பயணம் - கூர்க் - பொருளாதாரம்
பயணம்
கூர்க் - பொருளாதாரம்
“Traveling – it leaves you speechless, then turns you into a storyteller.”
Ibn Battuta
கூர்க்
பொருளாதாரம்
கூர்க் ஒரு மலை மாவட்டம் ஆகும். கூர்கின் பொருளாதாரமும் இந்தியாவின் இதர மலை பிரதேசங்களின் பொருளாதாரத்தை போல விவசாயத்தையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.
கூர்கில் விவசாயம் என்பது தோட்ட பயிர்கள் சாகுபடி தான். தோட்ட பயிர்கள் சாகுபடியில் முதன்மை இடத்தில் இருப்பது காபி பயிரிடுதல் தான். காபிக்கு அடுத்தபடியாக மிளகு, ஏலக்காய் போன்ற தோட்ட பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த காபி உற்பத்தியில் 30-40 சதவீதம் கூர்கில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
காபி பற்றிய புராணத்தை தனியே பின்னர் பார்க்கலாம்.
கூர்க் பிராந்தியம் பெருமளவு மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியிலேயே அமைந்திருப்பதால் சமவெளி பூமி மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. இருக்கும் குறைந்த அளவிலான சமவெளியில் நெற்பயிர் ஆண்டுக்கு ஒரு போகம் சாகுபடி செய்யப்படுகிறது.
காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களுக்கு நடுவே ஆரஞ் மற்றும் வாழை மரங்களும் வளர்க்கப்படுகின்றன.
தேனீ வளர்ப்பதும், தேன் எடுப்பதும் மற்றுமொரு முக்கியமான தொழில். இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யப்படுவது கூர்கில் தான். ஆண்டொன்றுக்கு சராசரியாக ஆறு டன்னுக்கு அதிகமான தேன் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஹனி வேலி எஸ்ட்டேட் மட்டுமே கிடடத்தட்ட 3 டன் தேன்
உற்பத்தி செய்வதாக கூறுகிறார்கள்.
சுவையிலும், தரத்திலும் கூட இந்தியாவின் நம்பர் 1 கூர்க் தேன் தான்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக கூர்கின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிப்பது சுற்றுலா ஆகும். தென்மேற்கு பருவ மழை காலங்களை தவிர ஏனைய மாதங்கள் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் கூர்க் நிரம்பி வழியும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கூர்கில் உள்ள முக்கிய நகரங்களான மடிக்கேரி, விராஜ்பேட், சோமவார்பேட் ஆகிய நகரங்களிலும், புறநகர் பகுதிகளிலும், இயற்கை எழில் சூழ்ந்த இதர பகுதிகளிலும்,ஏகப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதிகளும், ரிஸார்டுகளும், லாட்ஜ்களும், ஹோம் ஸ்டே எனப்படும் வீட்டோடு தங்கும் வசதிகளும் இருக்கின்றன.
விவசாயம் மற்றும் சுற்றுலா தவிர காடுகளில் வளர்ந்துள்ள மரங்களும் கூர்கின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. ரோஸ்வுட், சில்வர் ஓக், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் வளர்ந்துள்ள அடர்ந்த காடுகள் கூர்கில் ஏராளம். வனத்துறையின் அனுமதி பெற்று வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு, மரம் அறுக்கும் ஆலைகள் மூலம் தேவைப்படும் அளவுகளில் அவை அறுக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டம் தான் தனி நபர் வருமானம் மிகுந்து காணப்படும் மாவட்டமாக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
குடகு மக்கள் வீரம் மிக்கவர்கள் என்று கூர்கின் வரலாற்றில் பார்த்துள்ளோம். அதற்கேற்ப இன்றும் பெரும் எண்ணிக்கையிலான குடவர்கள் இந்திய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றுகிறார்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினரும் எஸ்ட்டேட் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மலைப்பாதைகளில் லாவகமாக ஜீப் ஒட்டிக்கொண்டு மிடுக்காக எஸ்ட்டேட்டை சுற்றி சுற்றி வந்து விவசாயம் பார்க்கும் முன்னாள் ராணுவத்தினர் பலரை கூர்கில் நான் சந்தித்தேன்.
இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல், கமாண்டர் இன் சீப் ஜெனரல் கே.எம்.கரியப்பா, ஜெனரல் கே.எஸ். திம்மய்யா, ஸ்குவாட்ரன் லீடர் ஜெனெரல் ஏ.பி. தேவையா, லெப்டினென்ட் ஜெனெரல் ஐயப்பா, ஏர் மார்ஷல் சுப்பையா போன்ற ராணுவத்தின் முக்கியமான தளகர்த்தர்கள் பலர் கூர்க் பிராந்தியத்தை சேர்ந்தவர்களே. இவ்வீரர்கள் இளைய தலைமுறை குடகர்களுக்கு உந்து சக்தியாக இருந்து, கூர்க் வீரத்தின் விளைநிலம் என்ற பெயரை இன்னமும் வரலாற்றில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Comments
Post a Comment