டூரிங் டாக்கீஸ் : (4)
டூரிங் டாக்கீஸ் : (4)
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
TMS பாடல்களில் முதலில் நான் கேட்ட பாடல் - 'உள்ளம் உருகுதையா முருகா - இன்றும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கிறது.
நான் வெஸ்டன் துவக்கப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த காலம் அது (எழுபதுகளின் நடுப்பகுதி).
மன்னார்குடி உப்புக்காரத்தெரு முத்து மாரியம்மன் கோவிலின் பின்புறம் இருந்த மைதானத்தில் 'சைக்கிள் சுற்றுபவர்' ஒருவர் டேரா போட்டிருந்தார். கிட்டத்தட்ட ஐந்தாறு நாட்கள் ஒரு வளைந்த பாதையில் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்துகொண்டிருப்பார். உணவு, தூக்கம் எல்லாமுமே சைக்கிளில் தான். தெருவாசிகள் அன்போடு அளிக்கும் நன்கொடை தான் அவரின் வருமானம். சைக்கிளில் பல ஜால வித்தைகள் எல்லாம் செய்து காண்பிப்பார். மாலை முதல் இரவு வரை அந்த இடம் ஜே ஜே என்று இருக்கும். கடைசி நாளன்று சைக்கிளை விட்டு கீழிறங்கும் முன்பு அவரை வாழ்த்தி பிரமுகர்கள் பேசி சன்மானம் அளித்து கௌரவிப்பார்கள்.
பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக முத்து மாரியம்மன் கோவில் மைதானத்துக்கு வருவோம். மெதுவாக கூட்டம் சேரத் துவங்கும். ரிக்கார்டு பிளேயரில் 'உள்ளம் உருகுதையா' பாடல் ஒலிக்கத் துவங்கும். 'அழகென்ற சொல்லுக்கு முருகா', கல்லானாலும் திருசெந்தூரில் போன்ற பாடல்கள் பின்னர் வரிசையாக ஒலிக்கத் துவங்கும்.
அந்த ரிகார்டு முடிந்ததும் 'அடி என்னடி ராக்கம்மா பாடல் துவங்கி பல திரைப்பாடல்கள் ஒளிபரப்பப்படும். பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருள் வரும் நேரம் வரை சைக்கிளில் செய்து காட்டும் வித்தைகளை ரசித்துக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம்.
இலங்கை வானொலியில் அப்போது கேட்ட பெரும்பாலான பாடல்கள் சௌந்தர்ராஜன்-சுசிலா ஆகியோர் பாடியது தான். அதெல்லாம் வெறுமனே கேட்ட ஞாபகம் மட்டுமே இருக்கிறது. குறிப்பாக அவை என்ன என்ன பாடல்கள் என்பது நினைவில் இல்லை.
நினைவில் நிற்கத் துவங்கிய பாடல்களை இப்போது வரிசை இட துவங்கினால் பட்டியலில் முதலில் ஓடி வருவது - 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி' - தீபம் படத்தில் வரும் பாடல் தான். ஜானகியுடன் TMS. என்ன ஒரு காம்போ. TMS இன் கணீர் ஆண்குரலும், ஜானகியின் மெல்லிய பெண்மைக் குரலும். அப்பப்பா, அற்புதம். அந்த பாடலின் சரணத்தில் வரும் 'தங்க வண்ணக் கழுத்துக்கு தங்க மாலை... சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை... சான்சே இல்லை. அதுவும் அந்த பாடல் இறுதியில் வரும் 'ஆராரிரோ....' ஹம்மிங், ஹையோ...!!ஆரம்ப கால இளையராஜா புகுந்து விளையாடியிருப்பார் அந்த பாடலில்.
TMS - ஜானகி இணை அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த இணை ஆனது.
பின்னர் வெளிவந்த 'தியாகம்' படத்தில் இடம் பெற்ற 'தேன்மல்லிப் பூவே' மற்றுமொரு அற்புதப் பாடல். அதிலும் சரணம் மிகப் பிரமாதமாக இருக்கும்.
TMS - ஜானகி பாடலை பின்னர் தேடித் தேடி ரசிக்கத் துவங்கினேன்.
இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம்
நல்ல வாழ்வு வந்தது - எல்லாம் அவளே
காதலின் பொன் வீதியில் - பூக்காரி
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி - பட்டாம்பூச்சி
இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் பலவற்றை பாடிய TMS அவர்கள் ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசையில் பாடுவது நின்று போனது. அது ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் பிரியாமல் இருந்திருந்தால் மேலும் பல நல்ல பாடல்கள் தமிழுக்கு கிட்டியிருக்கும். துரதிர்ஷ்டம். வேறு என்ன சொல்வது..?
இளையராஜா இசையில் TMS பாடிய சில அருமையான பாடல்கள் :
அன்னக்கிளி உன்னைத் தேடுதே - அன்னக்கிளி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம்
நேரமிது நேரமிது - ரிஷிமூலம்
ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம்
எந்தன் பொன் வண்ணமே -நான் வாழ வைப்பேன்
சிந்து நதிக்கரை ஓரம் - நல்லதொரு குடும்பம்
அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
நான் ரசித்த TMS அவர்களின் இதர பாடல்கள் பற்றிய விவரங்கள் அடுத்த பகுதியில் ....
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment