லைப்ரரி - திரை - எஸ்.எல். பைரப்பா

லைப்ரரி

திரை - பைரப்பா

~
மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் தான் முதன்முறையாக மாலிக் காபூர் ஒரு அலி என்று படித்தேன்.  இத்தகவலை அறிந்து வியப்படைந்தேன். வரலாற்று பாடநூல் புத்தகங்கள் எதிலும் இத்தகவல் வந்தது கிடையாது. 

நான் நினைத்த மாதிரியான 'அலி' அல்ல மாலிக் காபூர். போரில் தோற்று சிறை பிடிக்கப்பட்ட அழகான ராஜகுமாரன்,  சுய பாலின இன்பத்துக்காக முஸ்லிம் படையினரால்  நபும்சகனாக்கப்பட்டவன் என்று பின்னாளில் அவனைப் பற்றி மேலும் படித்து அதிர்ந்தேன். பக்தியார் கல்ஜியின் ஆசை நாயகன், கல்ஜி அவன் மேல் காதலாகி கசிந்துருகி இருந்திருக்கிறான் என்றெல்லாம் படிக்கும் போது ..... கருமம்டா சாமி.

சரி இந்த தகவல்கள் நிரம்பியுள்ள பரபரப்பான ஒரு புத்தகத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

~
 
பிரபல கன்னட எழுத்தாளர் பைரப்பா எழுதிய கன்னட நாவலான "ஆவரணா" வின் தமிழ் மொழிபெயர்ப்பாகிய "திரை" நாவலை  வாங்கி வைத்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகி இப்போது தான் படித்து முடித்தேன்.

அப்பப்பா.... என்ன ஒரு ஆக்ரோஷமான வீச்சு. தமிழில் படிக்கும்போதே அதன் தாக்கம் பலமாக இருக்கும்போது கன்னட மூலம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று நினைக்கும் போது வியப்பு மலைப்பாக இருக்கிறது.

நாவல் வெளிவந்த ஓராண்டிற்குள் முப்பது மறுபதிப்புகளைக் கண்டிருக்கிறது என்னும் தகவலே நாவலின் சிறப்பை படிப்பதற்கு முன்பே எடுத்துக் கூறி விடுகிறது.

கர்நாடக கிராமபுரத்தில் இருந்து கல்லூரி படிப்பு படிப்பதற்கு பெங்களூர் வந்து முற்போக்கு கருத்துகாளால் ஈர்க்கப்பட்டு, பேராசிரியர் சாஸ்த்ரி என்னும் தன் ஊரை சார்ந்த முற்போக்குவாதியின்  குழாமுக்குள் சேர்ந்து, உடன் படித்த  அமீரை காதலித்து, வீட்டை எதிர்த்து முஸ்லிமாகி ரசியா பேகமாக மாறிய லட்சுமியின் பார்வையில் விரிகிறது "திரை".

சிதைந்த விஜயநகர தலைநகரமாகிய ஹம்பியைப் பற்றிய ஆவண படத்தை மனைவி லட்சுமியுடன் சேர்ந்து தயாரிக்க ஹம்பிக்கு வருகிறான் அமீர். அங்கு தங்கியிருக்கும் நாட்களில் வரலாற்றின் மறைக்கப்பட்ட உண்மையான பக்கங்கள் ஓரளவு லட்சுமிக்கு தெரியத் துவங்க, வராற்றின் முகத்தை மூடியிருக்கும் திரையை விலக்கி முழு முகத்தையும் காணத் துடிக்கிறாள்.  

கொள்கை முரண்பாடுகளால் அமீருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அமீரை பிரிய நேர்கிறது. காலம் லட்சுமிக்கு இதுவரை அறிந்திராத புதிய பாதையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

தந்தையின் மரணம் அவளை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறது. தந்தை சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும், ஆவணங்களும், ஆழ்ந்து அவைகளைப் படித்து அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளும், வரலாற்றைப் பற்றிய தந்தையின் பரந்துபட்ட அறிவும்  லட்சுமிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சொந்த ஊரிலேயே தங்கி,  வாழ்நாள் முழுவதும் தந்தை உழைத்து, சேகரித்து வைத்திருந்த நூல்களையும் ஆவணங்களையும் முழுவதுமாக படித்து இதுவரை தான் நம்பி வந்த கருத்துருக்களும், கொள்கைகளும் எவ்வளவு தவறானவை மற்றும் கொடூரமானவை என்பதை உணர்ந்தறிகிறாள். 

இதற்கிடையே, பேராசிரியர் சாஸ்திரி போன்ற போலி அறிவுஜீவிகளின் நிஜ முகத்தின் கோர ரூபமும், வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு செல்லும் லட்சுமியின்  மகன் வஹாபிய சிந்தனைகளின் தாக்கத்தில் தீவிர மதவாதியாக மாறுவதும், அமீர்  லட்சுமிக்கு "தலாக்" சொல்லாமலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பெண்ணுரிமை பேசித் திரிவதும் இன்றைய யதார்த்தத்தின் கேவல நிலையை காட்டுகிறது.
~
கதைக்குள் விரியும் வரலாற்றுப் பகுதியில்  வரும் ராஜபுத்திர இளவரசன்,  போரில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டு அடிமை ஆக்கப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும், தன்பாலின  வல்லுறவுக்கு அவன் ஆட்படுவதும், ஆடு, மாடுகள் போல் அவன் பணத்துக்கு கைமாற்றப்படுவதும், கடைசியில் நபும்சகனாக ஆக்கப்பட்டு அரண்மனை அந்தப்புரத்தில் அடிமை வேலைக்காரனாக ஆக்கப்படுவதும், இஸ்லாமிய சகோதரத்துவத்தின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டுகிறது.  சிறைபிடிக்கப்பட்ட அரசகுல பெண்கள் அடிமை விபச்சாரிகளாக நடத்தப்பட்ட  கேவலம் ராஜபுத்திர இன பெண்கள் தீக்குளித்ததன் நியாயத்தை பறை சாற்றுகிறது. 

விலக்கப்பட்ட திரைக்குள் தெரியும் வரலாற்றின் கோர முகம் நெஞ்சை பதைக்க செய்கிறது.  நூலின்  பின்னிணைப்பாக பைரப்பா வழங்கியிருக்கும் நூல்கள் மற்றும் ஆவணங்களின் பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 

மனிதர் (பைரப்பா) என்னமா உழைத்திருக்கிறார். தமிழில் இதுபோன்ற நாவல்கள் இப்போது இருக்கும் ஒருவராலும் எழுத முடியாது என்பது சத்தியமான உண்மை.

கன்னட இலக்கியம் தொடும் உயரங்களின் பரிமாணங்கள் வியக்க வைக்கிறது. இது போன்றதொரு நிலை தமிழுக்கு எப்போது வரும் என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் கனமாக படிந்து கொண்டே வருகிறது. 

வரலாற்றை அதன் உண்மையான முகத்துடன் காண விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் "திரை".
~

Comments