இசை - வா இந்தப் பக்கம் - ஷ்யாம்
இசை
வா இந்தப் பக்கம் - ஷ்யாம்

எழுபதுகளின் இறுதி என்று நினைக்கிறேன். அல்லது எண்பதுகளின் ஆரம்பமோ தெரியவில்லை.
~
மன்னார்குடி செண்பகா தியேட்டரில் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் திரையிடுவதற்கென்றே சக்கரவர்த்தி திருமகன், மகாதேவி, அரசகட்டளை, மலைக்கள்ளன் போன்ற திரைப்படப் பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.
அந்த தீபாவளிக்கு திடீரென்று ஒரு புது படம் ரிலீஸ் செய்தார்கள். கமல், ஸ்ரீதேவி மற்றும் ஏதோ ஒரு தெலுங்கு பாபு நடித்த படம் அது. படத்தின் பெயர் "மனிதரில் இத்தனை நிறங்களா". ஆர்.சி. சக்தி இயக்கிய படம்.
~
நண்பர்களுடன் தீபாவளி அன்றே படத்துக்கு சென்றோம். என்ன கதையோ, என்ன சிறப்போ அந்த படத்தைப் பற்றிய எந்த நினைவுமே இன்றைக்கு நினைவில் இல்லை - ஒன்றே ஒன்றைத் தவிர.
படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையும் அற்புதமாக இருந்தன. ஆனால், இசை இளையராஜா அல்ல. பின்னர் பலமுறை - இன்றுவரை கேட்க நேரும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் கூடவே முனுமுனுக்க வைக்கும் அந்த "மழை தருமோ என் மேகம்" பாடலுக்கு இசை அமைத்திருந்தவர் "ஷியாம்".
~
சென்னை மயிலாப்பூரில் தமிழ் கிருத்துவப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்த சாமுவேல் ஜோசப் என்கிற ஷ்யாம் தான் 'ஷ்யாமேட்டன்' என்று மலையாளிகளால் கொண்டாடப்படும் பிரபல மலையாள இசையமைப்பாளர்.
இன்றைக்கு, பத்து மலையாளிகளில் இரண்டு மலையாளிகளின் செல்பேசியில் இவரின் இசை தான் ரிங் டோன் ஆக இருக்கும்.
மௌலி இயக்கிய 'வா இந்தப் பக்கம்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த ராகம்' பாடலின் வித்தியாச இசைக்கு சொந்தக்காரர் இந்த ஷ்யாம் தான்.
மலையாளம் தவிர, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார்.
~
மெல்லிசை மன்னரிடம் வயலினிஸ்ட் ஆக முதலில் பணிபுரியத் துவங்கிய இவர், பிரபல இசையமைப்பாளர் சலில் சௌதுரி இசையமைத்த பல மலையாளப் படங்களில் அவருக்கு உதவி புரியத் துவங்கினார். சலில் சௌதுரி இசையமைப்பில் புகழ்பெற்ற மலையாளப் படமான 'செம்மீன்' படத்துக்கு அவரிடம் உதவியாளராக இவர் பணி புரிந்தார்.
திரைப்படங்களில் இவர் முதலில் இசை அமைத்தது தமிழில் தான். 'கருந்தேள் கண்ணாயிரம் ' என்ற படம் தான் இவரின் இசை அமைப்பில் வெளிவந்த முதல் படம். பிரபல மலையாள நடிகை ஷீலா தான் இவரை மலையாளத் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர். அன்று துவங்கிய இவரின் திரை இசைப்பயணம் பல்வேறு எல்லைகளைக் கடந்து விஸ்தாரமாக சென்றது.
ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை எஸ்.எம். ஜெயகுமார் இவரிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேற்கத்திய பாணி இசை கலந்த இவரின் பாடல்கள் மெல்லிசையின் தேனிசை.
~
'தீம் மியுசிக் ' எனப்படும் வகை இசை இவரால் மிகப் பிரபலம் அடைந்தது. மம்முட்டி நடித்த 'நியு டெல்லி' திரைப்படத்தின் 'தீம் மியுசிக்' இன்றுவரை மலையாள படவுலகில் மிகவும் பிரபலமான ஒன்று.
~
ஷியாம் இசையில் வெளிவந்த சில மறக்க முடியாத பாடல்கள் :
கருந்தேள் கண்ணாயிரம் படத்தில் வரும் பாப் பாடல்கள் வகையை சேர்ந்த "பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே "
உணர்சிகள் படத்தில் "நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் "
மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் "மழை தருமோ என் மேகம்", "பொன்னே பூமியடி "
தேவதை படத்தில் ஜானகி பாடிய "கலீர் கலீர்"
பஞ்ச கல்யாணி படத்தில் "அடி அடி அடி வாங்கடி', "பூமாதேவி போலே வாழும்", "ராசா வந்தான்டி"
வா இந்த பக்கம் படத்தில் "ஆனந்த தாகம்"
நன்றி மீண்டும் வருக படத்தில் "ஐ லவ் யு..காதல் கனவுகளே"
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்தில் "பாஞ்சாலி இவளா.. அந்த பாஞ்சாலன் மகளா"
குழந்தை ஏசு படத்தில் "செல்வமே தெய்வீக மலரே". "கண்ணே வா கண்மணியே வா", மற்றும் "தேவன் கோவில் மணி தினமும் வாழ்த்தும் இனி" (அற்புதமான மெலடி)
~
தொண்ணூறுகளின் மத்தி வரை பரபரப்பாக இயங்கிய ஷியாம் பின்னர் மெதுவே தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்கினார்.
ஆனாலும் அவரின் பாடல்கள் இன்னமும் கலீர் கலீர் என்று மனதில் இனிய அலைகளை பரவ விட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
~
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment