்.எஸ்.கே. காலமான பிறகு திரைப்படம் பார்ப்பதையே நிறுத்தி விட்ட எங்கள் எதிர்வீட்டு நைனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது விரதத்தை கலைத்து விட்டு, அந்த படத்தை பார்த்துவிட்டு பலநாட்கள் அதன் பாதிப்பில் இருந்து மீளாமலேயே இருந்தார். 

நாங்கள் வீட்டுக்கு தெரியாமல் பார்த்த திரைப்படம் "அழியாத கோலங்கள்". அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஷோபா நீண்ட நாட்கள் மனதிலேயே உட்கார்ந்திருந்தார். அவரின் தற்கொலை செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனோம் நாங்கள். 

"பசுமை நிறைந்த நினைவுகளே..." பாடலுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பியது "அழியாத கோலங்களில்" இடம்பெற்ற "நான் எண்ணும்பொழுது...." பாடல். பள்ளி, கல்லூரி  நாட்களின் இறுதி நாளுக்கான பாடலாக அது மாறிப் போனது. 

கட்டுக் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடனும், காதுகளில் கடுக்கன்களுடனும், தோளில் அங்க வச்திரங்கலுடனும் பார்த்துப் பழகிப் போன தமிழாசிரியர்களுக்கு நடுவே மென்மையான புன்னகையுடனும் , தொங்கு மீசையுடனும், ஸ்டெப் கட்டிங்குடன், பெரிய சதுர சட்ட மூக்குக் கண்ணாடியுடனும், பாபி காலர் முழுக்கை சட்டை, பெல் பாட்டத்துடன் புதிய வார்ப்புகள் பாக்கியராஜ் தோற்றத்தில் தேசிய மேல்நிலைப்பள்ளியில்    எங்கள் வகுப்புக்கு புதிதாக இளமையாக ஒரு தமிழாசிரியர் வந்தார்.  அவரின் வகுப்புகள் எங்களுக்கு மகிழ்ச்சியின் தொகுப்புகள் ஆயின. அவர் எங்களின் கை பிடித்து  தமிழ் என்னும் இன்ப சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுக்க பத்திரமாக அழைத்துப் போகத் துவங்கியிருந்தார். அவர் சொல்லித் தந்த தமிழ் எங்களுக்கு சுகமாக இருந்தது. 

அவரின் பெயர் வெங்கட்ராமன். பின்னாளில் அதே பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனார். பல ஆண்டுகள் கழித்து மாவட்ட ஆட்சியரின் கூட்டம் ஒன்றில் அவருடன் நானும் அமர்ந்திருந்ததை எனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். 

---------------------------------------------------

சிட்டுக்குருவியின் பிளாஷ் பேக் இன்னமும் தொடரும்....



Comments