சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (2)
சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...! - (2)
1976 - திரை இசை என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு.அது, நான் அப்போது மயிலாடுதுறையில் உள்ள கூறைநாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். நான் தங்கியிருந்த எனது சித்தப்பா வீட்டில் வானொலிப் பெட்டி கிடையாது. வெளியே செல்லும் போது வானொலி இருக்கும் வீடுகளில் இருந்தும், தேநீர் கடைகளில் இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். காலை ஏழு மணிக்கு கடைக்கு சென்று ஏதாவது பொருள் வாங்கி வருமாறு சித்தியோ, சித்தப்பாவோ கூறினால் மகிழ்ச்சியுடன் வீட்டில் இருந்து ஓடுவேன். பக்கத்து தெருவில் இருந்த ஒரு சிறிய மளிகைக் கடையில் வானொலி இருக்கும். சத்தமாக அதில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்.
ஏழு மணிக்கு தனது நிகழ்ச்சிகளைத் துவக்கும் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை 2 இல் முதல் நிகழ்ச்சியாக 'பிறந்த நாள் வாழ்த்து' இடம் பெறும். 'பிறந்த நாள்.... இன்று பிறந்தநாள்..! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...! ஹாப்பி பர்த்டே டு யு...' என்ற T .M. சௌந்தரராஜன் பாடிய பாடலின் பல்லவியுடன் அன்றைய நாள் துவங்கும். அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அன்பருக்கோ அல்லது செல்லக் குழந்தைக்கோ வாழ்த்து தெரிவிக்கும் அத்துனை பேர்களின் பெயர்களும் அறிவிப்பாளரால் குதூகலமாக ஏற்ற இறக்கங்களுடன் படிக்கப்படும். வாழ்த்து தெரிவிப்போர் பட்டியலில் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, ...... போன்ற உறவின் முறைகள் அழகாக அறிவிப்பாளரால் உச்சரிக்கப்படும். மயில்வாகனம், ராஜேஸ்வரி சண்முகம், பி.ஹெச். அப்துல் ஹமீது மற்றும் கே. எஸ். ராஜா ஆகியோரின் துல்லியமான உச்சரிப்பு நேயர்களைக் கட்டிப்போடும். பதினைந்து நிமிடங்கள் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்படும். இனிமையான, அப்போது தான் வெளிவந்த படங்களின் பாடல்களாகவே அது இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுப்பூட்டாத அந்த பாடல்களை முழுக்க கேட்டுவிட்டு தான் நான் வாங்கிய பொருளோடு வீடு வந்து சேர்வேன்.
நான் ஏற்கனவே தெரிவித்தது போல எனது மனதில் திரை இசை என முதலில் நுழைந்தது அமரர் எம்.பி. ஸ்ரீனிவாசனின் 'மதன மாளிகை' பாடல்கள் தான். பின்னர் தான் இளையராஜா மெதுவாக உள்ளே நுழைந்தார். இளையராஜாவின் முதல் இசையாக எனது செவிகளில் நுழைந்து மனதினில் நிறைந்த பாடல் அவரின் இரண்டாவது படமான 'பாலூட்டி வளர்த்த கிளி' யில் இடம் பெற்ற 'நான் பேச வந்தேன்..... சொல்லத் தான் ஓர் வார்த்தை இல்லை....' பாடல் தான். காலையில் ஒரு முறை கேட்டவுடன் அன்றைய தினம் முழுவதும் முனு முணுப்பது அந்த பாடலாகத் தான் இருக்கும். ஏனோ தெரியவில்லை, இளைய ராஜா பலதரப்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்திருந்தாலும் அவரின் மெலடி தான் இன்றுவரை என் மனதில் நீங்கா நினைவுகளை ஏந்தி உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
இந்த பாடலை கேட்டு இந்த படத்தை சுந்தரம் தியேட்டரில் (அல்லது பியர்லசா ..... சரியாக நினைவில்லை.) பார்த்தேன். படமும் நினைவில் இல்லை. படம் பார்த்த தியேட்டரும் நினைவில் இல்லை.
பாடல் மட்டும் இன்றும் இதயத்தின் மூலையில் மெதுவாக முனங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு காரனம இளைய ராஜாவா... அல்லது இலங்கை வானொலியா ...?
சிட்டுக்குருவியின் பிளாஷ் பேக் இன்னமும் தொடரும்....

- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment