டூரிங் டாக்கீஸ் (11)

டூரிங் டாக்கீஸ் (11)


 "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" 


அப்போது மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். நானும் எனது நண்பன் பாலுவும் பொதுத் தேர்வுக்கு சேர்ந்து படித்து வந்தோம். முடிந்தவரை இரவு விழித்திருந்து படித்து விட்டு பின்னர் திண்ணையிலேயே தூங்கி விடுவோம். அதிகாலை என் பாட்டி எங்களை எழுப்பி விடுவார். மறுபடியும் படிக்கத் துவங்கி விடுவோம். படிப்பதை விட அரட்டை தான் அதிகமாக இருக்கும். 


"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்றொரு படம் செண்பகா தியேட்டரில் வெளிவந்திருந்தது. வி.என். ஜானகி நடித்த ஒரு பழைய படம் அது. அந்தக் கதையை சிறு வயதில் பாட்டி சொல்லக் கேட்டிருந்தேன். படமாக அது ஓடுகிறது என்று தெரிந்தவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பாட்டி தூங்கிவிட்டார் என்று தெரிந்தவுடன் திண்ணையில் நாங்கள் தூங்குவது போல தலையணையை சரிசெய்து வைத்துவிட்டு தியேட்டருக்கு ஜூட் விட்டோம்.


செண்பகா தியேட்டரில் ஒரே ஒரு ப்ரொஜெக்டர் தான். ஒரு படத்துக்கு நான்கு இடைவேளை விடுவார்கள். டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்.

படம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் என்னவோ சுவாரஸ்யமாக தான் இருந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் பாடல்கள் தொல்லை துவங்கியது. சிறிது நேரத்தில் நெளிய ஆரம்பித்தோம்.

படம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலோர் இறுதி பஸ்ஸை தவற விட்டவர்கள். ஆங்காங்கே கட்டையை நீட்டி படுத்து விட்டனர். யாருக்காக ஓடுகிறது என்று தெரியாமலேயே தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கும் கொட்டாவி வரத் துவங்கி விட்டது. நல்ல வேளை இடைவேளை வந்தது. தூங்கிக் கொண்டிருந்த சிலர் எழுந்திருந்து தம் அடிக்க வெளியே வந்தனர்.

மணி என்னவென்று கைக்கடிகாரம் கட்டியிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். நள்ளிரவு 12.00 ஐ தாண்டி விட்டிருந்தது. இடைவேளையே 12.00 மணி என்றால் படம் எப்போது முடியுமோ என்று எங்களுக்கு பயம் வரத் துவங்கியது. அதிகாலை பாட்டி சீக்கிரமே எழுந்து விடுவார். எங்களை காணாமல் என்ன செய்வாரோ என்று நினைக்கும் போதே அச்சம் ஏற்படத் துவங்கியது. 


வீட்டுக்கு செல்வது என்ற முடிவுக்கு வந்தோம். தியேட்டரின் மெயின் கேட் இழுத்து சாத்தப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. எப்படி வெளியே செல்வது என்று புரியவில்லை. தியேட்டருக்குள் ஸ்டால் வைத்திருந்தவரிடம் விசாரித்தோம். சாவி வைத்திருந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும் படம் முடியும் போது தான் எழுந்து கதவை திறந்து விடுவார் என்றும் சொன்னார். எங்களுக்கு திகில் கூடியது. பாட்டிக்கு தெரிந்தால் தொலைந்தோம் என்ற பயம் அழுகையை வரவழைத்துக் கொண்டிருந்தது. 


"அண்ணே, வெளியே போகணும். எப்படி போவது ?" என்று அழுதுகொண்டே அவரிடம் கேட்டோம். "என்ன தம்பிகளா, வீட்டுக்கு தெரியாம வந்திங்களா ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர். நாங்கள் சத்தமாக அழத் துவங்கிவிட்டோம்.


"சரி, சரி..வாங்க என்கூட " என்று தியேட்டருக்கு பின் பகுதிக்கு கூட்டிப் போனார். அது கழிவறை அமைந்திருந்த பகுதி. திறந்த கழிவறை அது. நாற்றம் குடலைப் பிடுங்கியது. ஒரு சின்ன மதில்சுவர் தியேட்டருக்கு அருகே அமைந்திருந்த பேருந்து நிலையத்துக்கும் தியேட்டருக்கும் இடையே இருந்தது. இடுப்பில் கை வைத்து எங்களை ஒருவர் பின் ஒருவராக தூக்கி விட்டார். சுவரின் மேல்பகுதியை பிடித்துக் கொண்டு ஒரே ஜம்ப். மேலேறி பின்பு அங்கிருந்து பேருந்து நிலைய வளாகத்துக்குள் குதித்தோம். கை, கால்களில் சிறு, சிறு சிராய்ப்புகள்.

ஒருவாறு பதறியடித்து வீட்டுக்கு ஓடிவந்தோம். பிருந்தாவன நகருக்குள் நுழையும் போதே செல்லப்பா கண்டியர் வீட்டு நாய் குறைத்தது. வாசலில் பெஞ்சில் படுத்திருந்த அவர் "எவண்டா அவன் ?" என்று குரல் கொடுத்தார். மூச்சை பிடித்துக் கொண்டு ஒரே ஓட்டம். நைசாக சத்தம் எழுப்பாமல் கேட்டை திறந்து படுக்கையில் விழுந்தோம். 

தூக்கம் வரவில்லை. அதிகாலை எழுந்து நல்ல பிள்ளைகள் போல் படிக்கத் துவங்கினோம். இருவருக்கும் சூடாக காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தார் பாட்டி. திரு திரு வென்று விழித்தபடி குற்ற உணர்ச்சியுடன் காபியை வாங்கி பருகினோம்.


காப்பி குடித்த டம்ப்ளரை உள்ளே கொண்டு வைத்த போது பாட்டி கூறினார் "சினிமாவுக்கு போவதென்றால் முதல் ஷோவுக்கு போ. இரண்டாம் ஷோவுக்கு போய் சுவரேறி குதித்து கை கால் அடிபட்டு வந்து நிற்காதே என்றார். திகைத்துப் போய் நின்றேன். 


வாசலில் செல்லப்பா கண்டியருடன் தியேட்டரில் கடை வைத்திருப்பவர் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார். நடுங்கியபடி பாலு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

~

அதே செண்பகா தியேட்டரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமயம் வெளியிட்டிருந்த ரஜினி நடித்த "பில்லா" திரைப்படத்தை வரலாறு, புவியியல் தேர்வுக்கு முதல் நாள் இரண்டாம் ஆட்டம் பார்த்தோம்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வரலாறு புவியியலில் தான் நான் அதிகம் மதிப்பெண்கள் பெற்றேன்.

~





Comments