சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (3)
சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (3)
1977 - நான் மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடிக்கு வந்து விட்டேன்.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு. தேசிய நல்லாசிரியர் விருது பெற்று பணி நீட்டிப்பில் இருந்த அமரர் ஸ்ரீநிவாசன் தான் தலைமை ஆசிரியர். பி.ஆர். கணேசன் என்ற ஒரு அற்புதமான மனிதர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர்.. அன்பாக மாணவர்களிடம் பழகுவார். பக்கத்து வகுப்புக்கு ஆசிரியர் வி .ஆர். பாலசுப்ரமணியன். அந்த வகுப்பில் படித்த எனது நண்பர்கள் எங்களை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். ஏனெனில் அந்த ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர்.
மதிய உணவு இடைவேளை என்பது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்டு இருக்கும். வீடு சென்று, மதிய உணவு அருந்தி விட்டு, மீண்டும் மதிய வகுப்புகளுக்கு வந்து விடுவோம். பள்ளியில் இருந்து பிருந்தாவன நகர் எப்படியும் ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதாலாகவே இருக்கும். விறு விறுவென வேகமாக வீட்டுக்கு வந்தவுடன் செய்யும் முதல் வேலை - வானொலியை ஆன் செய்வது தான்.
இலங்கை வானொலியின் தமிழ் சேவை தனது மதிய நேரத்து ஒலிபரப்புகளை நண்பகல் பனிரெண்டு மணிக்கு துவக்கி விடும். தொடர்ச்சியான இசை மழை வானொலியில் இருந்து பொழிந்து கொண்டே இருக்கும்.' என் விருப்பம், பிற மொழிப் பாடல்கள், இசையும் கதையும்' என பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபாப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.
என் விருப்பம் நிகழ்ச்சியில் அன்றைய அறிவிப்பாளரின் விருப்பமான பாடல்கள் இடம் பெறும். பெரும்பாலும் பழைய படங்களில் இருந்து தான். TMS , சுசிலா ஆகியோர் பாடிய எம்ஜிஆர், சிவாஜி படங்களின் பாடல்கள் தான் அடிக்கடி ஒளிபரப்பாகும். பழைய பாடல்களும் எங்களுக்கு அறிமுகமாகத் துவங்கியது இலங்கை வானொலி மூலம் தான்.
என்ன தான் பழைய பாடல்கள் அப்போதைய பெருவாரியான நேயர்களின் விருப்பப் பாடல்களாக இருந்த போதிலும், எழுபதுகளின் பிற்பகுதி தமிழ் திரை இசையின் போக்கை திசை திருப்பியதில் முக்கிய பங்காற்றியது என்றே கருதுகிறேன். திரை இசை திலகம் அமரர் கே.வி. மகாதேவன் தமிழில் இருந்து தெலுங்கு படங்களுக்கு சென்று விட்டார். மெல்லிசை மன்னர் தான் அசைக்க முடியாத மாமன்னராக இருந்தார் என்று நம்பப்பட்டாலும், சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார் போன்ற இசை அமைப்பாளர்கள் அவ்வப்போது மெல்லிசை மன்னருக்கு ஷாக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆட்டுக்கார அலமேலு மூலம் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் அளித்திருந்தார். எண்பதுகளில் திரை இசையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவர்களும் உருவாகுவார்கள் என்பதற்கு கட்டியம் கூறியது போல் இருந்தன அப்படத்தின் பாடல்கள். அவர்கள் அதற்கு முன்னரே எம்ஜிஆர் நடித்த சில படங்களுக்கும் இசை அமைத்து ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தனர். 'நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, ராமன் தேடிய சீதை' போன்ற படங்கள் அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தன. ஆனாலும், அவர்களின் பாடல்கள் பெரும்பாலும் ஹிந்தி ஹிட் பாடல்களின் ஏழ்மையான தமிழ்த் தழுவல்களாக இருந்தது அவர்களின் மீதான நம்பகத் தன்மைக்கு களங்கம் விளைவித்துக் கொண்டிருந்தது.
பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் இடம் பெற்ற 'தேன் சிந்துதே வானம் ...' பாட்டின் மூலம் ஜி.கே. வெங்கடேஷ் தமிழ்த் திரையுலகில் ஒரு மௌன புயலாக உருவானார். ஆனால், அந்த புயல் கன்னட திரையுலகில் கரை கடந்தது. தமிழ் இசை அமைப்பாளர்கள் தப்பினார்கள்.
இந்த இடத்தில் தான் தமிழ்த் திரை இசை உலகை புரட்டிப் போடப்போகும் சுனாமிக்கான சின்ன அதிர்வு திரை இசைக் கடலின் ஆழமான பரப்பில் அழுத்தமாக ஏற்பட்டது. ஆம், ஜி.கே. வெங்கடேஷிடம் அப்போது இளைய ராஜா உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
'தேன் சிந்துதே வானம்....' பாடலை சற்று ஒருமுறை கூர்ந்து கவனித்துப் பாருங்களேன். ராஜாவின் சாயல் அல்லது பாணி லேசாகத் தென்படும். அதற்காக வெங்கடேஷைக் குறை கூற முடியாது. மிகுந்த திறமையாளரான அவர் கன்னட திரை உலகில் ஒரு முழு ரவுண்டு வந்தார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்காக அவர் இசை அமைத்த பாடல்கள் பல இன்னமும் கன்னட ரசிகர்களால் தினசரி கேட்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
வெங்கடேஷ் திரை உலகில் ஓய்ந்த நேரத்தில் அவரை தன்னுடனேயே வைத்துக் கொண்டு அவருக்கு குரு காணிக்கை செலுத்தினார் இளைய ராஜா.
1977 இல் தான் காயத்ரி, அவர் எனக்கே சொந்தம், புவனா ஒரு கேள்விக்குறி, கவிக்குயில்.....என வரிசையாக படங்கள் வெளிவந்து பாடல்கள் சக்கை போடு போட்டு இளைய ராஜாவை தமிழ்த் திரையுலகின் நெம்பர் 1 இடத்துக்கு மெதுவாக முன்னேற்றிக் கொண்டிருந்த வேளையில் தான் பாரதிராஜாவின் 16 வயதினிலே வெளிவந்து இளையராஜாவை ஒரேயடியாக தமிழ்த் திரையுலகின் முதன்மை இடத்துக்கு பிடித்து தள்ளி விட்டது. தள்ளாடாமல் அந்த இடத்தை ஒரு இருபது ஆண்டுகாலத்துக்கு இளையராஜாவால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது எனில் அதற்க்கான துவக்கத்தை அவருக்கு கொடுத்தது 16 வயதினிலே தான்.
இளைய ராஜாவின் இந்த தடையற்ற முன்னகர்தலுக்கு இலங்கை வானொலியின் பங்கு முக்கியமானது என்பது மறுக்க முடியாதது.
சிட்டுக்குருவியின் பிளாஷ் பேக் இன்னமும் தொடரும்....

- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment