டூரிங் டாக்கீஸ் (12)
டூரிங் டாக்கீஸ் (12)
ஒரு தலை ராகமும், தணியாத தாகமும் :-

எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த ஒருதலை ராகம் தமிழ்த் திரையுலகின் அனைத்து பார்முலாக்களையும் உடைத்து தூள் தூளாக்கியது.
சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி போன்றோர் கல்லூரி மாணவர்களாக ரசிகர்களை கொடுமைப்படுத்திய காலமும் ஒன்று இருந்திருக்கிறது.
ஆனால், ஒரு தலை ராகம் திரைப்படமோ உண்மையான கல்லூரி மாணவர்களாகவே படத்தில் நடித்திருந்த அனைவரையும் வாழ வைத்திருந்தது.
ஒரு தலை ராகம் தமிழ்த் திரை உலகில் ஏற்படுத்திய தாக்கங்களைத் தனியே ஒரு கட்டுரையில் பின்னர் பார்க்கலாம்.
~
ஒரு தலை ராகம் படத்தில் இடம் பெற்ற பாடல்களையும், அதன் இசை அமைப்பாளர்களையும் இப்போது சற்று நினைத்துப் பார்க்கலாம்.
இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையானோர் ஒரு தலை ராகம் படத்திற்கு பாடல்கள் எழுதி இசை அமைத்தது டி. ராஜேந்தர் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
டி. ராஜேந்தர் என்பது உண்மை தான். ஆனால் அவருடன் இனைந்து இன்னொருவரும் அப்படத்திற்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
அவர் ஆகுல அப்பாலராஜு என்கிற A.A. ராஜ்.
ஹார்மோனியம் வாசிப்பதில் நிபுணராக இருந்த ராஜ், திரை இசை மீது கொண்ட காதலால் தான் பார்த்து வந்த உணவு ஆய்வாளர் வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்தார்.
பிரபல இசை அமைப்பாளர் எஸ். ராஜேஸ்வர ராவிடம் சேர்ந்த ராஜ் அவரின் பல படங்களுக்கு ஹார்மோனியம், வயலின் வாசிப்பவராகப் பணியாற்றினார்.
இவரின் திறமையையும், மேதமையையும் அறிந்த மாஸ்டர் வேணு தன்னுடன் இவரை இணைத்துக் கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட காலம் மாறிப் போச்சு, எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி, மஞ்சள் மகிமை ஆகிய திரைப்படங்களுக்கு திரு. வேணு அவர்களுடன் இணைந்து அருமையான பாடல்களை A.A. ராஜ் வழங்கியுள்ளார்.
நோட்ஸ் எழுதுகிற இவரின் திறமையையும், இசை கோர்க்கும் ஜாலத்தையும், பொறுமையாக பாடகர்களுக்கு பாடும் கலையை சொல்லிக் கொடுக்கும் தன்மையையும் கண்டுணர்ந்த பிரபல இசை அமைப்பாளர்கள் சலபதி ராவ், தட்சிணா மூர்த்தி மாஸ்டர், சத்யம், சக்கரவர்த்தி போன்றோர் இவரை தங்களின் உதவி இசை அமைப்பாளராக சேர்த்துக் கொண்டனர்.
~
இசை அமைப்பாளர் வாய்ப்பு வரும் காலத்திற்காக காத்திருக்க தொடங்கிய ராஜுவுக்கு வாய்ப்பு தெலுங்கு பட உலகம் மூலம் தேடி வந்தது.
மூன்று தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்தார் ராஜ். பாடல்கள் அருமையாக இருந்தாலும் படங்கள் தோல்விப் படங்களாக அமைந்ததால் தொடர்ந்து இசை அமைப்பில் நிலைத்து நிற்கக்கூடிய வாய்ப்பை இழந்தார்.
ஆனாலும், கலங்காத ராஜ், மீண்டும் பிரபல இசை அமைப்பாளர்களின் உதவியாளராக தனது பணியினை தொடர்ந்து வரத் துவங்கினார்.
~
1979 இல் ஒரு தலை ராகம் படத்துக்கு ராஜேந்தருக்கு உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.படத்தின் பாடல்களுக்கு ராஜேந்தருக்கு உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே முழுப் படத்திற்கும் பின்னணி இசை கோர்க்கும் பணியை இவரே மேற்கொண்டார்.
இலங்கை வானொலி, விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்புகளில் ஒலிபரப்பப்பட்ட இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைப்பாளர் என்று இவரின் பெயரும் சேர்த்தே அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இன்ட்ரிகோஇசைத் தட்டுகளின் முகப்பில் இசை என்னும் தலைப்புக்கு நேரே "ராஜேந்தர்-A A ராஜ்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
~
ராஜேந்தர் தனது பன்முக திறமையினால் அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றார். வழக்கம் போல ராஜுவுக்கு அவர் துரதிர்ஷ்டம் புதிய வாய்ப்புகளை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக 1981 இல் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு தலை ராகம் சங்கர் நடித்த "உதயமாகிறது" என்னும் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு ராஜ் அவர்களுக்கு கிடைத்தது.
