சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...!

சிட்டுக் குருவியும், சிலோன் வானொலியும் ...!






 விஜய் டி.வி.யில் ''எண்பதுகளின் இசை' குறித்து 'நீயா-நானா' வில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகியது. நிகழ்ச்சியைப் பார்த்த பலரைப்போல எனக்கும் எனது பதின் பருவ நினைவுகள் அலையடிக்கத்  துவங்கி அன்றிரவு தூக்கம் தொலைந்தது.

தூக்கம் தொலைத்த இரவின் விடியலில் பிருந்தாவன நகரின் பால்ய கால இளவல் சுரேஷ் குமார் அந்த பொற்கால இசையின் ஆனந்த அனுபவங்களை உங்கள் பாணியில் நீங்களும் எழுதுங்களேன் அண்ணா... என்று கூறியது தான் நீண்ட நாட்களாக எழுதாமல் வெறும் பார்வையாளராகவே இருந்து வந்த என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இசைக்கும், இசையை அணு அணுவாக அனுபவிக்கும் எனது இளவல் சுரேஷுக்கும்  முதல் வணக்கம்.    

எண்பதுகளிலும்  அதற்கு முன் எழுபதுகளின் பிற்பகுதிகளில் இருந்தும்   தான் இசையுடனான எனது தோழமை துளிர்விட்டு, மரமாகி பூத்துக் குலுங்கியது. அந்த மரம் இன்று ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்து நின்றாலும் 'வளர்பருவம்' - அதாவது நான் இசையுடன் வளர்ந்த அந்த பருவம் தான்  என்றும் மறக்கமுடியாத பசுமை நினைவுகள்  பலவற்றை இன்னமும் என் உள்ளத்துள் இருப்பு வைத்து விட்டு சென்றிருக்கிறது. 

எழுபதுகளின் பிற்பகுதியில் நான் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த போது தான் இசையும் என் உள்ளத்துக்குள் நுழையத் துவங்கியது.  நான் இசையை ரசிக்க துவங்கிய அந்த காலகட்டத்தில் தான் தமிழ்த் திரையுலகில் புயல் போல இளைய ராஜா நுழைந்தார். அவரின் இசைப்பயனத்துடன் நானும் இனைந்து கொண்டேன். அந்த இசையுடனான இணைவு இன்றுவரை தொடர்கிறது. 

ஆனால்  முதன் முதலில் என் இதயத்துக்குள் நுழைந்து நெஞ்சமெல்லாம் நிறைந்த பாடல் இளையராஜாவுடையது அல்ல. இளைய ராஜா ஆர்ப்பாட்டத்துடன் அன்னக்கிளியின் 'மச்சானை பார்த்தீங்களா' மூலம் திரையுலகிலும், ரசிகர்களின்  நெஞ்சங்களிலும் முதலடியை எடுத்து வைத்து பயணத்தை துவக்கியிருந்தாலும் ஏனோ அப்பாடல் என்னை வெகுவாக அந்த வயதில் கவரவில்லை. அதற்கு காரணம் ஒருவேளை பாரம்பரிய சங்கீதத்தை பெருவாரியாக கேட்டுக் கொண்டிருக்கும் குடும்ப பின்புலத்தில் இருந்து வந்ததினால் குத்து பாட்டு பாணி பாடல்களைக் கேட்பதில் ஈடுபாடு ஏற்படவில்லையோ என்னவோ..! அந்த பாடல் கவரவில்லையே தவிர அந்த படத்தின் பிற பாடல்களான 'சொந்தமில்லை, பந்தமில்லை' போன்ற பாடல்கள் என்னை முனுமுனுக்க வைத்த பாடகள்  தான்.

திரை இசையை எனது மனதுக்குள் இழுத்து வந்து அமரச்செய்த அந்த முதல் பாடல் ' ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது...' பாடல் தான். இந்த பாடல் அந்த காலகட்டத்தில் தினசரி குறைந்தது இரு வேறு நிகழ்ச்சிகளிலாவது கண்டிப்பாக இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்படும் ஒரு பாடல் ஆகியிருந்தது. இந்த பாடல் சிவகுமார் நடித்த 'மதன மாளிகை' என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். யேசுதாசும், சுசிலாவும், ஜி.கே. வெங்கடேஷும் மெல்ல அறிமுகமாகத் துவங்கினார்கள்.ஆம், இந்த படத்துக்கு இசை ஜி.கே. வெங்கடேஷ் என்று நான் நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். இணையத்துடனான எனது ஈடுபாடு ஏற்படத் துவக்கிய பின்னர் இந்த பாடலுக்கு இசை வெங்கடேஷ் இல்லை வேறொருவர் என்று அறிய நேர்ந்து அதிர்ச்சியானேன். அந்த வேறொருவர் வேறொரு பாணி பாடல்களுக்காக அகில இந்திய வானொலியில் மிகவும் பிரபலமாகியிருந்தவர்.  சேர்ந்திசை என்னும் அந்த வகை பாடல்கள் மதியம் பனிரெண்டேமுக்காளுக்கு ஒளிபரப்பப்படும் செய்திகளுக்கு பின்னர் சிறிது நேரம் ஒளிபரப்பப்படும்.  வித்தியாசமான மெட்டமைப்புகளில் பலர் சேர்ந்து பாடும் அந்த பாடல்களை பின்னர் நான் வெகுவாக ரசிக்கத் துவங்கியிருந்தேன். 'மதன மாளிகை' படத்துக்கு இசையமைத்தவரும் அவர் தான். 

அவர் தான் எம்.பி. ஸ்ரீநிவாசன்.

அதே படத்தில் மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல் எஸ்.பி.பி. பாடியது. 'ஒரு சின்ன பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது....'. இந்த பாடலில் வரும் வரிகளும் என் மனதின் அடியில் இன்னமும் தங்கி அவ்வப்பொழுது நானும் இருக்கிறேன் என்று வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். 

வேதம் என்பது வேறேதும் அல்ல 
தாயவள் கூறிய உபதேசம்.
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல 
அது தான் அன்னையின் மலர்ப்பாதம்....

அது தான் அன்னையின் மலர்ப்பாதம்.!




சிட்டுக்குருவியின் பிளாஷ் பேக் இன்னமும் தொடரும்....





Comments