அஞ்சலி - என் முன்னை நாள் ஹீரோ



பிந்தைய நாட்களில் புலிகள் மீதும் அதன் தலைவர் மீதுமான மதிப்பு வெகுவாக குறைந்து போனாலும், 

எண்பதுகளின் மத்தியில் லிபர்டி தியேட்டர் வாசலில் நடந்த வைகோ வின் கூட்டத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்ட புலிகளின் காலண்டர், போஸ்டர், விடுதலைப்புலிகள் செய்தி ஏடுகள் வாங்கியதையும், 

முகுந்தன் எங்கிற உமா மகேஸ்வரனை சைதாப்பேட்டையில் நேரில் பார்த்து வியந்து நின்றதையும், 

MGR புலிகளை ஆதரிக்கிறார் என்ற காரணத்தினாலேயே நானும் அவர்களை கண்முடித் தனமாக ஆதரித்ததையும், 

டைப் அடிக்க வந்த இலங்கை தமிழ்ப் பெண் அனுராவை ஒரு தலையாக காதலித்ததையும், 

சம்பந்தம் பேச வந்த என் மாமனார், வீட்டின் நடு ஹாலில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரனின் போஸ்டரைப் பார்த்து மிரண்டதையும், 

புலிகள் பற்றி செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்த The Week, India Today போன்ற ஆங்கில ஏடுகளை வீடு முழுக்க பரத்தி வைத்திருந்ததையும், 

நண்பர்களில் ஒருவரை மாத்தையா என்றும், மற்றொருவரை கிட்டு என்று அழைத்து மகிழ்ந்ததையும், நண்பர்கள் என்னை யோகி என்று அழைக்கும் போது புளகாங்கிதமடைந்ததையும், 

ஆரம்பகால சன் டிவியில் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி நடத்திய என் அறை நண்பன் ஆனந்த்துக்கு,  கீதன் என்னும் புலியின் நினைவாக ஆனந்த கீதன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததையும்....

இன்று நினைத்துப் பார்க்கும் போது நானும், அவர்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கத் துவங்கிய காலத்தின் மாற்றத்தை எண்ணி வருந்தத் தான் வேண்டியிருக்கிறது.

எனது இளமைக்கால ஹீரோவின் பிறந்த நாள் இன்று.

சோகத்துடன் நினைவுகளை அசை போட்டுக் கொண்டு நான்.....

😭

Comments