சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (4)

சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (4)






1978 - நான் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். வகுப்பு ஆசிரியர் திரு ஸ்ரீதர் அவர்கள். மூன்றாம் தெருவில் குடியிருந்தார். கணக்கில் புலி.  ஒரு குறிப்பிட்ட கெட்ட வார்த்தையை மிகவும் ஸ்டைலாக கூறுவார். அது திட்டுவது போல இருக்காது. ரசிக்கும்படி இருக்கும். ஒருவேளை இலங்கை வானொலி தான் என்னை எல்லாவற்றையும் ரசிக்க வைத்ததோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. 

திரைப்பட பின்னணி பாடகர்களில் T .M . சௌந்தரராஜனும், P . சுசிலாவும் மட்டுமே கோலோச்சி வந்த நேரத்தில் இளையராஜா ஜானகியையும், யேசுதாசையும், SP பலசுப்ரமணினையும்,  ஜெயச்சந்திரனையும் பெருவாரியாக பயன்படுத்த துவங்கினார். தமிழ்ப் பாடல்களில் ஒரு வரைட்டி இதனால் கிடைக்கத் துவங்கியிருந்தது. சுசீலாவையும், TMS ஐயும் குறை கூறமுடியாது. இருப்பினும், புதிய குரல்களின் வருகை தமிழ் திரை இசையை துள்ளியோட வைத்தது என்றே கூற வேண்டும். இந்த வகையில் முக்கியமான ஒரு தருணத்தில் தமிழ்த் திரை இசையை ஒரு புதிய அலைவரிசைக்கு திருப்பிய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.

யேசுதாசையும், SPB ஐயும் ரசிக்கத் துவங்கியிருந்த நேரத்தில் அவர்கள் பாடிய பிற மொழிப் பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு இலங்கை வானொலியின் மூலம் கிடைக்கப் பெற்றது குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வு. 

இப்படி கேட்டு பரவசத்தில் என்னை மூழ்கடித்த பாடல் 'சித்சோர்' படத்தில் இடம் பெற்ற 'கோரி தேரா காவோ படா....' பாடல். இலங்கை வானொலியில் ஹிந்தி பாடல்கள் நிகழ்ச்சியில் கண்டிப்பாக தவறாமல் தினசரி இடம் பெறக்கூடிய பாடலாகவே ஒரு நேரத்தில் இந்த பாடல் அமைந்து போனது. எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவரின் விருப்பமாக இந்த பாடல் இடம் பெறும். பாடலின் இடையிடையே வரும் அந்த குழல் இசையும் பாடலின் எளிமையான மெட்டும் இன்று கேட்டாலும் காதுகளில் தேன் பாய்ச்சும்.  சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தையே தூர்தர்ஷனில் பார்த்த போதும், இந்த பாடலுக்கு இசையமைத்த ரவீந்திர ஜெயின் பற்றிய தகவல்களை அறிய நேர்ந்த போதும் இந்த பாடலின் மீதான  அபிமானம் இன்னும் மேலே கூடிக்கொண்டே தான் போனது. 

சரி, தமிழ்ப் பாடல்களுக்கு வருவோம். 1978 இல் இளையாராஜா உயரே, உயரே போய்க் கொண்டிருந்த போதிலும் மெல்லிசை மன்னரும் அவருக்கு  ஓரளவுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே தான் இருந்தார். 

சட்டம் என்கையில், பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களின் மூலம் கமலும், ரஜினியும் முந்தைய தலைமுறை நடிகர்களை மெல்ல பின்னே தள்ளிக் கொண்டிருந்தனர். பாரதிராஜா, தேவராஜ் மோகன் போன்றோர் பழைய தலைமுறை இயக்குனர்களை முந்திக் கொண்டிருந்தனர். ஆனாலும், ஸ்ரீதர் மட்டும் புதிய தலைமுறைக்கும் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு காரணம், அவர் தனது பாணி படங்களில் கமல், ரஜினி போன்ற வளர்ந்து வரும் நடிகர்களை பயன்படுத்திக் கொண்டிருந்ததும், இசைத் துறையை மக்களின் மனம் கவர்ந்த இளையராஜாவிடம் ஒப்படைத்ததுமாக கூட இருக்கலாம். 

1978 இல் பத்திரிக்கைகளால் பரபரப்புடன் பேசப்பட்ட ஒரு படம் 'அவள் அப்படித்தான்'. ருத்ரையா இயக்கியிருந்த படம் அது. அந்த படத்தை அப்போது நான் பார்க்கவில்லை எனினும், அந்த படத்தில் வரும் உறவுகள் தொடர்கதை பாடல் அப்போதைய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. யேசுதாசின் குரல் வளம் கேட்போரை கட்டிப் போட வைத்தது. பல வருடங்கள் கழித்து அந்த பாடலை தொலைக்காட்சியில் பார்க்கும்போது தான் ருத்ரையாவின் திறமை புரிந்தது. சாதாரணமாக சுமாராகவே அழகாக இருக்கும் ஸ்ரீப்ரியா இந்த படத்தில் மிக அழகாக இருப்பார். அந்த ஒரு பாடலில் மட்டும் எவ்வளவு க்ளோஸ் அப் காட்சிகள். கருப்பு வெள்ளையில் ஒரு காவியமாகவே அந்த பாடல் இருக்கிறது. பாடலும் சரி, பாடலை படமாக்கியிருந்த விதமும் சரி, மிக அற்புதம். ருத்ரையா போன்ற திறமை சாலியை நாம் தவற விட்டு விட்டோமா..? 

தீபம், தியாகம் போன்ற சிவாஜி கணேசன் நடித்த படங்கள் ஓரளவு அதன் பாடல்கள் காரணமாகவே இன்னமும் நினைவில் இருக்கின்றன என்றால் சிரஞ்சீவி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி, பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற படங்கள் அதன் மொக்கைத் தன்மைக்காகவும், சிவாஜியின் பொருந்தாத கதாபாத்திரங்களுக்காகவும், காமெடியான உடை விக் அலங்காரங்களுக்காகவும், ஈர்க்காத மெல்லிசை மன்னரின் பாடல்களுக்காகவும் இன்னமும் மறக்காமல் இருக்கின்றன. 

எம்ஜியார் நடிப்பை உதறிவிட்டு அரசியலுக்கு போய் விட்டார். இல்லையெனில், மாறிக் கொண்டிருந்த திரையுலகம் அவரை கழற்றி விட்டிருக்கும். 

இலங்கை வானொலி கொண்டாடிய தமிழ்த் திரை நடிகர் ஒருவர் அந்த நேரத்தில் யார் என்றால் அவர் 'மக்கள் கலைஞர்' தான்.  


சிட்டுக்குருவியின் பிளாஷ் பேக் இன்னமும் தொடரும்....





Comments