அவனுக்கென்றே வந்தாள், அழகு ராதை, அழகு சிந்தும் பூங்கொடி கோதை மற்றும் அற்புதமான மெலடியான நான் உன்னை மன்றாடினேன், நீ என்னைக் கொண்டாடினாய் ஆகிய பாடல்கள் இலங்கை வானொலி மூலம் புகழ் பெற்றன.
ஆனால் படம் தோல்விப் படமாக அமைந்தது. கொடுமை என்னவெனில் இந்த பாடல்களில் ஒன்று கூட இப்போது யு டியுபிலோ இணையத்திலோ கிடைக்கவில்லை.
~
ஒரு தலை ராகம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் மன்சூர் கிரியேஷன்ஸ் இ.எம். இப்ராஹிம் "தணியாத தாகம்" என்ற தனது அடுத்த படத்தை தயாரித்து இயக்க முடிவெடுத்தார். டெல்லி கணேஷ், ஸ்வர்ணா நடித்த இப்படத்திற்கு இசை அமைக்க A A ராஜ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினார்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கு மேல் தயாரிப்பிலேயே முடங்கிக் கிடந்த தணியாத தாகம் ஒரு வழியாக 1982 இல் வெளியாகி வெளியான வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது.
A. A. ராஜ் ஐப் பார்த்து விதி மறுபடியும் சிரித்தது.
~
திரும்பத் திரும்ப இலங்கை வானொலியால் ஒலிபரப்பப்பட்ட "தணியாத தாகம்" படப் பாடல்கள் இந்த படத்தின் நினைவை ரசிகர்களின் இதயத்தில் ஓரளவு நிறுத்தி வைத்தது.
இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. பூபால ராகத்தில் அமைந்த "மலராத மலரெல்லாம்", பி. வசந்தா பாடிய "உன்னை மறக்கவில்லை நானே, என்னை மறந்ததெல்லாம் ஏனோ", ஆகிய பாடல்கள் அருமையாக இருந்தாலும்,
- படத்தின் ஆகச் சிறந்த பாடல் மலேஷியா வாசுதேவன்-ஜானகி இணை பாடிய "பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்" பாடல் தான்.
மலேஷியா வாசுதேவனின் முற்றிலும் வித்தியாசமான, மென்மைத் தன்மை மேலோங்கி நிற்கும் குரலை சில பாடல்களில் மட்டுமே காண முடியும். அவைகளில் இந்தப் பாடலுக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு.
எண்பதுகளின் பாடல்களை இன்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு "பூவே நீ யார் சொல்லி" பாடலைக் கண்டிப்பாக மறக்கவே முடியாது.
~
தணியாத தாகத்துக்குப் பின்னர் A A ராஜ் அவர்களுக்கு திரை இசை அமைக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. பக்திப் பாடல்களுக்கு இசை அமைக்கத் துவங்கினார். அதிலும் தனது முத்திரையைப் பதித்தார். பி.பி.ஸ்ரீநிவாஸ்-ஜானகி பாடிய "ஸ்ரீ ராகவேந்திரர் சுப்ரபாதம்" இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தெய்வீகமான இசை அது.
திருமண வைபவ நிகழ்சிகள் குறித்த சுசிலா பாடிய A A ராஜ் இசை அமைத்த "ஆனந்தம், ஆனந்தம்" பாடல்கள் இன்னமும் கூட திருமண காணொளி சி.டி.க்களில் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
~
திரை இசையமைப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருந்திருக்கிறார் ராஜ். இவர் தலைவராக இருந்த காலத்தில் இசைக்குழுவில் பணியாற்றும் கருவி இசைஞர்களுக்கு நலத் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி, அவை இன்றும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
~
சில நேரங்களில், திறமைசாலிகள் மீது விதி ஏனோ ஒருவித வன்மம் கொண்டு அலைவது, வாழ்க்கையின் புரியாத புதிர்களில் ஒன்றாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறது.
அதீத திறமை இருந்தும் புகழும், அதிர்ஷ்டமும் ஒத்துழைக்காதது இவர் வாழ்க்கையின் மாபெரும் சோகம்.
இவரின் மறைவு யாராலும் அழப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் கால வெளியில் கரைந்து போனது.
தமிழ்த் திரை இசையின் மறக்கவியலா சில கானங்கள் அவரை என்றென்றும் நம் நினைவில் இருத்திக் கொண்டேயிருக்கும்..
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment