வரலாறு - காஃபி
காஃபி
சுண்டியிழுக்கும் நறுமணம். கிறங்கடிக்கும் சுவை. உள்ளிருக்கும் நாடி நரம்புகளில் மடைதிறந்து சட்டெனப் பாயும் உற்சாக வெள்ளம் என மனிதகுலத்தின் முக்கால்வாசி பேர் #காபிக்கு அடிமை.
நானும் கூட.
~
காஃபியைப் பற்றி பேசும்போது கூர்க் கை பற்றி கண்டிப்பாக பேசாமல் இருக்க முடியாது. இந்தியாவில் உற்பத்தியாகும் காஃபியில் சரிபாதி சதவீதம் குடகு மலைகளில் தான் விளைகிறது.
காஃபி வந்த கதை :
ஏழாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் மலை கிராமம் ஒன்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கல்டி என்னும் இடையன் ஒருவன் மலை சரிவில் வளர்ந்திருந்த செடிகளின் பழங்களை தின்ற தனது ஆடுகள் உட்சபட்ச உற்சாகத்தில் துள்ளி குத்தித்துக் கொண்டிருந்ததையும், இரவு நேரங்களில் கூட அவைகளின் உற்சாகம் குறையாமல் இருந்ததையும் பார்த்து வியந்தான்.
மறுநாள் அந்த செடியின் பழங்களை தானும் சாப்பிட்டு பார்த்தான்.
அதன் சுவையும், புத்துணர்வூட்டும் தன்மையையும் அறிந்து பிரமித்தான்.
அருகில் இருந்த துறவி ஒருவரிடம் அந்த பழத்தை கொடுக்க அவர் அதை நெருப்பில் போட்டார்.
நெருப்பில் எரிந்து கருகிய கொட்டையை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்த அதனால் துறவிக்கு உற்சாகமும் புத்துணர்வும் கிட்டியது.
அந்த துறவி அந்த புதுவித பானத்தை அதிசய மருந்தாக மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
ஆக, கல்டி தான் காஃபியை உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தவன்.
~
எத்தியோப்பியாவில் கொஞ்சம் கொஞ்சமாகிய பிரபலமாகிய காஃபி அங்கிருந்து எகிப்துக்கும், ஏமனுக்கும் இதர அரபு நாடுகளுக்கும் பரவியது. அரபு வணிகர்களின் மூலம் ஐரோப்பியாவுக்கு பயணம் செய்தது.
காபியின் சுவைக்கு அடிமையாகிய ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள் இந்த செடியை ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்து வந்து தங்களின் காலனியாக இருந்த ஜாவாவில் பயிரிட தொடங்கினர். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு காஃபியை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர். காஃபி வணிக பயிராக மாறியது. உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.
காஃபி இந்தியாவுக்கு வந்த கதை :
17ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த சுஃபி துறவி ஒருவர் ஹஜ் பயணத்துக்காக மெக்கா சென்றார். அங்கு அரபியர்கள் ஏதோ ஒரு விதையை வறுத்து பொடி செய்து நீரில் கலந்து அருந்துவதை கவனித்தார். குடித்தும் பார்த்தார். அதன் சுவையும், அருந்தியபின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் புத்துணர்வினையும் அறிந்து அதை இந்தியா எடுத்து செல்ல முயன்றார்.
காஃபி வணிகத்தை கையில் வைத்திருந்த அரபுக்காரர்கள் அந்த துறவி இந்தியாவுக்கு காஃபி விதைகளை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல் வறுக்கப்படாத ஏழு காஃபி விதைகளை மட்டும் இந்தியாவுக்கு எடுத்து வந்துவிட்டார் அந்த துறவி. அவற்றை அவரின் வசிப்பிடமாகிய கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் விதைத்தார்.
அந்த ஏழு விதைகளே இன்று மாபெரும் காஃபி தோட்டங்களாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.
~
இன்றைய தேதியில் உலகலளவில் சுமார் 80 நாடுகளில் காஃபி பயிரிடப்படுகிறது. பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தான் முன்னணி காஃபி உற்பத்தி செய்யும் நாடுகள்.
ஆண்டுதோறும் மூன்று லடசம் டன் காஃபி உற்பத்தி செய்யும் இந்தியா தான் காபி உற்பத்தியில் உலகளவில் ஐந்தாவது பெரிய நாடு.
காஃபி யை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் :
மெக்காவில் கிபி 1511 வாக்கில் இந்தப் பானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணம் அதன் உற்சாகப்படுத்தும் தன்மை.
அதேபோல் 1532 வில் எகிப்திய மன்னரும் காபிக்கு தடை விதித்தார்.
இந்தக் கால கட்டத்தில் தான் காஃபி மெதுவாக இத்தாலி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தலை காட்டத்தொடங்கியது.
ஆரம்ப காலங்களில் எதியோப்பியாவின் தேவாலயங்கள் காபியை ஒரு முஸ்லீம் பானம் என்று கருதி தடை செய்தன.
1660ன் தொடக்கத்தில் லண்டனில் உள்ள காபி கிளப்புகள் சமூக கலாச்சார அமைப்புக்களாக அரும்பத்தொடங்கின. இங்கே முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. கலை சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அங்குள்ள இந்தியன் காஃபி ஹவுசில் முக்கியமான அரசியல் நிகழ்வுகளும், விடுதலை போராட்ட வீரர்களின் சந்திப்புகளும் அடிக்கடி நடைபெற்றன.
உலகப் போர் காலத்தில் காபியின் விலை உயர்ந்த காரணத்தால், சிக்கரி கலந்து காபி குடிக்கும் பழக்கம் உருவானது.
சிக்கரி எனப்படும் தாவரம் பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. காபி செடியின் வேரில் இருந்தே சிக்கரி பொடி தயாரிக்கிறார்கள். சிக்கரியில் காஃபீன் கிடையாது. அதை காபியுடன் கலந்தால், வாசனை தூக்கி நிற்கும். அதனால் சிக்கரி கலந்த காபியை பலரும் விரும்புகின்றனர்.
எஸ்ப்ரசோ (Espresso), எஸ்ப்ரசோ மாச்சியாடோ( (Espresso Macchiato), காப்பசீனோ (Cappuccino), காபி லட்டே (Cafe Latte), மோக்கசினோ (Mocha chino), அமெரிக்கானோ (America-no), ஐரிஷ் காபி (Irish coffee), இந்தியன் பில்டர் காபி (Indian Filter coffee), டர்கிஷ் காபி (Turkish coffee), வெள்ளை காபி (White coffee) என பல சுவைகளில் காபி கிடைக்கின்றன.
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் சவுத் இந்தியன் பில்டர் காபி இப்பொழுது உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. காய்ந்த காபி பொடியில் வெந்நீர் கலப்பதன் மூலம் கிடைக்கும் டிகாசனில் பால் கலந்து தயாரிக்கப்படுக்கின்றது. இது எல்லா வகை காபிக்களை காட்டிலும் சுவையாக இருக்கும்.
எண்ணெய் உற்பத்திக்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது மிகப் பெரும் வர்த்தக தயாரிப்பு இப்போது காஃபி தான்.
உலகெங்கும் அருந்தப்படும் மொத்த குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு காஃபி உலக மக்களால் அருந்தப்படுகிறது.
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் காஃபி அருந்துபவர்கள் அமெரிக்கர்கள். ஆண்டிற்கு 250 கோடி ரூபாயை காபி குடிப்பதற்காக செலவு செய்கின்றனர்.
அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக, பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாட்டினர் காபி விரும்பிகளாக உள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்டார் பக்ஸ் காபி ஷாப் தான் உலகத்தின் நம்பர் 1 காபிஷாப். இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 68 நாடுகளில் 25 ஆயிரம் ‘ஸ்டார் பக்ஸ்’ காபி ஷாப்கள் உண்டு. இதன் ஆண்டு விற்பனை19 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில்128 கோடி.
காபி குடிப்பதால் அல்சைமர், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவற்றை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
~



Comments
Post a Comment